தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

நாடகத் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். நாடகத் தமிழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய காரணத்தால், இவர் "நாடகத் தமிழின் தலைமையாசிரியர்' என்றே போற்றப்படுகிறார். நாடகக் கலைக்கு முதன் முதலில் புத்துயிர் ஊட்டியவரும் இவரே!

நாடகத் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். நாடகத் தமிழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய காரணத்தால், இவர் "நாடகத் தமிழின் தலைமையாசிரியர்' என்றே போற்றப்படுகிறார். நாடகக் கலைக்கு முதன் முதலில் புத்துயிர் ஊட்டியவரும் இவரே!

1867-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் தாமோதரன். சுவாமிகளின் தந்தை ஒரு கலைஞராக இருந்ததால், தன் மகனுக்கு இலக்கிய-இலக்கண அறிவைத் தூண்டி தொடக்ககால மொழியறிவைக் கற்பித்தார்.

சங்க இலக்கியங்களையும், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் மற்றும் நீதி நூல்கள் போன்றவற்றையும் தண்டபாணி சுவாமிகளிடம் கற்றுத் தேர்ந்தார் சங்கரதாஸ் சுவாமிகள். மேலும் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இசையுடன் பாடல் எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றதற்குக் காரணம், அவருடைய ஆசிரியர் தண்டபாணி சுவாமிகள்தான்.

அக்காலத்தில் ராமுடு ஐயர், கல்யாண ராமையர் ஆகிய இருவர் நடத்திவந்த நாடகக் கம்பெனியில் சங்கரதாஸ் நடிகராகச் சேர்ந்து சனீஸ்வரன், எமதருமன், இரணியன், ராவணன் போன்ற அச்சம் தரக்கூடிய பாத்திரங்களையே பெரும்பாலும் ஏற்று நடித்தார்.

ஒருமுறை சனீஸ்வரனாக ஒப்பனை செய்துகொண்டு நடித்த சங்கரதாஸ், அதிகாலை பொழுதில் அந்த வேடத்தைக் கலைப்பதற்காக ஆற்றுக்குச் சென்றார். அங்கே துணி துவைத்துக் கொண்டிருந்த கருவுற்றிருந்த பெண் ஒருத்தி அவரது உருவத்தைக் கண்டதும் பயந்துபோய் மயங்கி வீழ்ந்து விட்டாள். மயங்கி விழுந்தவளின் உயிரும் பிரிந்துவிட்டது. தனது வேடம் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்ததைக் கண்டு மனம் நொந்த சங்கரதாஸ், அது முதற்கொண்டு நடிப்பதை விட்டுவிட்டு நாடக ஆசிரியராக மாறினார்.

சுவாமிநாயுடு என்பவரின் நாடகக் கம்பெனியில்தான் சங்கரதாஸ் நீண்டகாலம் பணியாற்றினார். வண்ணை இந்து வினோத சபாவுக்காகவும், நாடகங்கள் எழுதினார். பிறகு, "சமரச சன்மார்க்க சபை' எனும் நாடகக் குழுவை 1910-இல் தொடங்கினார். ஆனால், சிலகாலம் கழித்து புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் இசை கற்கச் சென்றதால் அக் கம்பெனியை சங்கரதாஸ் விடநேர்ந்தது.

சங்கரதாஸ் சுவாமிகளால் 1918-இல் மதுரையில் தொடங்கப்பட்ட "தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா' தான் சங்கரதாஸின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர்ந்தது. முழுக்க முழுக்க இளம் சிறுவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்குழுவில்தான் ஒரு நாடகத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் சங்கரதாஸ் ஏற்றுச் செயல்பட்டார். இச் சபைக்குப் பிறகுதான் தமிழ் நாட்டில் பல பாலர் சபாக்கள் தொடங்கப்பட்டன. இந்தச் சபைகளில் பயிற்சி பெற்றவர்களே பிற்காலத்தில் சிறந்த நடிகர்களாகவும், நாடக ஆசிரியர்களாகவும், திரைத்துறையில் இடம் பெற்றார்கள்.

"தவத்திரு' எனும் அடைமொழிக்குப் பொருத்தமாக சங்கரதாஸ் சுவாமிகள் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை.

சுவாமிகளின் நாடகங்களை புராண நாடகங்கள், இலக்கியம் தழுவிய நாடகங்கள், வரலாறு தழுவிய நாடகங்கள், சமய நாடகங்கள், கற்பனை நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் என ஆய்வாளர்கள் பகுத்துக் கூறுவர்.

வள்ளித் திருமணம், சதி அனுசூயா, சாரங்க

தாரா, அபிமன்யு சுந்தரி, லவகுசா, சதி சுலோசனா, ஞான செüந்தரி போன்ற நாடகங்கள் இன்றும் - என்றும் மனதில் நிற்பவை.

சுவாமிகளின் நாடகங்கள் நல்ல அறிவுரைகளை மக்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வழங்கின. மேலும் அவை தொன்மை சார்ந்த புராணங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் வெளிப்படுத்தின. சங்கரதாஸ் சுவாமிகளால் எழுதப்பட்ட ஐம்பது நாடகங்களுள் பதினான்கு

மட்டுமே அச்சில் வெளிவந்

துள்ளன.

சங்கரதாஸ் சுவாமிகள், புதுவையில் தங்கியிருந்தபோது 1922-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி இவ்வுல வாழ்வை நீத்தார்.

தற்போது புதுவையில் உள்ள அவரது சமாதி புதுவை அரசால் நன்கு பராமரிக்கப்பட்டு

வருகிறது.

மதுரை ஒப்பணக்காரத் தெருவில் "சங்கரதாஸ் கலை மன்றம்' என்று ஒரு மண்டபம் உள்ளது. இன்றும் அங்கே சிறப்பு நாடகங்கள் நடத்தும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சந்திக்கிறார்கள். சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அமைந்த நடிகர் சங்க அரங்கு "சங்கரதாஸ் கலை அரங்கம்' என்று பெயரிடப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக தென் மாவட்டங்களில் உள்ள நாடகம் நடத்தும் குழுக்கள் எல்லாம் இன்றும் தாங்கள் சுவாமிகளின் நாடகங்களையே நடத்துவதாகக் கூறுவது அவருக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

நாடகத் தமிழுக்காக தன் வாழ்நாளையே வழங்கி மகிழ்ந்த தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளில் (நவ.13) அவரது தமிழ் நாடகப் பணியை நினைவுகூர்ந்து போற்றுவதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com