Enable Javscript for better performance
உவமைகளால் பெயர்பெற்ற புலவர்கள்!- Dinamani

சுடச்சுட

    உவமைகளால் பெயர்பெற்ற புலவர்கள்!

    By மதி  |   Published on : 11th August 2016 12:27 PM  |   அ+அ அ-   |    |  

    tm-1

    எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகையும் ஒன்று. அகப்பொருள் பற்றிய இந்நூலுள் 401 பாடல்கள் உள்ளன. இவற்றை 206 புலவர்கள் பாடியுள்ளனர். ஆனால், 25க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை. அதனால், அப்புலவர்களை எவ்வாறு பெயரிட்டு அழைப்பது என்று தெரியாததனால் அவர்கள் பாடிய உவமைத் தொடர்களாலேயே அவர்களைப் பெயரிட்டு அழைத்திருக்கின்றனர். அவ்வாறு உவமைத் தொடராற் பெயர் பெற்ற புலவர்கள் சிலருடைய பாடல்களைக் காண்போம்.

    செம்புலப் பெயல் நீரார்:

    "யாயும் ஞாயும் யாராகியரோ'(குறு.40, குறிஞ்சி) என்ற பாடலில், இடம்பெறும் செம்புலமும் பெயல் நீரும் கலந்தாற்போல நம் அன்புடை நெஞ்சமும் கலந்தது என்ற இப்படியொரு உவமையைப் பாடிய புலவரின் பெயரை அறியமுடியவில்லை. தொகுத்தவர், இப்பாடலில் இடம்பெறும் உவமையைக் கொண்டே அப்புலவர்க்கு "செம்புலப் பெயல் நீரார்' எனப் பெயரிட்டிருக்கிறார்.

    அணிலாடு முன்றிலார்:

    தலைவி, தோழியிடம் "தலைவன் உடனுறைந்து வாழ்ந்த காலத்தில் விழாக்கோலம் கொண்ட ஊர் போல மகிழ்ந்திருந்தேன். பிரிந்திருந்த நேரத்தில் சிறிய ஊரில் மக்கள் நடமாட்டம் இல்லா வீட்டில் அணில் ஒன்று முற்றத்தில் விளையாடுவது போல பொலிவிழந்து வருந்துவேன்' என்ற பொருளுடைய பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அதனால், "மக்கள் போகிய அணிலாடு முன்றில்' (குறுந்.41,பாலை) என்ற தொடரை வைத்து அவருக்கு "அணிலாடு முன்றிலார்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

    ஓரேருழவனார்:

    ஈரம் பொருந்திய செவ்வியையுடைய பசுமையான காட்டினை, ஒற்றை ஏரினை மட்டுமே வைத்திருக்கக்கூடிய உழவன், நேரத்தின் அருமை கருதி விரைந்து உழுவான். ""ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓரேர் உழவன் போல''(குறுந்.131) என்ற தொடரில் காட்டிய உவமையைக்கொண்டே அப்புலவர்க்கு "ஓரேழுழவனார்' என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

    காலெறி கடிகையார்:

    "காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன' (267) எனும் உவமையைப் பாடிய புலவர் பெயர் தெரியவில்லை. பொருள் தேடப் பிரிய நினைக்கும் தலைவன், தலைவியின் அழகு நலத்தை எண்ணி பிரிவைத் தவிர்த்தான்.

    ...... ....... கரும்பின்

    காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன

    வால் எயிறு ஊறிய வகையில் தீம் நீர்

    கோள் அமைக் குறுந்தொடிக் குறுமகள் ஒழிய

    ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்!

    "கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டினை உண்டாள் போன்ற' என்ற உவமையால் இப்புலவர் இப்பெயர் பெற்றார்.

    கல்பொரு சிறுநுரையார்:

    "காமநோயைப் பொறுத்து ஆற்றுவாயாக என்று சொல்பவர், தாம் அக்காமத்தின் தன்மையை அறிந்திலரோ?' என்று தோழிக்குத் தலைவி கூறுவதாக அமையப் பெற்ற பாடல் இது:

    காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது

    அறியலர் கொல்லோ (290)

    மிக்க வெள்ளத்தில் பாறையின் மேல் மோதிச் சிதறும் சிறிய நுரைகரைதல்போல மெல்ல மெலிந்து நானும் (உயிர்) இல்லாதவளாக ஆகிவிடுவேன் என்றாள் தலைவி. ""பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல'' (290,நெய்தல்). எனவே இப்புலவர் இவ்வுவமையால் இப்பெயர் பெற்றார்.

    இவர்கள் தவிர, கள்ளில் ஆத்திரையனார், ஓரில் பிச்சையார், பதடி வைகலார், குப்பைக் கோழியார், கவை மகனார், ஊட்டியார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மீனெறி தூண்டிலார், விட்டகுதிரையார் முதலிய புலவர்களும் இவ்வாறு உவமைத்தொடர்களால் பெயர்பெற்றவராவர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp