Enable Javscript for better performance
இந்த வார கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

    

    இந்த வார கலாரசிகன்

    By dn  |   Published on : 20th April 2014 01:43 AM  |   அ+அ அ-   |    |  

    பழ.கருப்பையா ஒரு வித்தியாசமான சிந்தனையாளர். எந்தவொரு விஷயத்தையும் அவரால் மட்டுமே ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தில் சிந்திக்க முடியும். சிந்திப்பதைத் தெளிவாகப் பொட்டில் அடித்ததுபோல படிப்பவர்கள் மனதில் பதியும்படி எழுத்தில் வடிக்கும் அசாத்திய சாதூர்யம் அவரது தனிச்சொத்து.

    எழுத்து என்றால் அப்படியோர் எழுத்து; அதில் தொக்கி நிற்கும் நையாண்டி; கடலலைபோல சீராக வந்து விழும் சொற்கள்; எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போலக் கொஞ்சி விளையாடும் அழகு தமிழ். இத்தனையும் இருப்பதால் மட்டும் பழ.கருப்பையாவின் எழுத்து சிறப்புப் பெறுகிறது என்றால் தவறு. இத்தனை சிறப்புகளுடன் நேர்மையும், நாணயமும், உண்மையும் இருப்பதுதான் அந்த எழுத்தின் வனப்புக்கு சிறப்பு விகுதி சேர்க்கிறது.

    ""பழ.கருப்பையா மீது ஒரு சின்னத் தப்புக்கூடச் சொல்ல முடியாது. அவரது கருத்துக்கள் சிலரால் ஏற்கப்படலாம்; சிலரால் ஏற்கப்படாமல் இருக்கலாம், அது வேறு!'' என்று "துக்ளக்' ஆசிரியர் "சோ'வே பாராட்டுகிறார் என்றால், அதற்கும் மேலான பாராட்டு ஏதாவது இருக்க முடியுமா என்ன?

    பழ.கருப்பையாவும் நானும் சந்திப்பது அரிது. சந்தித்து விட்டாலோ, குறைந்தது நான்கு மணி நேரமாவது உலக நடப்புகளை விவாதிக்காமல் பிரிவது அரிதிலும் அரிது.

    ராஜாஜியிடம் பழ.கருப்பையாவுக்கு அதீத பக்தி. காமராஜைத் தலைவனாகக்கொண்ட அணுக்கத் தொண்டர் அவர். வள்ளுவப் பேராசனைக் கரைத்துக் குடித்தவர். பாரதியை பருகிக் களித்தவர். கண்ணதாசனைக் கண்ணெனப் போற்றிப் புகழ்பவர். பழ.கருப்பையாவின் "கண்ணதாசன் - காலத்தின் வெளிப்பாடு' என்கிற புத்தகத்திற்காக நியாயமாகப் பார்த்தால் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

    திருக்குறள் உரையாசிரியர்கள் பற்றிய பேச்சு வந்தது. மணக்குடவர் உரையில் தொடங்கிய இன்னபிற உரைகள் பற்றிய எனது கருத்துகளைக் கேட்ட பழ.கருப்பையா, "பரிமேலழகர் உரையை நீங்கள் ஆழ்ந்து படித்திருக்கிறீர்களா?' என்கிற கேள்வியை எழுப்பினார். அவரது கருத்துப்படி, பரிமேலழகருக்கு நிகரான உரையாசிரியர் யாரும் இருக்க முடியாது. அப்போதுதான் எனக்கு உரைத்தது. என்னிடம் பரிமேலழகர் உரை இல்லை என்பது!

    பழ.கருப்பையா இன்னொரு கருத்தையும் முன் வைத்தார். அதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு. "பாஞ்சாலி சபதம்' மட்டும் எழுதி விட்டுவிட்ட மகாகவி பாரதி, மகாபாரதத்தைத் தனது கவிதை நடையில் எழுதியிருக்க வேண்டும் என்பதுதான் அது. அப்படி எழுதி இருந்தால், கம்பனின் இராமகாதைபோல, பாரதியின் பாரதமும் தமிழ் வாழும் காலம் வாழுகின்ற சிறப்பைப் பெற்றிருக்கும் என்கிற பழ.கருப்பையாவின் கருத்தை அட்சரம் பிசகாமல் நான் ஆமோதிக்கிறேன். அதை பாரதி ஒருவரால் மட்டும்தான் எழுதியிருக்க முடியும்.

    இப்போது பழ.கருப்பையா, மகாபாரதத்தைப் புதியதொரு கோணத்தில் அணுகி ஆராய்ந்து, தனது தெளிவுகளை ஒரு புத்தகமாக வெளிக்கொணர இருக்கிறார். மகாபாரதக் கதாபாத்திரங்களை அவர் அணுகியிருக்கும் விதமே அலாதியானது. அவரது பார்வையில், மகாபாரதத்தை நடத்துவது இரண்டு கதாபாத்திரங்கள் - ஒன்று கண்ணன். மற்றொன்று கர்ணன்.

    அந்தப் புத்தகம் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பில் நகர்கின்றன எனது நாள்கள்!

     

    வெள்ளிக்கிழமை சேலத்திலிருந்து இரவு ரயிலில் சென்னைக்குப் பயணிக்கும்போது நான் படித்த புத்தகம் முன்னாள் அமைச்சர் க.இராசாராம் எழுதிய "ஒரு சாமானியனின் நினைவுகள்'. அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலை, உடனிருந்து பார்த்த அனுபவங்களை க.இராசாராம் அதில் பதிவு செய்திருக்கிறார்.

    மூதறிஞர் ராஜாஜியின் ஆலோசனையின் பேரில்தான் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார் என்று பரவலாகக் கருதப்படும் தகவல் தவறு என்பது அதைப் படித்தபோது தெரிந்தது. பெரியார் பத்திரப்படுத்தி இருந்த ராஜாஜியின் இரண்டு கடிதங்கள் பற்றி க.இராசாராம் குறிப்பிடுகிறார்.

    மணியம்மையைப் பெரியார் மணம் செய்து கொள்வதைப் பற்றி முடிவு செய்யும் பொறுப்பை பெரியாரிடமே விட்டுவிடுவதாகவும், அந்தத் திருமணத்துக்குத் தான் வகிக்கும் கவர்னர் ஜெனரல் பதவி காரணமாக சாட்சியாகக் கையெழுத்திட இயலாமை பற்றியும் தனது கடிதத்தில் ராஜாஜி குறிப்பிட்டிருந்தார். அதிலிருந்து பெரியார் ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார் என்பதும், ராஜாஜி சாட்சிக் கையெழுத்துப்போட வேண்டும் என்று பெரியார் விழைந்தார் என்பதும் தெரிகிறது. ராஜாஜி எந்தவித ஆலோசனையும் வழங்கவில்லை என்பதும் தெளிவாகிறது. தன்னைக் குற்றப்படுத்திப் பேசுகிறார்கள் என்று ராஜாஜி எழுதிய கடிதத்திற்கு "இதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை' என்று பெரியார் பதிலெழுதியதாகவும் குறிப்பிடுகிறார் இராசாராம்.

    ரங்கூனில் நடைபெற்ற உலக புத்தமத மாநாட்டில் டாக்டர் அம்பேத்கரும், பெரியாரும் கலந்து கொண்டனர். டாக்டர் அம்பேத்கர் அந்த மாநாட்டில்தான் புத்த மதத்தில் சேர்ந்தார். பெரியாரும் புத்த மதத்தில் சேர வேண்டும் என்று மாநாட்டினர் விரும்பினார்களாம்.

    ""ரங்கூனிலிருந்த புத்தமத ஆலயங்களை அய்யா (பெரியார்) பார்க்க விரும்பினார். புத்திதான் எல்லாவற்றிற்கும் உயர்ந்தது என்று சொன்ன புத்தரையே கடவுளாக்கி, சிறுவர்களை எல்லாம் சாமியார்களாக்கி இருப்பதை அய்யா பார்த்தார். பெரும்பாலும் நம்மூர் கோயில்களில் உள்ளது போலத்தான் பூசைகளும். கற்பூர ஆராதனை மட்டும் கிடையாது, அவ்வளவே.

    இதையெல்லாம் பார்த்த பெரியார், "நாம் வேறு மதத்துக்கு மாறாமல், மக்களைச் சீர்திருத்தி, ஒரே மனித இனமாக மாற்றலாம். வேறு மதத்துக்கு மாறிவிட்டால், நாம் சார்ந்துள்ள மதத்தைச் சீர்திருத்தும் உரிமையை இழந்து விடுவோம். பிறகு அது மத துவேஷமாகக் கருதப்பட்டுவிடும்'' என்று கூறி, மதம் மாற மறுத்துவிட்டதாக க.இராசாராம் பதிவு செய்கிறார்.

    அரை நூற்றாண்டு காலத் தமிழக சரித்திரம் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும் முக்கியப் பங்கு வகித்த க.இராசாராமின் பதிவு இது. பல சுவாரஸ்யமான சம்பவங்கள், நாவல் படித்த விறுவிறுப்பைத் தருகின்றன.

     

     

     

    20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மானாமதுரையைச் சேர்ந்த கவிஞர் நவதிலக் என்பவரின் "பூக்கள் பறிப்பதற்கில்லை' என்கிற கவிதைத் தொகுப்பு. திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை நடைபாதையில் இருந்த பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. அதிலிருந்து ஒரு கவிதை.

     

     

    ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

    ஆனந்த சுதந்திரம் -

    அடைந்து விற்றோமென்று!

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp