சுடச்சுட

  

  "பாடிப் பறந்த குயில்' கே.சி.எஸ்.அருணாசலம்!

  By திருப்பூர் கிருஷ்ணன்  |   Published on : 28th October 2012 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பார்ப்பதற்கு வெள்ளை வெளேர் என்றிருப்பார் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம். அவர் உடல் நிறம் மட்டுமல்ல, மனமும் அப்படியொரு வெள்ளை. சூதுவாது அறியாதவர். பொதுவுடைமைச் சிந்தனைகள் கொண்ட புரட்சிக்காரர். பழகுவதற்கு இனிய பண்பாளர்.

  மூக்கில் போடும் அணிகலனான மூக்குத்தியை தமிழ்க் கவிதை ரசிகர்களின் காதில் போட்டு அழகு பார்த்தவர், ""சின்னச் சின்ன மூக்குத்தியாம் சிகப்புக் கல்லு மூக்குத்தியாம், கன்னிப் பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்'' என்ற புகழ்பெற்ற திரைப்பாடல் அவர் எழுதியதுதான். "பாதை தெரியுது பார்' என்ற திரைப்படத்தில், பாரதி அன்பரான எம்.பி. சீனிவாசன் இசையில், டி.எம். சௌந்தரராஜனின் இனிய குரலோடு கூடிய திருத்தமான உச்சரிப்பில் ஒலித்த காலத்தை வென்ற பாடல் அது.

  ÷""வெற்றிலை போட்டு உன் வாய் சிவக்கும்; முகம் வெட்கத்தினாலே சிவந்திருக்கும்; உழைத்துன் மேனி கறுத்திருக்கும்'' என்று வளரும் அந்தப் பாடல் வரிகளில் உழைக்கும் பெண்ணின் வியர்வை பற்றிக்கூட அழகுணர்ச்சியோடு எழுதியவர் அவர்.

  வாழ்நாள் முழுவதும் உழைப்பாளர்களின் கவிஞராகவே வாழ்ந்தார். அவர் எழுதிய கவிதைகள் பல, நாட்டுப்புற மெட்டுகளில் அமைந்தவை. திரைப்பாடல் துறையில் அவர் தொடர்ந்து முயற்சி செய்யவும் இல்லை; அதில் அவருக்கு நாட்டமும் இருக்கவில்லை.

  "சோவியத் நாடு' பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய பலர் நவீன இலக்கியத்திற்குப் பெருந்தொண்டு புரிந்திருக்கிறார்கள். அவ்வரிசையில் தொ.மு.சி. ரகுநாதன், "சரஸ்வதி' இதழ் ஆசிரியர் வ. விஜயபாஸ்கரன், தற்போது நெல்லையில் வாழும் முதுபெரும் விமர்சகர் தி.க.சிவசங்கரன் போன்றோரோடு இணைத்து எண்ணப்பட வேண்டிய இன்னொரு பெயர் இவருடையது. சுமார் 20 ஆண்டுகள் "தாமரை' இதழில் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.

  ÷ஒருவகையில் பார்த்தால் இந்தப் பொதுவுடைமைவாதி, தமிழ் இலக்கிய உலகிற்குப் பூர்விக சொத்துடன் வந்தவர் என்று சொல்லலாம். அதாவது, இவரது முதல் சிறுகதைத் தொகுதியின் தலைப்பு "பூர்விக சொத்து'!

  ஆனால், பின்னாளில் சிறுகதை, கட்டுரை வடிவங்களைவிடக் கவிதை வடிவமே இவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. நிறைய கவிதைகள் எழுதலானார். "கவிதை என் கைவாள்' என்னும் இவரது மரபுக் கவிதைத் தொகுதி பலரது கவனத்தைக் கவர்ந்தது. தமிழ்க் கவிதைத் துறையில் தடம் பதித்த தொகுதி அது. தொடர்ந்து "பாட்டு வராத குயில்' உள்ளிட்ட பல அருமையான கவிதைகளைப் படைத்தார். (நன்றாகப் பாடும் குயில், சமூகச் சூழ்நிலை காரணமாகப் பாட முடியாமல் தவிப்பதாக இவர் எழுதியுள்ள அந்தக் கவிதையில் இவர் தன்னையேதான் உருவகமாகக் "குயில்' எனக் குறிப்பிட்டுக் கொண்டுள்ளார்).

  புதுக்கவிதையைக் கட்டோடு வெறுத்தவர்கள், முற்றிலும் ஒப்புக்கொள்ளாதிருந்தவர்கள் என்று தமிழில் சிலர் உண்டு. அவர்களுள் எஸ். நல்லபெருமாள் போல, இவரும் இன்னொருவர். மரபுக் கவிதையை மட்டுமே ஆதரித்து அதை மட்டுமே எழுதிவந்த இவரை, இவர் வாழ்நாள் முழுவதும் ஏராளமான புதுக்கவிதை எழுதும் இளைஞர்கள் நட்போடு சுற்றி வந்தார்கள். யாரிடமும் சண்டைபோடத் தெரியாமல் அன்பு மயமாக வாழ்ந்தவர். பொதுவுடைமைக் கொள்கையில் ஆழ்ந்த பிடிப்புக் கொண்டவராக இருந்தாலும், அந்த வட்டத்தைத் தாண்டியும் இவருக்கு ஏராளமான இலக்கியவாதிகள் உற்ற நண்பர்களாய் இருந்தார்கள்.

  இவர், தம் கவிதைகளை இனிய குரலில் மிக அழகாகப் பாடக் கூடியவரும் கூட. தம் நண்பர்கள் வீட்டுக்கு இவர் சென்ற போதெல்லாம் அங்கு இவரைப் பாடச்சொல்லி அன்போடு வேண்டுகோள் விடுத்தவர்கள் பலர். தம் கவிதைகளையே சுகமான மெட்டுகளில் பாடித் தம் நண்பர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இவர் மகிழ்வித்ததுண்டு.

  "அருட்செல்வர்' பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் தந்தையார் நாச்சிமுத்துக் கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பணியைத் தம் இறுதிக் காலத்தில் மேற்கொண்டார் கே.சி.எஸ். ஆனால், அந்தப் பணியை அவரால் செய்துமுடிக்க இயலவில்லை.

  அன்போடும் அடக்கத்தோடும் வாழ்வது எப்படி, மாற்றுக் கொள்கை உடையவர்களையும் கொள்கை தாண்டி மனமார நேசிப்பது எப்படி போன்ற அருங்குணங்களைக் கற்பிக்க இன்று நம்மிடையே கே.சி.எஸ். இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai