இந்த வார கலாரசிகன்

இந்த வார கலாரசிகன்

கடந்த வாரம் "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' ஆகிய ஐந்து கிரந்த எழுத்துகளை நெடுங்கணக்கு வரிசையில் சேர்ப்பது பற்றி நான் வெளியிட்டிருந்த கருத்துக்கு ஏராளமான கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள்.

கடந்த வாரம் "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ' ஆகிய ஐந்து கிரந்த எழுத்துகளை நெடுங்கணக்கு வரிசையில் சேர்ப்பது பற்றி நான் வெளியிட்டிருந்த கருத்துக்கு ஏராளமான கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள். அதேநேரத்தில் சில மூத்த தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் தங்களது எதிர்ப்பையும், கருத்து மாறுபாட்டையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, வழக்குரைஞரும், முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான நெல்லை சு.பாண்டியனின் கடிதத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். தமிழ்மீது அவர் கொண்ட தாளாப்பற்றின் ஆழத்தை உணர முடிந்தது. அவரது வயதொத்த தமிழறிஞர்கள் அனைவருமே அவர் முன்வைத்த கருத்தை உடையவர்களாகத்தான் இருக்க முடியும் என்பதையும் நான் அறிவேன்.

"அ'கரம் முதல் "ஒள'காரம் வரையிலான உயிரெழுத்துகள் பன்னிரண்டும், "க'கரம் முதல் "ன'கரம் வரையிலான மெய்யெழுத்துகள் பதினெட்டும், "ஃ' என்னும் ஆய்த எழுத்தையும் சேர்த்துத் தமிழ் எழுத்துகள் மொத்தம் 31 தான் என்றும், பின்னாளில் சமணரான பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில் தமிழ் எழுத்துகள் 247 என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறான கருத்தாகும் என்றும் சு.பாண்டியன் தெரிவிக்கிறார். அவரது கருத்தை மறுப்பதற்கில்லை.

அதேநேரத்தில், சூரியநாராயண சாஸ்திரியார் தனது பெயரை "பரிதிமாற்கலைஞர்' என்று தமிழில் மாற்றிக் கொண்டதுபோல எல்லோரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவரது கருத்து, நடைமுறை சாத்தியம் அல்ல. ""பேரக் குழந்தைகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக அமையாமல் இருந்தால், உண்மையில் அவர்கள் தமிழ் அறிஞர்களாகவோ, தமிழ் ஆர்வலர்களாகவோ இருக்க முடியாது. அவர்களைத் தமிழ்த் துரோகிகள் என்றே கூறலாம்'' என்கிற அவரது கருத்து, அவரது தாளாத் தமிழ்ப்பற்றைக் காட்டுகிறது. ஆனால், ஏற்புடையதல்ல.

வினைச்சொற்களுக்கு நாம் தமிழ்ச் சொற்களைத் தேடுவதுபோல, பெயர்ச் சொற்களுக்குத் தமிழ்ப் பெயர் தேடுவதை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். கருத்தியற் கோட்பாடு (ஐடியலிசம்) என்பது வேறு; நடைமுறை சாத்தியம் என்பது வேறு. நமது பிடிவாதத்தால், நாளைய தலைமுறையினர் தமிழையே வெறுத்து ஒதுக்கிவிடக்கூடாது என்பதுதான் எனது கவலை.

அதுமட்டுமல்ல, ஒருவரது தனிப்பட்ட விருப்பம் அல்லது உரிமையில் தலையிட நாம் யார்? தோப்பில் முஹம்மது மீரான் தனது பெயரைத் தோப்பில் முகம்மது மீரான் என்று எழுத விருப்பப் படாவிட்டால், அதை நாம் மறுதலிப்பது தவறு. "முஹம்மது' என்பது அரேபியச் சொல். "முகம்மது' என்று சொன்னால் பொருள் வேறுபடக்கூடுமோ என்னமோ, யாருக்குத் தெரியும்? "ஸ்டாலின்' என்கிற பெயரை "இசுடாலின்' என்று எழுத வேண்டும் அல்லது புதிய தமிழ்ப் பெயர் சூட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

கிரந்த எழுத்துகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்பதல்ல எனது கருத்து. பெயர்ச் சொற்களைக் குறிப்பிட கிரந்த எழுத்துகளைக் கையாள்வதை நாம் அனுமதிக்கலாமா என்பதை விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். தமிழைத் தவமாக மேற்கொண்டிருக்கும் சு.பாண்டியன், மா.கண்ணப்பன், தமிழண்ணல், இளங்குமரனார் உள்ளிட்ட பேரறிஞர்கள் இதனால் மனம் புண்பட்டுவிடலாகாது. தமிழ் செழிக்க வேண்டும் என்கிற ஆர்வமுடையவன் என்பதால், எனது சிற்றறிவுக்குட்பட்ட ஒரு கருத்தை விவாதமாக்க முற்பட்டிருக்கிறேன், அவ்வளவே!

------------------

ஒன்பது மாதங்களுக்கு முன்பு, எங்கள் ஆசிரியர் சாவி சாரின் நினைவுநாள் சொற்பொழிவின்போது எழுத்தாளர் சிவசங்கரி என்னிடம் தந்த அவரது "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்கிற ஆராய்ச்சி நூலின் நான்காம் தொகுப்பான "வடக்கிந்திய மொழிகள்' புத்தகத்தைப் பற்றிய எனது கருத்தை இத்தனை நாள்களும் பதிவு செய்யாமல் விட்டதற்கு சிவசங்கரி என்னை மன்னிக்க வேண்டும்.

அவர் செய்து முடித்திருப்பது ஓர் அசுர சாதனை. அதில் அவர் அடைந்திருப்பது இமாலய வெற்றி. இந்தத் தவத்தில் அவர் 16 ஆண்டுகள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பது மலைப்பாக இருக்கிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பயணித்து, பல்வேறு கலை, கலாசாரப் பின்னணிகளைப் பற்றியும், அந்தந்த மாநிலத்தின் மொழிகள் பற்றியும் ஆராய்ந்து விவரங்களைச் சேகரித்துப் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு மொழியிலுமுள்ள முன்னணி எழுத்தாளர்களின் நேர்காணல்களுடன், அந்தந்த மொழிகளிலுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளையும் தேர்ந்தெடுத்து அவற்றின் மொழிபெயர்ப்புகளைத் தந்திருக்கிறார்.

சிவசங்கரியின் முதல் மூன்று தொகுதிகளும் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் நான் படிக்கவில்லை. நான்காவதும் கடைசியுமான "வடக்கிந்திய மொழிகள்' மட்டும்தான் படித்தேன். ஒன்று தெரிகிறது. நான்கு தொகுதிகளையும் படித்துவிட்டால், விநாயகர் அம்மையப்பனை வலம் வந்து மாங்கனி பெற்றதுபோல, இந்திய இலக்கியம் எனும் ஆழ்கடலில் முத்துக்குளித்த அனுபவம் பெறலாம் என்பதுதான் அது.

நான் படித்த நான்காம் தொகுப்பில், காஷ்மீரி, பஞ்சாபி, உருது, இந்தி, சம்ஸ்கிருத மொழிகளைச் சார்ந்த சமகாலப் படைப்பாளிகளையும், இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்தந்த மொழிகள் பற்றி அவர் கூறப் புறப்படு முன்னர், அந்தந்தப் பகுதிகள் பற்றி அவர் எழுதி இருக்கும் குறிப்புகள், தனியாகத் தொகுக்கப்பட வேண்டிய பயணக் கட்டுரைகள். பயணக் கட்டுரைகள், பேட்டிகள், படைப்புகள் என்று இந்தத் தொகுப்பையே மூன்று வெவ்வேறு தொகுப்புகளாகவும் பிரசுரிக்கலாம் என்று தோன்றுகிறது.

உருது பகுதி வந்ததும் ஆர்வத்துடன் புரட்டினேன். நான் எதிர்பார்த்ததுபோலவே "குல்ஸாரின்' சிறுகதை ஒன்று இருந்தது. "ராவி நதியில்' என்கிற அந்த சிறுகதையை நான் ஏற்கெனவே குறைந்தது நூறு தடவை படித்திருப்பேன். பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த சீக்கிய குடும்பம் ஒன்றின் கதை அது. பிரிவினையின் கோரத்தை பொட்டில் அடித்தாற்போலச் சித்திரித்திருக்கும் குல்ஸாரின் அந்த சிறுகதை.

ஒரு சின்ன வேண்டுகோள் - "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' தொகுப்பை எழுத்தாளர் சிவசங்கரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாக வேண்டும்!

------------------

சென்ற வாரம் கவிதைக்கு இடமில்லை என்று எழுதியதற்கு ஏகப்பட்ட கண்டனங்கள்; வருத்தங்கள்; சிலர் தொலைபேசியில் சண்டைக்கே வந்து விட்டனர். அவர்களுடைய ஒட்டுமொத்த மனக்குமுறலையும் வெளிப்படுத்துவதுபோல முத்தமிழ்க் கவிஞர், புலவர், ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதையாலேயே என்னைச் சாடியிருக்கிறார். அவரது கவிதையிலிருந்து சில தேர்ந்தெடுத்த வரிகள் இதோ:

மன்னிப்புக் கேட்காதீர் ஐயா - இந்த

வாரத்தில் கவிதைக்கா இடமில்லை?

இடமில்லை எனக் கவிதை துரத்தப் பட்டால்

என்போன்றோர் கடலில்போய் விழுவோம்

வெடுக்கென்று கவிதையினை விரட்டிடாதீர்

வெற்றிதரும் கவிதைக்கே வணக்கம்

சொல்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com