உலக வாழ்வும் இலக்கிய வடிவமும்: முத்திரைப் பதிவுகள் -24

சங்க இலக்கியம் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று படிக்கின்றோமே, அவை முழுவதும் உலக வழக்கை அடிப்படையாகக் கொண்டன. அதற்காக அதை அப்படியே திரும்பப் பாடினால் அது இலக்கியமாகுமா? செய்தித்தாளில் வரும் அன்றாடச் செய்திகள் எல்லாம் இலக்கியமாகுமா?
உலக வாழ்வும் இலக்கிய வடிவமும்: முத்திரைப் பதிவுகள் -24

சங்க இலக்கியம் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று படிக்கின்றோமே, அவை முழுவதும் உலக வழக்கை அடிப்படையாகக் கொண்டன. அதற்காக அதை அப்படியே திரும்பப் பாடினால் அது இலக்கியமாகுமா? செய்தித்தாளில் வரும் அன்றாடச் செய்திகள் எல்லாம் இலக்கியமாகுமா?

ஒரு பக்கத்தில் திருமண விழாப் பற்றிய படங்கள்; அரசியல் கொண்டாட்டங்கள் பற்றிய செய்திகள், மறுபக்கத்தில் "நீத்தார் கடன்' பற்றியவை; குண்டுவெடிப்பு இவ்வாறுதானே நாளும் வெளிவருகின்றன. உலக வழக்கமான இதைப் பாடலாகப் புனையுங்கள் என்றால், என்ன செய்வீர்கள்? "ஒருபக்கம் கொண்டாட்டம், மறுபக்கம் திண்டாட்டம், இதுதானே அன்றாட வாழ்க்கையின் தேரோட்டம்' என்று ஏதாவது வடிவப்படுத்திப் புனைய முற்படுவீர்கள் அல்லவா? இதையே "நாடக வழக்கு' என்றார் தொல்காப்பியர். அதாவது புனைந்துரை முறையிது, சுவையாக இனிதாக, வடிவாகத் தரமுயலும்போது இலக்கியம் பிறக்கிறது.

சங்க காலத்திலும் ஒரு புலவர் உலகின் இவ்விருபக்கங்களையும் நினைத்துப் பார்த்தார். ஒரே தெரு, இந்த மூலையில் உள்ள வீட்டில் சாப்பறை ஒலிக்கின்றது; எதிரே அடுத்ததொரு வீட்டில் திருமண விழா, மங்கல நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு முழவு-நாகசுர ஓசை ததும்புகிறது.

சேச்சே! இந்த உலகம் மிகக் கொடுமையானது என்றுதான் உள்ளம் வெதும்புகிறது. இக் காட்சிகளை நினைத்துப் பார்த்தார் பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவர்.

ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப

புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்

பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப

படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்

இன்னா தம்மஇவ் வுலகம்

இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே (புறம்.194)

சொல்லவந்த செய்தியை வடிவப்படுத்துவதிலேதான் இலக்கியம் இருக்கிறது. பக்குடுக்கை நன்கணியார் ஒரு மன உணர்வைப் படம் பிடித்தார். அவர் வாழ்ந்தபோது எப்படி இந்த உலகம் உணரப்பட்டதோ, அப்படித்தான் இன்றும் உணரப்படுகின்றது.

ஒரு வீட்டில் நெய்தல் பறை - சாப்பறை. யாரோ அங்கு காலமாகிவிட்டார்கள். அதே தெருவில் மற்றொரு வீட்டில் திருமணமாம் - மங்கலச் சடங்காம். ஈர்ந்தண் முழவு-மார்ச்சனை பூசப்பட்ட இனிய ஓசையுடைய முழவு-ஆம்! மேளத்தின் ஓசை; நாகசுரத்துடன் காற்றில் ததும்பி ஒலிக்கிறது. அங்கே துன்பம்; இங்கே இன்பம்!

