சுடச்சுட

  

  Alter ego  என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் ரோமாபுரியின் புகழ்பெற்ற பேச்சாளர், வழக்குரைஞர், தத்துவ மேதையான மார்கஸ் துல்லியஸ் சிசேரோ (cicero) ஆவார். சிசிலி மாகாணத்தின் ஆளுநரை லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் (2000 ஆண்டுகளுக்கு முன்னரே லஞ்ச ஊழல் வழக்கத்திற்கு வந்துவிட்டது போலும்) வெற்றிகரமாகச் சிறைக்கு அனுப்பியதன் மூலம் புகழ் ஏணியில் ஏறத்தொடங்கிய சிசேரோ, பேச்சாற்றலைப் பற்றி இரு பெரும் நூல்களை எழுதினார். நட்பைப் பற்றி கி.மு. 44-இல் சிசேரோ எழுதிய த அமிசியா (De Amicitia) என்ற நூலில்தான் முதன்முதலாக "ஆல்டர் ஈகோ' என்ற சொல் உருவாக்கப்பட்டது. ஒத்த கருத்தும், ஒரே சிந்தனையும் உடைய நண்பனைக் குறிக்க, சிசேரோ இச்சொல்லைப் பயன்படுத்தினார்.

  ஆனால், உளவியல் துறை வளர்ச்சி காணத் தொடங்கியதும், ஒரு மனிதனுக்குள் இருக்கும் இன்னொரு படிமத்தையும், குறிப்பாக ஒரு மனிதனுக்குள் மறைவாகச் செயல்படும் தீய படிமத்தையும் குறிப்பதற்கு இச்சொல் பயன்படுத்தப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டில் உளவியல் அறிஞர் ஆண்டன் மெஸ்மெர் (அவர் பெயரால்தான் மெஸ்மெரிசம் என்ற சொல் ஏற்பட்டது) ஹிப்னாசிஸ் முறையில் (தூண்டப்பட்ட அறிதுயில் நிலையில்) ஒருவரது ஆல்டர் ஈகோவைப் பிரிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார். 19-ஆம் நூற்றாண்டில், ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் (Robert Louis Stevenson)) எழுதிய "டாக்டர் ஜெகில் மற்றும் திருவாளர் ஹைடு அவர்களின் விசித்திரமான வழக்கு' (The Strange Case of Dr.Jekyll and Mr.Hyde) என்ற நூல், ஒரு மனிதனுக்குள் மறைவான அல்லது மோசமான இரண்டாம் பக்கம் இருக்கக்கூடும் என்பதைக் கதையமைப்பாகக் கொண்டு, விற்பனையில் சாதனை படைத்தது. இத்தகவல்களைக் கருத்தில் கொண்டு, இவ்வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

  வழக்குரைஞர் எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, "ஆல்டர் ஈகோ' என்பதை "ஒருவரின் மாற்று ரூபம்' எனலாம் என்று கூறுகிறார். சோம.நடராசன், "ஆல்டர்' என்றால் மாற்று; "ஈகோ' என்றால் தன் (முனைப்பு) என்றும், "ஆல்டர் ஈகோ' என்ற சொல்லுக்கு என்மாற்று, மாற்றுயான், இரண்டாம் நான், என் போன்றான் என்னும் சொற்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்.

  டி.வி.கிருஷ்ணசாமி, "பொருத்தமான இன்னொன்று' என்பதே இதன் இணைச் சொல்லாகும் என்கிறார். புலவர் செ.சத்தியசீலன், ஒத்தமைவு, போன்றிருத்தல், போலி ஆகிய சொற்களைக் கொள்ளலாம் என்கிறார். திருமதி. ஹரணி, தன்னியல்புப் பிரதி, தன்னுருப் பிரதி, தன்னுரு நகல், தன்னுரு மெய், தன் மாற்றுரு, மாற்றாளன், மெய்யுரு மாற்று, தன் மாற்று வடிவு ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். சோலை.கருப்பையா, ஒருவரின் குணநலன், நடத்தை, உருமாற்றம் ஆகியவற்றைக் கொண்டு அவர் முன்னைப்போல இல்லை; ஆளே மாறிவிட்டார் என்று சொல்வதைப்போல், "ஆல்டர் ஈகோ' என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் காலம் மாற்றிய கோலம், காலம் செய்த கோலம், காலத்தின் மாறுபாடு ஆகிய சொற்களில் ஏதேனும் ஒன்று பொருந்தும் என்கிறார்.

