"புரட்சிக் கவிஞர்' இட்ட விதை - வாணிதாசன்!

இயற்கையைக் கவிதை வழியாகக் கண்டடைந்தவர் வாணிதாசன். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த வில்லியனூரில் 1915-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் திருக்காமு - தாயார் துளசியம்மாள். "திருக்காமு'
"புரட்சிக் கவிஞர்' இட்ட விதை - வாணிதாசன்!

இயற்கையைக் கவிதை வழியாகக் கண்டடைந்தவர் வாணிதாசன். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த வில்லியனூரில் 1915-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் திருக்காமு - தாயார் துளசியம்மாள். "திருக்காமு' என்ற பெயர் வில்லியனூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானின் திருப்பெயர். பெற்றோர் வைத்த பெயர் ரங்கசாமி. இது வாணிதாசனின் தந்தைவழிப் பாட்டனாரின் பெயர். பாட்டனார் பிரெஞ்சு அரசில் மேயராக இருந்தவர். செல்வமும் செல்வாக்கும் மிக்கக் குடும்பம் வாணிதாசனுடையது.

ரங்கசாமி என்பது பாட்டனாரின் பெயராக இருந்ததால், குடும்பத்தில் உள்ளவர்கள் ரங்கசாமி என்று பெயர்சொல்லி அழைக்கத் தயங்கினர். இதனால் தாங்கள் சார்ந்த வைணவ மரபுப்படி "எதிராசலு' என்று வாணிதாசனை அழைத்தனர். இவருக்குப் பிறகு ஏழு ஆண்டு கழித்து துளசியம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், குழந்தை பிறந்த சில மாதங்களில் துளசியம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டார்.

வருவாய்த்துறையில் பணியாற்றிய வாணிதாசனின் தந்தை திருக்காமு, தாயில்லாத அந்த இரு குழந்தைகளை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்தார். உறவினர்களின் வற்புறுத்தலால், துளசியம்மாள் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நெருங்கிய உறவினரின் மகளான செல்லம்மாவை மறுமணம் புரிந்துகொண்டார்.

பள்ளிப்பருவம் எய்திய வாணிதாசன் இரண்டு ஆண்டுகள் திண்ணைக் கல்வி கற்றார். பிறகு 1924-ஆம் ஆண்டிலிருந்து வில்லியனூரில் இருந்த மையப் பள்ளியில் சேர்ந்து படித்தார். தமிழும் பிரெஞ்சும் பள்ளியில் அவருக்குக் கற்றுத் தரப்பட்டன. வாணிதாசன், தன்னுடைய நான்காம் வகுப்பில் பாவேந்தர் பாரதிதாசனைத் தமிழாசிரியராகப் பெற்றார். தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட வாணிதாசனுக்கு தமிழின் மீது ஆர்வம்வர பாரதிதாசனே காரணமாக இருந்தார். பள்ளிப்படிப்பை அடுத்து 1932-ஆம் ஆண்டு புதுச்சேரியில் இருந்த கலவைக் கல்லூரியில் சேர்ந்து கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார். அடுத்து தமிழாசிரியர் பணிக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று 1937-ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பணியேற்றார்.

பாரதிதாசனிடம் கற்ற தமிழ் வாணிதாசனை கவிதை எழுதத் தூண்டியது. பாரதி நினைவு நாளையொட்டி இவர் எழுதிய கவிதை மதுரையிலிருந்து வெளிவந்த தமிழன் இதழில் 1938-ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்கவிதைக்காக "ரங்கசாமி' என்ற தன்னுடைய பெயரைச் சுருக்கி "ரமி' என்று புனைபெயராக்கினார். இப்புனைபெயர் பிடிக்காத "தமிழன்' இதழாசிரியர் "வாணிதாசன்' என்ற புனைபெயரில் எழுதும்படி கேட்டுக்கொண்டார்.

பாரதிதாசனைப் போன்று வாணிதாசன் என்ற பெயரும் இருந்ததால், இப்பெயரிலேயே வாணிதாசன் தொடர்ந்து எழுதினார். தமிழன் இதழைத் தொடர்ந்து பொன்னி, காதல் முதலிய இதழ்களிலும் கவிதை எழுதினார். திராவிட இயக்கத்தின் முரசாக இருந்த வாணிதாசனின் கவிதைகளை முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் ஆகிய இதழ்கள் கேட்டு வாங்கிப் பிரசுரம் செய்தன. கவிதை எழுதியதோடு பிரெஞ்சு மொழிச் சிறுகதைகளையும் வாணிதாசன் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

1942 முதல் 1944 வரையான இரண்டாண்டுகள் பாரதிதாசனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு வாணிதாசனுக்கு ஏற்பட்டது. இப்பழக்கம் இவர் மேலும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ள உதவியது. "விதவைக்கொரு செய்தி' என்ற இவரது கவிதை, அறிஞர் அண்ணா நடத்திய "திராவிட நாடு' இதழின் அட்டையில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது.

1935-ஆம் ஆண்டு சிற்றன்னையின் அண்ணன் மகள் ஆதிலட்சுமியை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். திரைப்படப் பாடல் எழுத வந்த வாய்ப்பையெல்லாம் வாணிதாசன் மறுத்துவிட்டார். கவிதை எழுதுவதில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தினார்.

வாணிதாசனின் முதல் நூலாக "தமிழச்சி' எனும் குறுங்காவியமும், 1950-ஆம் ஆண்டு "கொடிமுல்லை'யும், 1952-ஆம் ஆண்டு "தொடுவானம்' என்ற நூலும் வெளிவந்தன. இசைப்பாடல்களின் தொகுப்பானத் தொடுவானம், வாணிதாசனின் இசை ஞானத்தை உலகறியச் செய்தது. இந்நூலுக்குத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஒரு சிற்றுரை வழங்கி, வாணிதாசனைப் பெருமைப்படுத்தினார்.

இவை தவிர, எண்பத்தெட்டு பாடல்கள் அடங்கிய வாணிதாசன் கவிதைகள் (1956), பொங்கல் பரிசு (1958), தீர்த்த யாத்திரை, இன்ப இலக்கியம், குழந்தை இலக்கியம் (1959), சிரித்த நுணா, இரவு வரவில்லை (1963), பாட்டு பிறக்குமடா (1963), இனிக்கும் பாட்டு (1965), எழில் விருத்தம் (1970), பாட்டரங்கப் பாடல்கள் (1972) என வாணிதாசனின் புத்தகங்கள் தொடர்ந்து வெளிவந்தன.

"ஆங்கில இலக்கியத்தின் வோர்ட்ஸ் வொர்த்' போலத் தமிழில் இயற்கையைப் பாடிய கவிஞரேறு வாணிதாசன், 1974-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி இயற்கை எய்தினார். இவருடைய கவிதைகள் உருது, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 34 ஆண்டுகள் இவர் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். தான் வாழ்ந்த வீட்டிற்குப் "புரட்சி அகம்' என்று பெயர் வைத்த வாணிதாசனைப் போற்றும் வகையில், புதுவை அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயரைச் சூட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com