இந்த வாரம் கலாரசிகன்

தமிழகத்தின் பதிப்பக முன்னோடிகளில் ஒருவர் முல்லை பிஎல்.முத்தையா. இவருக்கு வியாபாரத்தைவிட சமுதாயக் கண்ணோட்டம்தான் முக்கியமாக இருந்தது.
Updated on
3 min read

தமிழகத்தின் பதிப்பக முன்னோடிகளில் ஒருவர் முல்லை பிஎல்.முத்தையா. இவருக்கு வியாபாரத்தைவிட சமுதாயக் கண்ணோட்டம்தான் முக்கியமாக இருந்தது. 1943-இல் "தினமணி', "பாரத தேவி' போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக இருந்த கே.அருணாசலம் என்பவருடன் இணைந்து "முல்லை' முத்தையா தொடங்கிய பதிப்பகம்தான் கமலா பிரசுராலயம்.

அப்போது "தினமணி' நாளிதழிலிருந்து விலகிய நிறுவன ஆசிரியர் டி.எம்.சொக்கலிங்கம் எழுதிய "எனது ராஜினாமா' என்கிற புத்தகத்துடன் கமலா பிரசுராலயம் தனது பதிப்புப் பணியைத் தொடங்கியது. அடுத்தாற்போல, என்ன புத்தகம் வெளியிடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு ராஜாஜியைத் தொடர்பு கொண்டு ஒரு புத்தகம் கேட்டால் என்ன என்கிற எண்ணம் வந்தது.

அன்றைய சென்னை ராஜதானியின் சட்ட சபையில் 1937-ஆம் ஆண்டு ராஜாஜி பிரதமராக இருக்கும்போது மதுவிலக்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அந்த சர்க்கார் ஆட்சியிலிருந்து விலகியது. தொடர்ந்து 1944 ஜனவரி முதல் தேதியிலிருந்து மீண்டும் கள்ளுக்கடைகளைத் திறப்பது என்று பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது.

சட்டத்திற்கு விரோதமாக சாராயம் வடிக்கும் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டு வருவதாலும், நாட்டிலுள்ள நாணயப் பெருக்கத்தையும், விலைவாசி உயர்வையும் தடுக்க, கள் வரியைக் கொண்டு ஜனங்களுக்கு நன்மை செய்யக்கூடும் என்பதாலும், மதுவிலக்கை ரத்து செய்வதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. மதுவிலக்கை ரத்து செய்வதற்கு அரசு தரப்பு கூறிய காரணங்களை மறுதளித்த ராஜாஜி எழுதிய கட்டுரைகள் "மது விலக்கு (கள் ஒழிக)' என்கிற தலைப்பில் கமலா பிரசுரத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

மது விலக்குக்கு ஆதரவாகவும், அரசுத் தரப்பின் மதுக்கொள்கையை விமர்சித்தும் ராஜாஜி முன்வைக்கும் ஆணித்தரமான வாதங்கள், இன்றைக்கும் பொருத்தமானதாக இருக்கின்றன என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. மதுபானங்கள் பற்றிய எல்லா விவரங்களையும் ராஜாஜி துல்லியமாகப் பட்டியலிடுவதுடன், மருத்துவ ரீதியாக அதனால் ஏற்படும் தீமைகளையும், பொருளாதார ரீதியாக ஏற்படும் இழப்புகளையும், சமுக ரீதியாக ஏற்படக்கூடிய சீரழிவுகளையும் தர்க்கரீதியாக விவாதித்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

""சர்க்கார் தாமே கலால் வியாபாரம் நடத்தியும், மேற்பார்வை பார்த்தும் வந்தாலும்கூட, சட்ட விரோதமாக ரகசியமாய் மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பவர்கள் இருக்கின்றனர். அவர்களோடு சர்க்காருக்கு எப்போதும் போட்டி. திருட்டு வியாபாரத்தோடு எப்போதும் போட்டியாகவே சர்க்கார் திட்டங்கள் ஏற்படுத்திக் கொண்டு போகவேண்டும். கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காகப் போடப்பட்ட திட்டம், கடைசியில் சாதாரண வியாபார முறையில் நடத்த வேண்டியதாகிறது.

சர்க்கார் எடுத்துக் கொண்டிருக்கும் வேலை, இவ்வாறு மிகவும் கஷ்டமாகிறது. இதற்காக ஒரு பெரிய சிப்பந்திக் கூட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. மாகாணம் முழுவதும் நடக்கும் மதுபான வியாபாரத்தின் தலைமையை சர்க்கார் வகித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக மிகவும் திறமையான அதிகாரிகளை நியமித்து அவர்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதர்மமான ஒரு வியாபாரத்தை ஒழித்துவிடாமல் தாக்குப்பிடிக்க முயற்சித்தால் இவ்வாறுதான் முடியும்.

"மதுபானத்திலிருந்து சமுதாயச் செலவுக்காக எடுக்கக்கூடிய வரிப்பணத்தை ஏன் வீணில் இழக்க வேண்டும்? வரிப்பணம் இருந்தால்தானே ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளைச் சர்க்கார் செய்ய முடியும்?' என்று கேட்கிறார்கள். உண்மையில் கலால் வருமானமானது வருமானமே அல்ல. இப்போது சர்க்கார் கஜானாவில் செலுத்தப்படும் வருமானத்தை விட மதுவிலக்கு ஏற்பட்டால், ஐந்து மடங்கு அதிகமாக மக்கள் வீடுகளில் பணம் மிஞ்சும். மதுவினால் விருத்தியாகும் (அதிகரிக்கும்) குற்றங்களும் குறையும்.

சமுதாயத்திற்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்கக் கூடிய ஒரு வியாபாரத்தை நடக்கச் செய்து அதில் ஒரு பங்கை சமுதாயம் மறுபடி பெறுவதைக் காட்டிலும் வேறு வரிகள் போட்டுக்கொண்டு அரசாங்க நிர்வாகம் நடத்துவது மேன்மையான வழி. ஏழைக் குடும்பங்களைக் கெடுக்கும் ஒரு வியாபாரத்தை அரசாங்கமே நடத்தி, மற்றவர்கள் அதிலிருந்து வரும் லாபத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு சுகம் பெறுவது தருமமல்ல, ராஜ நீதியுமல்ல!' என்கிறார் ராஜாஜி.

ஆணித்தரமான வாதங்கள்; எளிமையான நடையில் விளக்கங்கள். மூதறிஞர் என்பதை வார்த்தைக்கு வார்த்தை நிரூபிக்கிறார் ராஜாஜி. இன்றைய ஆட்சியாளர்களும், அரசியல் தலைவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

எனது தனிப் பார்வைக்காக 2001-இல் மறு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகத்தின் பிரதி ஒன்றை அனுப்பித் தந்திருக்கிறார்கள் முல்லை பதிப்பகத்தார். அதற்கு முதற்கண் நன்றி. நன்றியுடன் ஒரு வேண்டுகோள். தயவு செய்து புதிய பதிப்பு ஒன்றை வெளியிடுங்கள். இன்றைய இளைஞர்களும், ஆட்சியாளர்களும் அதைப் படித்தாவது திருந்துவார்களா, மதுக்கொள்கை மறுபரிசீலனை செய்யப்படுமா என்று பார்ப்போம்.

------------------------------------------------

முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள "சிங்கப்பூரில் தமிழ் முஸ்லிம்கள்' என்கிற புத்தகம் பல சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கி உள்ளது. சிங்கப்பூரில் வரலாறு மட்டுமல்லாமல் அங்கே குடியேறிய தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்புதான் இன்றைய சிங்கப்பூரின் வளர்ச்சிக்கே அடித்தளம் என்பதும் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு "தெமா செக்' என்று அழைக்கப்பட்ட இந்தத் தீவை சுமத்திராவில் இளவரசர் சங் நீல உத்தமா என்பவர் படகில் வந்தபோது பார்த்தாராம். அங்கே அவர் ஒரு வினோதமான மிருகத்தைப் பார்த்ததாகவும், சிங்கம் போன்ற உருவமுடையதாக அது இருந்ததால் இந்தத் தீவுக்கு அவர் "சிங்கப்பூர்' என்று பெயர் சூட்டியதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொரு செய்தி. தமிழகத்தில் நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு வந்த சர் ஸ்டாம் போர்டு ராபில்ஸ் என்பவர் 1819-இல் சிங்கப்பூர் தீவில் காலடி எடுத்துவைத்து, அங்கே ஒரு நகரத்தை நிறுவினார். ஒரு காலத்தில் நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டுதான் சிங்கப்பூரே நிர்வகிக்கப் பட்டதாம். சிங்கப்பூரிலுள்ள ராபின்ஸ் நூலகத்தில் இதற்கான ஆவணங்கள் இருப்பதாகப் பதிவு செய்திருக்கிறார் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் ஸமத்.

சிங்கப்பூரிலுள்ள தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு, இலக்கிய ஆர்வமும் பணிகளும், எழுத்தாளர்கள், வணிகர்கள் என்று ஒரு தகவல் பெட்டகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்ககம். ஜே.எம்.சாலி, முனைவர் சலீம், ஆசியான் கவிஞர் க.து.மு. இக்பால், ஆடிட்டர் பெரோஸ்கான், எம். இலியாஸ் ஆகியோரின் பங்களிப்பில் மலர்ந்திருக்கும் இந்தப் புத்தகத்தில், கவிஞர் இக்பால் எழுதியிருக்கும் "பாத யாத்திரை'

என்கிற கவிதை பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.


கால்களே

உங்களுக்குச் செய்யும்

கைமாறு எதுவோ?

ஒருநாள்

உங்களைத் தோளில் சுமந்து

என் நன்றியைச் சொல்ல

என் தோழர்கள் வருவார்கள்!

------------------------------------------------

"வாரா வாரம் புதுக் கவிதைகள்தான் வெளியிட வேண்டுமா? கருத்தாழம் மிக்க வெண்பாக்களையும் அவ்வப்போது வெளியிடக் கூடாதா?' என்று சிலர், "மரபுக் கவிதைகளை ஏன் ஒரேயடியாகப் புறக்கணிக்கிறீர்கள்? மரபு நிரந்தரம், புதிது "ஃபாஸ்ட் புட்' என்று சலித்துக் கொள்பவர்கள் சிலர். அவர்களுக்காக இந்தவாரக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

தண்ணீர் இனிமேல் விலை பொருள் என்று மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது. தவித்த வாய்க்குத் தண்ணீரெல்லாம் கிடையாது. காசு கொடுத்தால்தான் தண்ணீர் என்று சட்டமே வரப்போகிறது. இதைப் பற்றி ஆலந்தூரைச் சேர்ந்த புலவர் இரா. இராமமூர்த்தி, தான் 6 வருடங்களுக்கு முன்னால் எழுதிய வெண்பாவை அனுப்பித் தந்திருக்கிறார்.

தாபத்தில் விக்கித் தவிக்கிறோம் எங்கே நீ

கோபத்தில் போனாய் குடிநீரே? - ஆபத்தில்

ஆக்கத்தைத் தேடும் அந்நியரின் நோக்கம் போல்

"கோக்' ஆனேன், வாங்கிக் குடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com