  வெ.ஆனந்தகிருஷ்ணன், நெருங்கிய நண்பர், ஆளின் மறுவடிவம், தன் மாற்று வடிவம், உற்ற நண்பர், உயிர்த்தோழன், ஆத்ம சிநேகிதன் ஆகிய சொற்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார். முனைவர் பா.ஜம்புலிங்கம், அன்புப் பிரதிபலிப்பு, நேசப்பிரதி, பாசப்பிரதி, நட்புப்பிரதி, உள்ளங்கவர் பிம்பம், மாற்று அன்பு ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் ஜி.ரமேஷ், மாற்றுத் தோற்றம், வேறு முகம், எதிர்ப் பண்பு, வேறுபட்ட ஆளுமை, மாறுபட்ட செயல்பாடு ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.

  கோ.மன்றவாணன், இரட்டை ஆளுமை, மாற்றாளுமை, தன்நகல், படிவார்ப்பு, தன்னுள் மாற்றாள், இன்னொரு நான், தன்மாற்று வடிவம், தன்முனைப்பு மாற்றீடு, மாற்றுத் தன்முனைப்பு, உயிர் நண்பர், ஆருயிர் நண்பர் முதலிய சொற்களைப் பரிந்துரைக்கலாம் என்றும், இச்சொல்லுக்கு விளக்கமாக உன்னைப்போல் ஒருவன், அந்நியன், மனிதனின் மறுபக்கம், உனக்குள் ஒருவன் ஆகிய பயன்பாடுகளும் புழக்கத்தில் உள்ளன என்றும் கூறியுள்ளார். என்.ஆர்.சத்தியமூர்த்தி, உற்ற நண்பன், நசையறு நண்பன், இன்னொரு முகம், மற்ற முகம், மாற்று முகம், உள்ளுறை முகம், பிறிதொரு முகம், மாற்று உள்ளீடு ஆகிய சொற்களைக் குறிப்பிடலாம் என்கிறார்.

  முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கு ஆளின் மறுபடிவம், தன்மாற்று வடிவம், ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர் என்னும் பொருள்களைத் தருகிறார். ஆனால், இச்சொல் தோன்றிய வரலாற்றையும், அது காலப்போக்கில் உளவியல் துறையின் தாக்கத்தால் பெற்றிருக்கும் மாற்றத்தையும், கருத்தில் கொண்டு பார்த்தால், இச்சொல் (1) நல்ல நண்பன், (2) ஒரு மனிதனின் மாற்று அல்லது இரண்டாம் வடிவம் ஆகிய இரு பொருள்களையும் தாண்டி, ஒரு மனிதனுக்குள் நன்மையின் பாற்பட்டு நிற்கும் புறத்தோற்றத்தின் பின்னால், தீமையின் பாற்பட்டு மறைந்து நிற்கும் மாற்றுத் தோற்றத்தைக் குறிக்கவும் பயன்படுவது தெரிகிறது.

  ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியும் இச்சொல்லுக்கு (1) மிகவும் நெருக்கமான நம்பிக்கைக்குரிய நண்பன், (2) ஒரு மனிதனின் இரண்டாவது அல்லது மாற்று வடிவம் ஆகிய இரு பொருள்களைத் தருகிறது. அதனால்தான், பெருவாரியான வாசகர்கள் மாற்று என்ற சொல்லையும், வடிவு, உரு, பிரதி ஆகிய சொற்களையும் இணைத்து வழங்கியுள்ளனர். இந்த வகையில் பார்க்கும்போது, தன் மாற்றுரு, மாற்று முகம் ஆகிய இரு சொற்களுமே ஆல்டர் ஈகோ என்ற சொல்லின் பல பரிமாணங்களையும் உள்ளடக்கியதாகத் தெரிகிறது. எனவே, இச்சொல்லுக்கு மிகப் பொருத்தமான இணைச்சொல் "தன் மாற்றுரு' எனலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai