இந்தவார கலாரசிகன்

இந்தவார கலாரசிகன்

இந்தவார கலாரசிகன்

என்னை ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக சோதனைகள் தாக்குகின்றன. கடந்த வாரம் "கலைமாமணி' விக்கிரமனின் மறைவால் சோகம் என்றால் இந்த வாரம் என் பெருமதிப்புக்குரிய ஆசிரியர் வி.என். நாராயணனின் மறைவு. "இந்துஸ்தான் டைம்ஸ்', "தி ட்ரிப்யூன்' பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து, தனது கடைசிக் காலத்தில் "பவன்ஸ் ஜர்னல்' இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் "வி.என்.என்.' என்று சுருக்கமாக அழைக்கப்படும் வி.என். நாராயணன்.

அவசர நிலைக் காலத்தில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் வி.கே நரசிம்மன். அன்றைய அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து நின்ற ஜாம்பவான்களில் ஒருவர். அவர் மகன்தான் வி.என். நாராயணன். புலிக்குப் பிறந்தது பூனையாகிவிடாது என்பதற்கு "வி.என்.என்.' ஓர் எடுத்துக்காட்டு.

பஞ்சாப் மாநிலம் காலிஸ்தான் போராட்டத்தால் தீவிரவாதிகளின் கோரப்பிடியில் சிக்கியிருந்த வேளையில், துணிந்து சண்டீகர் நகரத்திலிருந்து வெளிவரும் "தி ட்ரிப்யூன்' நாளிதழின் ஆசிரியராக தேசியத்தைத் தூக்கிப்பிடித்த துணிச்சல்காரர் அவர்.

என்னை ஓர் ஆங்கில பத்திரிகையாளனாக வளர்த்தெடுத்தப் பெருமை வி.என்.என்.னுக்கு உண்டு. அவர் தில்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியராக இருந்தபோது எத்தனையோ நாள் மாலை வேளைகளில் அவருடன் லோதி பூங்காவில் உலாவச் செல்வதுண்டு. அப்போது அவரிடமிருந்து நான் கற்றது ஏராளம் ஏராளம். ஐந்து நாள்களுக்கு முன்னால், சிங்கப்பூரில் அவர் மகளின் வீட்டில் காலமான வி.என். நாராயணனின் இறுதிச் சடங்கிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் குறையை இந்தப் பதிவின் மூலம் தீர்த்துக் கொள்கிறேன்.

பெருமழையால் விளைந்த சேதங்களிலெல்லாம் பெரும் சேதம் புத்தகங்களுக்கு ஏற்பட்ட சேதம்தான். பொள்ளாச்சியில் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்புப் புலத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது ஆசிரியர் மாலன் இதுகுறித்துச் சொன்னபோது நான் அதிர்ந்து விட்டேன். ""இந்த ஆண்டு வழக்கம்போல சென்னை புத்தகத் திருவிழா நடக்குமா என்பது சந்தேகம்தான். தள்ளிப் போகும் போலிருக்கிறது...'' என்று தெரிவித்தார் மாலன்.

நான் உடனடியாக சில பதிப்பகங்களைத் தொடர்பு கொண்டபோது அவர்களில் பலரும் வாய்விட்டு அழாத குறை. முதல் மாடியில் அலுவலகம், கடை வைத்திருந்தவர்கள் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. அவர்களிலும் கூடப் பலரும் தங்கள் வீட்டில் தயார் நிலையில் அச்சிட்டு விற்பனைக்கு வைத்திருந்த புத்தகங்களை இழந்து விட்டிருக்கின்றனர். ஏற்கெனவே பல சிறிய பதிப்பகங்கள், நூலகத் துறையிலிருந்து புத்தகங்களுக்கான தொகை வராததால் நொடித்து போயிருக்கும் நிலையில், மழை வெள்ளம் அவர்களிடம் மிச்சம் மீதி இருந்ததையும் அடித்துச் சென்று விட்டிருக்கிறது.

"வாழும் உ.வே.சா.' என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்ட, பாரதியாரின் படைப்புகளைத் தேடிப்பிடித்துக் கால வரிசைப்படுத்திய சீனி. விசுவாதனின் வீடு அப்படியே வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. அவர் குருவி போலத் தேடித் தேடி சேகரித்த ஆவணங்கள் அனைத்துமே வெள்ளத்தில் நாசமாகிவிட்டன. அவருக்கு இருதயம் நின்றுவிடாமல் இருக்கிறதே அதற்கு அந்த இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

சாமி. சிதம்பரனார், மயிலை சீனி. வேங்கடசாமி, வெள்ளைவாரணர், இராசமாணிக்கனார், திரு.வி.க., பாவாணர், ந.சி. கந்தையா, பாவேந்தர் பாரதிதாசன், சாமிநாத சர்மா முதலியவர்கள் படைப்புகளை எல்லாம் தொகுத்து வெளியிட்டுத் தமிழுக்கு அருந்தொண்டாற்றும் "தமிழ்மண்' பதிப்பகம் அடைந்திருக்கும் சேதத்தைப் பார்த்து நான் கதறி அழாத குறை. எவ்வளவு சிரமப்பட்டு "தமிழ்மண்' இளவழகன் "தமிழக வரலாற்று வரிசை', தி.வை.கோபாலையரின் "தமிழ் இலக்கணப் பேரகராதி' போன்ற தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தார் என்பது எனக்குத் தெரியும். அத்தனையும் வெள்ளத்தில். சேதத்தின் அளவு ஒன்றரைக் கோடி ரூபாய் இருக்கும் என்கிறார் அவர்.

"தமிழ்மண்' ஓர் எடுத்துக்காட்டு அவ்வளவே. இதுபோன்ற தரமான பதிப்பாளர்கள்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள். இவர்களுக்கு அரசும், தமிழ்ச் சமுதாயமும் கைகொடுத்து உதவாவிட்டால், தரமான இலக்கியப் பதிப்பகங்கள் இல்லாமலே போய்விடும். வியாபார ரீதியாக, உடனடி விற்பனையை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படும் பதிப்பகங்கள் மட்டுமே இயங்கும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், தமிழுக்கு அதைவிடப் பெரிய இழப்பு வேறு என்னவாக இருக்க முடியும்?

அரசு ஓர் உதவி செய்ய முடியும். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், பாதிக்கப்பட்டிருக்கும் பதிப்பகங்கள் வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன்களை ஈடுசெய்ய முடியும். அல்லது மத்திய அரசிடம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பதிப்பகங்களின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோர முடியும்.

புத்தகங்கள் பொக்கிஷங்கள். பதிப்பகங்கள் நமது தமிழ்ப் பண்பாட்டின், மொழியின் தூதரகங்கள். அவற்றை அரசு காப்பாற்றாமல் யார் காப்பாற்ற முடியும்? முதல்வரின் நேரடிப் பார்வைக்கு இந்தக் கோரிக்கையை யாராவது எடுத்துச்சென்றால், அது தமிழுக்கு ஆற்றிய பெருந்தொண்டாக இருக்கும். பதிப்பகத்தார்கள் வாய்விட்டு அழுகிறார்கள். நான் மனதிற்குள் குமுறுகிறேன்.

சென்னை பல்கலைக்கழகத்தில் "பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்' நினைவுச் சொற்பொழிவு ஆற்றச் சென்றிருந்தபோது, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகப் பேராசிரியர் சாமி. பாலையா எனக்கு அன்பளிப்பாகத் தந்த புத்தகம், பேராசிரியர் பி. விருத்தாசலம் தொகுத்து வழங்கி இருக்கும் "தமிழவேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்' என்கிற புத்தகம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சரித்திரமே இந்தப் புத்தகத்தில் அடங்கி இருக்கிறது. தமிழில் வடமொழிக் கலப்பு இருந்ததையே தாங்கிக் கொள்ள முடியாமல், நல்ல பல தமிழ்ச் சொற்களைத் தந்த அந்தப் பேரறிஞர்கள் இன்றிருந்தால், இன்றைய "தங்கிலீஷ்' கலாசாரத்தைப் பார்த்து மனம் நொந்து விடுவார்கள்.

எதற்கெடுத்தாலும் "பெண்ணியம்' பேசுபவர்களுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால், பெண்ணியம் சார்ந்த "சமம்' என்கிற இந்தக் கவிதையின் வீச்சு என்னைத் திகைக்க வைத்தது! "பாலா' எழுதிய "முனிய மரம்' கவிதைத் தொகுப்பில் இந்தக் கவிதை காணப்பட்டது.

என் ஒரே கேள்விக்கு

பதில் சொல்

நாம் இருவரும் சமம் என்று

ஒத்துக் கொள்கிறேன்

விதவைக்கு

ஆண்பால் என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com