அதோ பாருங்கள்! காதலர்கள் சோடி சோடியாய் மகிழ்ச்சியாய், மிக இனிதாக உரையாடிக்கொண்டே போகின்றார்கள். அவள், தலையில் நறுமணம் மிக்க ஒரு பூக்குடலையையே சுமந்தல்லவா போகின்றாள்! பூச் சூடியிருக்கும் அழகு அடர்ந்த கூந்தலில் சரிகின்றது; அதைச் சரிசெய்து கொள்கின்றாள்!

அதே இடத்தில் வீட்டினுள் ஒருத்தி, பிரிந்த கணவன் உரிய காலத்தில் வராததால், வழிமேல் விழி வைத்துக் கவலையோடு இருக்கிறாள். அவளின் வருந்திய கண்களில் நீர்த்துளிகள் பெருகித் தேங்கி உறைந்து நிற்கின்றன.

ஒரே ஊரில் அவ்வாறு இன்பத்தில் திளைப்போர் பலர்; துன்பத்தில் துவள்பவரும் பலர்! திருவள்ளுவரைப் போல், நன்கணியாரும் இப்படிப் படைத்தவன் மீது பாய்பவர்போல், பாய்ச்சல் காட்டுகின்றார்.

"படைத் தோன் மன்ற அப் பண்பிலாளன்' } இப்படிப் படைத்தவன், யாராயினும் உறுதியாகப் பண்பிலாதவனே! மன்ற-உறுதியாக. நமக்கு ஆறுதல் தரக் கூறிய வார்த்தைகள் அவை. சரி, இதற்கு என்னதான் முடிவு!

இன்னாது அம்மஇவ் வுலகம்,

இனிய காண்கஇதன் இயல்புணர்ந்தோரே

இந்த உலகம் கொடியது; துன்பமானது; இன்னாதது. அதற்கு நாம் என்ன செய்ய இயலும்? அதன் இயல்பு அது? அவ்வாறு படைக்கப்பட்டுவிட்டது. "இனிய காண்க!' அதன் இயல்பு தெரிந்தால், இனி வருத்தப்பட்டுப் பயன் இல்லை உலகிரே! அதன் இனிய பக்கத்தைப் பாருங்கள்! மகிழ்ச்சியைத் தேடுங்கள்! இனிதாக வாழுங்கள்! திருவள்ளுவரும் இதை ஆதரிக்கின்றார்!

இன்பம் விழையான், இடும்பை இயல்யென்பான்

துன்பம் உறுதல் இலன் (628)

முயற்சித் தடைகள், பேரிடர்கள் என எதுவாயினும் "இடும்பை (உலக) இயல்பென' அறிந்தவன், துன்பமுறுதல் இலன்! ஒரு புறப்பாடலின் அமைப்பும் அழகும் இவ்வளவு என்றால், அகப்பாடல்களைப் பற்றிக் கேட்கவேண்டுமா? தொட்ட இடமெல்லாம் இனிப்பது தேன்; கடித்த இடமெல்லாம் இனிப்பது கற்கண்டு; சங்க இலக்கியம் ஒரு தெய்வத் திருமலர்!

திருக்குறளுக்கு இறையனார் என்ற புலவர், திருவள்ளுவ மாலையில் ஓர் உவமை சொன்னார்.

என்றும் புலராது, யாணர்நாட் செல்லுகினும் நின்றலர்ந்து

தேன்பிலிற்றும் நீர்மையதாய்...

காலையில் பூத்த மலர் மாலைக்குள் வாடிவிடும். எவ்வளவு காலம் சென்றாலும், இம் மலர் புலராது வாடாது, அன்றலர்ந்த மலர்போல், என்றும் தேன்பிலிற்றும்!

நம் இலக்கியப் பெருமையை இளைஞர்கள் உணரச் செய்ய வேண்டாமா? பொதுமக்களிடம் கொண்டு போய்ப் பரப்ப வேண்டாமா? நாமே முதலில் தெரிந்துகொள்ள வேண்டாமா?

முனைவர் தமிழண்ணலின் "தொல்காப்பியத் தமிழ் நெறிகள்' நூலிலிருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com