சுடச்சுட

  

  திருப்பாவை முதல் பாசுரமான மார்கழித் திங்களில் ஆண்டாள் நாச்சியார் "நேர் இழையீர்' என்றும், "செல்வச் சிறுமீர்காள்' என்றும் சிறுமிகளை விளிப்பதைக் காண்கிறோம். நேர் இழையீர் என்றால், நன்றாக ஆபரணங்களைப் பூண்டவர்கள்... இவர்களைச் செல்வச் சிறுமீர்காள் என்று அழைப்பதற்கு இதுதான் காரணமோ?

  ÷ஆண்டாள் கண்ணனைச் சென்று கைங்கர்யத்துக்காக, அவன் உகப்புக்காக., அவனை அணுகினாள்! அப்படி, கண்ணன் உகப்பில் நோக்கும், கைங்கர்யமும், கோதையின் குறிக்கோளாகக் காணுங்கால், இவ்வுலக இயல்பில் செப்பும் செல்வம், ஆண்டாள் இயம்பி இருப்பாளா என்பது கேள்விக்குறியது. அப்போது, "செல்வச் சிறுமீர்காள்' என்று அழைத்ததன் பொருள்தான் என்ன?

  ÷இதற்கு நாம் இராமாயணத்திலும், விஷ்ணு தர்மத்திலும்தான் விடைதேட வேண்டும் என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமானாரும் நமக்கு வழி காட்டுகின்றனர்.

  ÷இருவர், தம் மாளிகைச் செல்வத்தையும், அரசு போகங்களையும் விட்டு, ராமனை நாடி வருகின்றனர். முதலில் இளைய பெருமாளான இலக்குமணன், மரவுரி தரித்து, ராமனுக்கு முன்னமே வனம்போகத் தயாராக நிற்கிறான். இங்கு வால்மீகி மிக அற்புதமாக ஒரு  சொல் இடுகிறார். ""லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பன்ன:''  என்று அவனுக்கு அடைமொழி கொடுத்து இலக்குமணனைச் சிறப்பிக்கிறார். இதற்கு என்ன பொருள்? இலக்குமணன் லட்சுமிகரமாக இருப்பதாக வால்மீகி வரைகிறார். என்ன விந்தை! எல்லா செல்வத்தையும் துறந்து, நாட்டையும் துறந்து காட்டிற்குச் செல்ல சித்தமாக, இளவரசனின் ஆடையினின்றும் மாறுபட்டு, மரவுரி தரித்த கோலம்! இங்கு ""காட்சி மைவாய களிறொழிந்து தேரொழிந்து, மாவொழிந்து'' என்றாரே குலசேகர ஆழ்வார்! இதையா வால்மீகி லட்சுமிகரம் என்பது?

   போர்க்கோலம் பூண்டிருக்கிறது இலங்கை. ராவணனின் அரசவை. வீடணன், ராவணனுக்கு அன்புடன் அறிவுரை எடுத்துக் கூறும் காட்சி.

  ÷நால்வருடன் விபீடணன், கடல் மார்க்கமாக மேலே ராமனை வந்தடைகிறான். ""அந்தரிக்ஷகத  ஸ்ரீமான்''  என்று வால்மீகி இவனுக்கு "ஸ்ரீமான்' என்று ஏற்றமாக அடைமொழி இடுகிறார். அதாவது, இலக்குமணனைப் போல், இவனும், அரச போகங்களையும், ராஜவாழ்க்கையையும் துறந்து வரும் காட்சி - இதற்கு - ஸ்ரீமான் என்பதா?

  விஷ்ணு தர்மத்திலிருந்து  பார்க்குங்கால்:
  ÷கஜேந்திர ஆழ்வானான யானை, முதலை வாயில் அகப்பட்டுக் கொள்ளுகையில், எம்பெருமானுக்கு கைங்கர்யம் பண்ண வேண்டும் என்று பேரவா! தொழும் காதல் களிறு என்பாரே, நம்மாழ்வாரும். அங்கு "ஸதுனாகவர ஸ்ரீமான்' என்று விளி. இந்த யானை என்ன பெரும் செல்வமுடைய யானையா? எதற்கு "ஸ்ரீமான்' என்று கூற வேண்டும்?

  செல்வந்தன் யார்?
  இளைய பெருமாளான இலக்குமணன், விபீடணன், கஜேந்திராழ்வான், இவர்கள் யாவருக்கும் செல்வம் இல்லையாயினும், ஸ்ரீமான் என்பதற்குக் காரணம்தான் என்ன? இவர்கள் வைத்திருந்த ஒப்பற்ற செல்வம், தொலையாத செல்வம், தீராத செல்வம், மங்காத செல்வம், எம்பெருமானுடைய சம்பந்தம்.

  நிலை நில்லா செல்வமான உலக வழக்கில் வரும் செல்வத்தைவிட இது சாலச் சிறந்தது.

  ÷இதைத்தான் ஆண்டாள் நாச்சியாரும் மனதில் கொண்டு, "செல்வச் சிறுமீர்காள்' என்று அன்புடன் அழைகிறாள். இவர்கள் கண்ணனை அடைந்து அவனுடன் எப்போதும் இருக்கப் போகிறார்கள் அல்லவா? அந்தச் சிறப்பு. இது மட்டுமல்ல, 12-ஆவது பாசுரமான, "கனைத்திளம்' பாட்டில், "நற்செல்வன் தங்காய்' என்று கண்ணனுடன் எப்போதும் இருக்கும் ஒரு கோபனை, "நற்செல்வன்' என்று கொண்டாடுகிறாள். ஆக, செல்வம் என்பது, எம்பெருமானிடம் எப்போதும் சம்பந்தம் கொண்டு இருப்பது என்று அறிகிறோம்.

  ÷இந்த செல்வச் சிறுமீர்காள் போல் இம் மார்கழி நன்நாளில் நாமும் இச்செல்வத்தைப் பெற விழைவோம்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai