Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  18

  நெல்லைக்குப் போனால் மணிமுத்தாறு அருவிக் குளியல் இல்லாமல் திரும்பிவிட முடியுமா? மனசுதான் கேட்குமா? கடந்த வெள்ளிக்கிழமை மணிமுத்தாறு அருவியில் குளித்துவிட்டு நிருபர் ஷேக் அப்துல்காதரும் நானும் நெல்லைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். மகிழுந்து ஓட்டுநர் கவிஞர் வைரமுத்து பாடல்களின் குறுந்தகடை இசைக்க விட்டிருந்தார்.
   எனக்கும் நிருபர் ஷேக் அப்துல்காதருக்கும் கவிஞர் வைரமுத்துவின் பாடல்களில் மிகச்சிறந்த பாடல் எது என்பது குறித்த விவாதம் எழுந்தது. திரைப்பாடலாக இருந்தாலும், மெட்டை ஒதுக்கி வைத்துவிட்டு அந்த வரிகளை மட்டுமே படித்தால் எது மனதைத் தொடுகிறதோ, எதில் கவித்துவம் மிளிர்கிறதோ அவையெல்லாம் சிறந்த பாடல்கள் என்பது எனது கருத்து.
   வாகன ஓட்டுநர், கவிஞர் வைரமுத்துவின் பாடல்களில் தோய்ந்தவர். அவர் இடைமறித்து ஒரு கருத்தைக் கூறினார். - "அவர்கள்' திரைப்படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் "காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!' வரிகளைப்போல, கவிஞர் வைரமுத்துவின் பாடல்களில் எது சிறந்தது என்று தேர்வு செய்வது இயலாது!
   இப்படியொரு பரம ரசிகனை கவிஞரிடம் நேரில் பேசவைத்துவிட வேண்டும் என்று செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டேன். இணைப்புக் கிடைக்கவில்லை. நாங்களும் நெல்லைக்கு வந்துவிட்டோம்.
   நான் அழைத்திருந்ததைப் பார்த்துக் கவிஞர் வைரமுத்து அன்று மாலையில் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் விவரத்தைச் சொல்லி, அழைத்த காரணத்தையும் கூறினேன். அப்போது அவர் ஒரு செய்தியைச் சொன்னார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் மேலே குறிப்பிட்ட எல்லாமே.
   ""நமது இளம் பருவத்தில் நமது மனதை ஏதாவது ஒரு பாடல் தொட்டுவிட்டால், எத்தனை ஆண்டுகளானாலும் அந்தப் பாடலின் தாக்கம் நம்மைவிட்டு நீங்காது'' என்பதுதான் கவிஞர் வைரமுத்து சொன்ன செய்தி. வேடிக்கை என்னவென்றால், இளம் பருவத்தில் என்னை மிக அதிகமாகப் பாதித்த அதே பாடல்தான் கவிஞர் வைரமுத்துவையும் பாதித்திருக்கிறது. அந்தப் பாடல் எங்கள் இருவரை மட்டுமல்லாமல், ஐம்பதுகளில் பிறந்த தலைமுறையினர் பலரையும் பாதித்திருக்கிறது.
   கவியரசு கண்ணதாசன் "பாசமலர்' திரைப்படத்தில் எழுதிய "நதியில்
   விளையாடி, கொடியில் தலைசீவி' பாடலின் பாதிப்பு இல்லாத தமிழர்கள் இருக்க முடியுமா?
   
