Enable Javscript for better performance
சொல் தேடல் -32- Dinamani

சுடச்சுட

  

  திருக்குறளில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத்துணை நலம், மக்கட்பேறு ஆகிய அதிகாரங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ள வைப்புமுறை அக்காலக் குடும்ப அமைப்பினைக் காட்டுவதாய் அமைந்துள்ளது. அவ்வதிகாரங்கள் முறையே கணவன், மனைவி, குழந்தைகள் ஆகிய மூவரைப் பற்றியும் தெரிவிக்கின்றன. இம்மூவரும் சேர்ந்த அமைப்பே குடும்பம் என்பது திருவள்ளுவர் கருத்து. அவர் காட்டும் குடும்பத்தில் தாத்தா, பாட்டிகளின் முகம் தெரியவில்லை. அக்குடும்பத்துக்கு மங்கலம் மனைவியின் மாண்பு; அணிகலன் நல்ல பிள்ளைகள். குழந்தைகள் இல்லத்தின் உலவும் உயிரோவியங்கள்; இசைச் சித்திரங்கள். அம்மெல்லிய விழுதுகள் எதிர்காலத்தில் குடும்பத்தைத் தாங்கும் தூண்கள். அதனால்தான் திருமணமாகி மூன்று நான்கு ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கவில்லை என்றால், கணவன் மனைவி மட்டுமின்றி, இருவரின் பெற்றோரும் கவலைப்படத் தொடங்கி விடுகின்றனர். பெண் மனைவியாகும்போது சிறப்பும், தாயாகும்போது பெருஞ்சிறப்பும் பெறுகிறாள்.

  தாயின் வயிற்றில் வளரும் கரு எத்தனையோ இடர்களைக் கடந்து குழந்தையாகப் பிறக்கிறது. முதல் மாதம் தொடங்கிப் பத்தாம் மாதம்வரை அது படும் துன்பத்தை மாணிக்கவாசகர் போற்றித் திருஅகவலில் விளக்கமாகத் தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டுக்கு முன்பு மகப்பேறு காலத்தில் தாய்-சேய் இறப்பு மிகுதியாக இருந்தது. அந்நாளில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற வழிதெரியாமல் தவித்தனர்.

  மருத்துவ வளர்ச்சியால் இன்று மகப்பேறு தாய்க்கும் சேய்க்கும் கண்டமாக அமையவில்லை. கருவுற்ற நாளிலிருந்து முறையாக மருத்துவ அறிவுரை பெற்று நடந்துவந்தால் மகப்பேறு நல்ல முறையில் அமைகிறது. இப்பொழுது உரிய நாளுக்கு முன்பாகப் பிறந்துவிடும் குழந்தையையும், நலன் கருதி அறுவை செய்து முன்பே எடுக்கப்படும் குழந்தையையும் மருத்துவர்கள் தக்க சூழலில் வைத்துக் காப்பாற்றிவிடுகிறார்கள். இப்படிக் குழந்தைகளை வைத்துக் காக்கும் கருவியே ஐய்ஸ்ரீன்க்ஷஹற்ர்ழ்.

  அண்மையில் முகநூலில் குழந்தை வளர்ப்புக் குறித்து ஓர் அரிய பதிவு இடம்பெற்றிருந்தது. அதன் ஆசிரியர் ஒளவை நடராசனின் இல்லத்தரசியார் மருத்துவர் தாரா நடராசன் ஆவார். அப்பதிவில் இன்குபேட்டர் என்பதைச் சூடுபெட்டி என்று குறித்திருந்தார். இதற்கு இன்னும் சிறப்பான தமிழாக்கம் அமையலாம் என்று தோன்றியதால், சொல் தேடலில் இச்சொல் இடம்பெற்றது.

  இக்கருவி வளராத கருவைக் காப்பதோ, போன உயிரை மீட்பதோ அன்று. பச்சைக் குழந்தைக்குத் தேவைப்படும் வெப்பத்தைத் தந்து உயிரைப் பேணிக்காப்பது. கோழியும் முட்டையின்மீது அமர்ந்திருந்து, தன் உடல் வெப்பத்தாலேயே குஞ்சு பொரியும்படி செய்கிறது. இதனை உணர்த்துவதாகச் சொல் அமைதல் நன்று.

  துரை ஏ. இரமணன் அடைகாக்கும் கருவி என்றும், சோலை கருப்பையா அடைகாக்கும் சாதனம், செயற்கைக் கருப்பைச் சாதனம் என்றும், டி.வி. கிருஷ்ணமூர்த்தி உயிர்காக்கும் மின்பெட்டி, குழந்தையின் உயிர் மீட்புக் கருவி என்றும், நா. கிருஷ்ணவேலு சிசுப் பாதுகாக்கும் சாதனம், நோய் நுண் கிருமிகள் அடையாப் பெட்டி என்றும், உ. இராஜமாணிக்கம் அவைய காப்புப் பெட்டகம் என்றும், சந்திரா மனோகரன் கருமுதிர்வுக் கலவிருக்கை என்றும் குறிக்கலாம் என்கின்றனர். இவை பொருளை உணர்த்திய போதிலும் வழங்குவதற்கு ஏற்றனவாக இல்லை. அடைகாக்கும் கருவி என்பது கோழி வளர்த்தலுக்கு மட்டுமே பொருந்தும்.

  ப. இரா. இராசஅம்சன் முதிராப் பேற்றுப்பேணி என்றும், தி. அன்பழகன் அகரப் பெட்டி என்றும், ஜோதிர்லதா கிரிஜா காப்புப் பெட்டகம் என்றும், கோ. மன்றவாணன் உய்வுப்பேழை, சீர் வெப்பகம் என்றும், எஸ்.சுரேஷ் கருவறைப் பெட்டகம் என்றும் குறித்துள்ள சொற்கள் செறிவானவை. முதிராப் பேற்றுப்பேணி கடினமான சொல். அகரப்பெட்டி அழகிய சொல்லெனினும் பொருளைத் தெளிவாக உணர்த்தவில்லை. காப்புப் பெட்டகம் எளிய இனிய சொல். அதனினும் உய்வுப் பேழை இலக்கிய நயம் நிறைந்தது. இவை அனைத்தினும் கருவறைப் பெட்டகம் மிக அழகானது. உவமத்தொகையாய்க் கருவறை போன்ற பெட்டகம் என்று பொருள் தருவது. குழந்தைக்குக் கருவறைச் சூழலைத் தருவதுதான் இக்கருவி. எனவே, உயிர் காத்தலை முதன்மையாகக்கொண்டு கருவறைப் பெட்டகம் என்று குறிக்கலாம்.

  இக்கருவி குழந்தைக்கு அதிகமாகவோ குறைவாகவோ அன்றி உகந்த அளவு வெப்பத்தைத் தந்து காக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் தாரா நடராசனும் சூடுபெட்டி என்று குறித்துள்ளார். அதனையொட்டி வெப்பத்தை முதன்மைப்படுத்திக் கதகதப்புப் பேழை என்று வழங்கலாம். பேச்சு வழக்கில் மிதமான வெப்பத்தைக் கதகதப்பு என்பர். பெட்டி என்பதனினும் பேழை சிறப்பானது. மணிகளை வைத்துக் காப்பது பேழை. கண்மணி அனைய குழந்தையை வைத்துக் காப்பதனையும் அச்சொல்லால் குறித்தல் சிறப்புடையதுதானே? கதகதப்புப் பேழை என்னும் சொல் முட்டைகளை வைத்துக் குஞ்சு பொரிக்கும் கருவியையும் குறிக்கும் வகையில் அமைகிறது.

   

  Incubator- கதகதப்புப் பேழை அல்லது கருவறைப் பெட்டகம்.

   

  அடுத்த வாரத்திற்குரிய சொல் : Litotes

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai