இந்த வார கலாரசிகன்

கவிஞர் வைரமுத்து கோவையிலுள்ள கங்கா மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஒருநாள் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ""இங்கே உங்கள் ரசிகர் ஒருவர் இருக்கிறார்.
இந்த வார கலாரசிகன்

கவிஞர் வைரமுத்து கோவையிலுள்ள கங்கா மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஒருநாள் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ""இங்கே உங்கள் ரசிகர் ஒருவர் இருக்கிறார். உங்களது தலையங்கங்களை எல்லாம் வெட்டி எடுத்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி வைத்திருக்கிறார். கலாரசிகனின் பரம ரசிகனான அவர் "இந்த வாரம்' பகுதியையும் ஒன்றுவிடாமல் பாதுகாத்து வைத்திருக்கிறார்...'' இப்படியெல்லாம் கவிஞர் வைரமுத்து கூறக் கூற, அந்த "தினமணி' வாசகரை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற அவா என்னில் மேலோங்கியது.

சமீபத்தில் கோவை சென்றிருந்தபோது, மறக்காமல் கங்கா மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஜே.ஜி. சண்முகநாதனைச் சந்திக்கச் சென்றபோதுதான் தெரிந்தது, அவர் "தினமணி' வாசகர், பிரபல மருத்துவர் என்பது மட்டுமல்லாமல், ஒரு தலைசிறந்த பாரதி நேசர், தமிழ் அறிஞர் என்பதும் சமுதாயச் சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட ஒரு மாமனிதரை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காகவே கவிஞர் வைரமுத்துவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

மருத்துவர் ஜே.ஜி. சண்முகநாதன், அகவை எண்பதுக்கு மேல், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பற்றிய ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தனது முனைவர் பட்ட ஆய்வை "பாரதி என்றொரு மானுடன்' என்கிற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் அவர். பாரதியைப் பற்றிய அரிய பல தகவல்களை எளிய தமிழில் பதிவு செய்திருக்கும் சண்முகநாதன், தனது புத்தகத்தை ஆராய்ச்சியாளர்களைப் போலக் கட்டுரையாகத் தொகுக்காமல், சுவாரஸ்யமான தகவலாகத் தொகுத்திருப்பதுதான் "பாரதி என்றொரு மானுடன்' புத்தகத்தின் சிறப்பு.

""பாரதியார் இரண்டு பெரிய தகரப் பெட்டிகள் நிறையத் தமது நூல்களின் கையெழுத்துப் பிரதிகளை வைத்துப் பொக்கிஷம் போலப் பாதுகாத்து வந்தார். ஒரு நாள் குழந்தைகளிடம், ""குழந்தைகளே, அப்பா தரித்திரன், உங்களுக்குச் சொத்து ஒன்றும் வைக்கவில்லை என்று எண்ணாதீர்கள். இதோ தகரப் பெட்டிகளில் இருக்கும் கையெழுத்துப் பிரதிகள் குறைந்தது 2,00,000 ரூபாய் பெறுமானம் உள்ளவை'' என்றார் என்பதை

சண்முகநாதன் பதிவு செய்திருக்கிறார்.

மருத்துவர் சண்முகநாதனிடம் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. கவிஞர் வைரமுத்து அவர் மீது ஒரு வாழ்த்துப்பா பாடிப் பரிசளித்திருக்கிறார். அற்புதம், அதி அற்புதம்.

மருத்துவர் சண்முகநாதனையும் அவருடைய துணைவியார் கனகவல்லி அம்மையாரையும் சந்தித்த நிகழ்வைப் பதிவு செய்வதில் எனக்குப் பெருமகிழ்வு!

-------------------------------------

"தினமணி'யில் என். முருகன் ஐ.ஏ.எஸ். எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "உண்மையைச் சொல்லுகிறேன்' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்திய அரசுப் பணி அதிகாரியாக சிறப்புடன் பணியாற்றி ஓய்வுபெற்ற என். முருகன் தனது நிர்வாக அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களின் வரவேற்பையும், அதிகார வர்க்கத்தின் கவனிப்பையும் பெற்றவை.

சட்ட மேலவைக்கும், மாநிலங்களவைக்கும் பெரிய தொழிலதிபர்களும், பணக்காரர்களும் தங்களது செல்வச் செல்வாக்கால் தேர்ந்தெடுக்கப்படும் அவலத்தைக் குறித்த "மக்களாட்சிக்கு விடப்படும் சவால்' என்கிற 20.05.2008}இல் வெளியான கட்டுரையில் தொடங்கி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்று, திறம்பட நடக்கும் நமது உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூடு விழா நடத்தும் முயற்சியை விமர்சித்து 29.03.2010} இல் வெளியான "கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கபில் சிபல்' கட்டுரை வரையிலான 42 கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

கல்லூரிப் பருவத்தில் "இளைஞர் காங்கிரஸ்' உறுப்பினராகப் பெருந்தலைவர் காமராஜின் அன்புக்குப் பாத்திரமானவராக இருந்து, இந்திய அரசுப் பணியில் சேர்ந்து திறம்படப் பணியாற்றிய அனுபவமும் பெற்றிருக்கும் என். முருகனின் பார்வை விசாலமானது. அரிஸ்டாட்டில், பிளாட்டோ, இங்கர்சால், எட்மண்ட் ப்ராயிட் போன்ற மேல்நாட்டுப் பேரறிஞர்களின் தத்துவங்களை ஊன்றிப் படித்திருக்கும் இவரது பிரச்னைகளை அணுகும் கோணம் புதிது, வித்தியாசமானது.

சமூகவியல் மாணவர்களும், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களும், சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்களும் படித்துப் பாதுகாக்க வேண்டிய புத்தகம்!

----------------------------

நூல் மதிப்புரைக்கு வி. கிரேஸ் பிரதிபா எழுதிய "துளிர் விடும் விதைகள்' என்கிற கவிதைத் தொகுப்பு வந்திருந்தது. அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் புதுக்கோட்டை நா. முத்துநிலவன், 1965-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அளவில் இலக்கியத்திற்காகத் தரப்படும் உயர்ந்த விருதான "ஞான பீடம்' விருதை, 1965, 1980, 1984, 1995, 2007 என 5 முறை மலையாளமும், 1970, 1988, 2012 என மூன்று முறை தெலுங்கும், 1967, 1973, 1977, 1983, 1990, 1994, 1998, 2010 என எட்டு முறை கன்னடமும் பெற்றிருக்க, தமிழ் இதுவரை இரண்டு தடவைதான் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது மனதை வருத்தியது.

அவர் குறிப்பிடுவதுபோல, தமிழில் பெயர்கள் வைத்துக் கொள்வதிலும், தமிழினம் பற்றி வாய் கிழியப் பேசுவதிலும் காட்டும் ஆர்வத்தை, நாம் மொழி வளர்ச்சியில் காட்டுவதில்லை. தமிழில் இருக்கும் அளவுக்கு மொழிக் கலப்பும், ஆங்கில மோகமும் பிற மொழியினரிடம் இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நமக்கு இருக்கிறதா என்பதுகூட சந்தேகம்தான்.

2009-இல் வலைப் பக்கத்தைத் தொடங்கி ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கி, 2012 முதல் தமிழில் தொடர்ந்து எழுதி வரும் கிரேஸ் பிரதிபாவின் மொழிப்பற்றும், சமுதாய நோக்கும் பாராட்டுக்குரியவை. புத்தகத்தின் அட்டையை வடிவமைத்திருப்பது அவருடைய கணவர் ஆல்பர்ட் வினோத் என்று குறிப்பிடுகிறார். முகப்பே கவித்துவமாக இருக்கிறது.

"கையெழுத்தை...' என்றொரு நாலுவரிக் கவிதை. பகிர்ந்து கொள்கிறேன், படியுங்கள்.

அஞ்சல் ஆவணம்

அனைத்தும் கணினியில்

தொலைத்து விட்டேனே

கையெழுத்தை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com