   
   நானும் எழுத்தாளர் மாலனும் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஒரே காலகட்டத்தில் படித்தவர்கள். அதற்குப் பிறகு சாவியிலும் இணைந்து பணியாற்றியவர்கள். அவர் முன்னாலே போவார், நான் தொடர்ந்து செல்வேன். "சாவி' வார இதழில் மட்டுமல்ல, "தினமணி' நாளிதழிலும் அப்படித்தான். எனக்கு முன்னால் "தினமணி' ஆசிரியராக அவர் இருந்திருக்கிறார்.
   "கண்ணதாசன்' இதழில் அவருடைய சிறுகதைகள் வரும். "கணையாழி'யில் அவருடைய கவிதை, கட்டுரைகள் வரும். "சாவி'யில் அவருடைய "தமிழன்' பதில்களும், தலையங்கங்களும், கட்டுரைகளும் வெளிவரும். இவை அனைத்துமே என்னில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. "சாவி' வார இதழில் "டைனிங் டேபிள்' என்கிற பகுதியில் தேசிய, சர்வதேசப் பிரச்னைகளை சிற்றுண்டி வேளையில் அமர்ந்து குடும்ப உறுப்பினர்கள் விவாதிக்கும் அந்த பாணி, தமிழ் பத்திரிகை உலகுக்குப் புதிது.
   எழுத்தாளர் மாலன் தமிழுக்கு ஓர் அற்புதமான கொடையை அளித்திருக்கிறார். அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த 14 சிறுகதைகளைத் தேர்வு செய்து, தொகுத்து "கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்....' என்ற தலைப்பில் வழங்கி இருக்கிறார்.
   தனது முன்னுரையில் மாலன் குறிப்பிடுவதுபோல, தமிழர்களின் இடப்பெயர்வுக்குப் பல காரணங்கள் இருந்திருக்கின்றன. களம் எதுவாயினும், காரணம் எதுவாயினும், இடம்பெயர்ந்து செல்ல நேரிட்ட எல்லாத் தருணங்களிலும் தமிழர்கள் தமிழையும் இலக்கிய ஆர்வத்தையும் தங்களுடன் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ""தான் பெற்ற பிள்ளைச் செல்வங்களை, கட்டிய மனைவியை, பெற்றெடுத்த தாய், தந்தையை, ஈட்டிய பொருளை, பழகிய நண்பர்களை, வாழ்ந்த ஊரைப் பிரிந்து செல்லும் சிலர் கிடைத்த சூழலிலும் தமிழைத் தங்களோடு எடுத்துச் சென்றனர் அல்லது தமிழ் அவர்களோடு சென்றது'' என்கிற மாலனின் கூற்று மறுக்கவொண்ணா உண்மை.
   தேச எல்லைகளைத் தகர்த்திருக்கின்ற இணையம் தமிழுக்குப் புதுமைகளை மட்டுமல்ல, பொதுமைகளையும் தந்திருக்கிறது என்று கூறும் மாலன், உலகின் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும், வெவ்வேறு வயதினரான 14 எழுத்தாளர்களையும், அவர்களது சிறந்த சிறுகதைகளையும் அடையாளம் கண்டு தொகுத்துத் தந்திருக்கிறார்.
   அ.முத்துலிங்கம் நன்றாகவே தாயகத் தமிழர்களுக்கு அறிமுகமாகிவிட்டவர். சண்முக சிவா, பொ.கருணாகர மூர்த்தி, சந்திரவதனா, கீதா பென்னெட், ஆசிப் மீரான், எம்.கே.குமார், நாகரத்தினம் கிருஷ்ணா, சிங்கப்பூர் இலக்கியத்தின் நவீன முகமான லதா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், உமா வரதராஜன், ஆ.சி.கந்தராஜா, அ.யேசுராசா என்று இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் எழுத்தில் தனித்துவம் இருக்கிறது. அவர்களது தனித்துவம் மாறுபட்டது. அவர்களது மொழிநடை வேறுபட்டது. இவர்களால்தான் நவீனகாலத் தமிழிலக்கியம் மெருகு பெற்றது.
   மாலனைப் போலவே எனக்கும் அதிர்ச்சி. லதாவின் "அலிசா' கதையில் வரும் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள மின்சாரம் இல்லாத, பொதுப் போக்குவரத்து இல்லாத "கருங்கல் தீவு' ஆச்சரியமாக இருக்கிறது.
   இந்த எழுத்தாளர்கள் நமது கண்களுக்கு அப்பால் இருக்கலாம். ஆனால் அவர்களது எழுத்து நமது இதயத்திற்கு மிகமிக அருகில், உணர்வுகளைத் தட்டி எழுப்பும் விதத்தில் இருக்கின்றன.
   இன்றைய தமிழ்ச் சிறுகதை எப்படி இருக்கிறது என்பதற்கு இதில் இடம்பெற்றுள்ள கதைகள்தான் எடுத்துக்காட்டு!
   
   
   இணையத்தில் படித்த இந்தக் கவிதை பிடித்திருந்தது. யார் இவர், என்ன விவரம் என்பதெல்லாம் தெரியாது. "அலகுகளால் செதுக்கிய கூடு' என்கிற கவிதை பிடித்திருந்தது, பகிர்ந்து கொள்கிறேன்.
   
   நீங்கள் நினைக்கலாம்
   வெறும் ஈர்க்குகளும், சுள்ளிகளும் என்று
   ஆனால் பிரித்தெறிந்தது
   ஒரு வாழ்க்கைக்கு போதுமான
   ஒட்டுமொத்த என் உழைப்பு
   
   காலத்தை திரும்பிப் பார்த்து
   கை சேதங்களை கணக்கிடும்போது
   நிராயுத பாணிகளாய் நிற்பீர்கள்
   எதுவுமற்று எதிலியாய்
   குற்றவாளி கூண்டில்!
   
   அப்போது நான் அலகுகளால்
   தயார் செய்து கொண்டிருப்பேன்
   இன்னொரு கூட்டை
   வேறொரு கிளையில்.
   அடுத்த வாரம் சந்திப்போம்...
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai