நன்னூல் கருத்தே சரி!

சென்ற வாரம் நெல்லை சு. பாண்டியன், உயிரெழுத்துகள் 12உம், மெய்யெழுத்துகள் 18உம், ஆய்த எழுத்து (ஃ) 1உம் சேர்ந்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 31தான் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
நன்னூல் கருத்தே சரி!

சென்ற வாரம் நெல்லை சு. பாண்டியன், உயிரெழுத்துகள் 12உம், மெய்யெழுத்துகள் 18உம், ஆய்த எழுத்து (ஃ) 1உம் சேர்ந்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 31தான் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரெழுத்து 12உம், மெய்யெழுத்த 18உம் ஆக 30உம் தமிழின் "முதலெழுத்துகள்' ஆகும். ஆய்தம் (ஃ) பத்து வகை சார்பெழுத்துகளுள் ஒன்றாகும். இவ்வாறு தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாகப் பிரித்தனர்.

""பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில் தமிழ் எழுத்துகள் 247 என்று குறிப்பிட்டுள்ளது தவறான கருத்தாகும்'' என்று அவர் சரியான கருத்தைத் தவறான கருத்து என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரெழுத்துகள் "அ' முதல் "ஒள' வரை12

மெய்யெழுத்துகள் "க்' முதல் "ன்' வரை18

உயிர்மெய்யெழுத்துகள் (18 x 12) 216

ஆய்த எழுத்து (ஃ).1

ஆகமொத்தம் 247 தமிழ் எழுத்துகள் என்பது சரியான கருத்து. இது முதல் வகுப்புப் பாடநூலில் 44, 45 ஆம் பக்கங்களில் உள்ள, முதல் வகுப்பு மாணவனுக்கே தெரிந்த உண்மை. இப்பாடநூல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டதாகும். நன்னூல் படித்து முதுகலைத் தமிழாசிரியரான சு. பாண்டியன் தமிழ் எழுத்துகள் 247 என்ற சரியான கருத்தை தவறு என்று சொல்வது வியப்பையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

""பேரக்குழந்தைகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லாமல் இருந்தால் அவர்களைத் "தமிழ்த் துரோகிகள்' என்றே கூறலாம்'' என்று சு. பாண்டியன் குறிப்பிட்டிருப்பது தமிழர் பண்பாடன்று. தமிழறிஞர்கள் தம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுகிறார்கள்; தமிழ் வழியில் படிக்க வைக்கிறார்கள். ஆனால், பேரப் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் தம் கருத்தைத் திணிப்பதும், பெற்றோரின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதும் தவறாகும். மேலும், உறவில் விரிசல் ஏற்படும் என்பதையும் உணர வேண்டும்.

உயிர்மெய்யெழுத்துகளைக் கணக்கில் கொள்ளாத சு. பாண்டியன் தம் கடிதத்தில் அந்த எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளார். "க' முதலான உயிர்மெய்யெழுத்துகளை அவர் குறிப்பிட "க், அ' என்றா எழுதியுள்ளார்? இதிலிருந்தே அவர் தமிழ் எழுத்துகளைக் கணக்கிட்டது தவறு என்று தெரிகிறதல்லவா?

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்ப் பல்கலைக்கழகங்களும், அவற்றின் கீழ் இயங்கும் தமிழ்க் கல்லூரிகளும் புலவர், பி.லிட்., பி.ஏ. (தமிழ்) ஆகிய வகுப்புகளுக்கு நன்னூல் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பவணந்தி முனிவர், பல்கலைக்கழக, தமிழ்க் கல்லூரிகளின் பேராசிரியர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தினர் கருத்தை ஏற்பதா? சு. பாண்டியன் கருத்தை ஏற்பதா? வாசகர்களே முடிவு செய்து கொள்வார்கள்.

ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ ஆகிய ஐந்து எழுத்துகள் பற்றிப் பார்ப்போம். தமிழில் இந்த ஒலி உடைய சொற்கள் இல்லாமையால் தமிழ் எழுத்துகளில் இவை ஒலிகளுக்கான எழுத்துகள் இடம்பெறாத குறையன்று. இவை தமிழர்கள் உருவாக்கிய கிரந்த எழுத்துகள். அயல் மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் உள்ள ஊர்கள், நாடுகள், மக்கள் முதலிய இயற்பெயர்களை (டழ்ர்ல்ங்ழ் ய்ர்ன்ய்ள்) ஒலிப்பதற்காக இந்த எழுத்துகளைப் பண்டைத் தமிழர்கள் உருவாக்கினர். நம் முன்னோர்களும், பெற்றோர்களும், நாமும் படித்த முதல் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களில் இந்த எழுத்துகளைக் கற்பிப்பதற்கான பாடம் இடம்பெற்றன (கடந்த ஆண்டு வரை). இந்த ஆண்டு அந்த எழுத்துகளைக் கற்பிப்பதற்கான பாடம் 2ஆம் வகுப்புப் பாடநூலில் 31, 32ஆம் பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. எனவே, இயற்பெயர்களை ஒலிச் சிதைவின்றி ஒலிக்கக் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com