Enable Javscript for better performance
இந்த வார கலாரசிகன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இந்த வார கலாரசிகன்

    By   |   Published On : 31st January 2016 01:43 AM  |   Last Updated : 31st January 2016 01:43 AM  |  அ+அ அ-  |  

    tm5

    நீதிபதி ராமசுப்பிரமணியனின் "சொல் வேட்டை' புத்தக வெளியீட்டு விழாவிற்கும், மதுரை செந்தமிழ்க் கல்லூரி விழாவுக்கும் சென்றவாரம் மதுரைக்குச் சென்றிருந்தபோது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் நிறைவேறவில்லை. மதுரையில் நான் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் தவறாமல் வந்துவிடுவார் அவர். வயோதிகமும் தள்ளாமையும் அவரது உற்சாகத்துக்குத் தடையாக இருந்ததே இல்லை.

    தன் மனைவி ஹேமலதா மீது அவருக்கிருந்த தாளாக் காதல் அபரிமிதமானது. அவரது மறைவு பாலசுப்பிரமணியத்தைத் தளர்ந்து போகச்செய்துள்ளது. அந்த நிலையிலும், மதுரையில் ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு தங்கி இருந்து, தன் மனைவியின் நினைவுடன் கழித்து வந்தவர் பாலசுப்பிரமணியம். இப்போது உடல்நலம் குன்றியிருப்பதால் தன் குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார்.

    பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்திக்க முடியவில்லையே என்கிற மனவருத்தத்துடன்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தேன். இங்கே அலுவலகத்திற்கு வந்து, புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்த புத்தகங்களை பரிசீலித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு வியப்பொன்று காத்திருந்தது.

    எழுத்தாளர் கர்ணன், ஹேமலதா பாலசுப்பிரமணியம் எழுதிய "இவனும் அவனும்' என்கிற அவரது சிறுகதைத் தொகுப்பை அனுப்பித் தந்திருந்தார். கூடவே அவர் உடல்நலம் குன்றியிருப்பது பற்றிய சிறு குறிப்பையும் இணைத்திருந்தார்.

    வழக்கம் போல தன் மனைவி ஹேமலதாவிற்கு அர்ப்பணித்திருந்த அந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் கர்ணன் அணிந்துரை எழுதியிருக்கிறார். கும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.ப.ராஜகோபாலன், நா.பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் பாலசுப்பிரமணியம்.

    கடந்த ஆண்டு வெளிவந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளைப் படித்தால் ஒரு சிறிய வருத்தம் மேலோங்குகிறது. இந்த அருமையான சிறுகதை எழுத்தாளரை ஏன் இதழியல் உலகம் அடையாளம் கண்டு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் அது.

    அடுத்த முறை மதுரை செல்லும்போது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து, இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்த்தை எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று, அந்தச் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் தீர்மானித்துக் கொண்டேன்.

     

     

    கடந்த வாரம் "வானதி' திருநாவுக்கரசு பற்றிய பதிவில் ஒரு சிறிய தவறு நேர்ந்திருக்கிறது. வானதியாரின் தன் வரலாற்றுப் பதிவின் பெயர் "ஏணிப்படிகள்' அல்ல, "வெற்றிப்படிகள்'. தவறுக்கு மன்னிக்கவும்.

    வானதி திருநாவுக்கரசின் நினைவு வந்ததும் "வெற்றிப்படிகள்' புத்தகத்தை மீண்டும் ஒருமுறை படிக்க முற்பட்டேன். அடேயப்பா, அவரது வாழ்க்கைப் பாதை ஒரு நெடுந்தூர ஓட்டமாகத்தான் இருந்திருக்கிறது. அந்தப் பயணத்தில் அவர் சந்தித்த, நெருங்கிப் பழகிய பிரபலங்கள் பற்றிய குறிப்புகள் வியப்பிலாழ்த்துகின்றன.

    புத்தகத்தின் முதல் 74 பக்கங்கள் "வானதி' திருநாவுக்கரசு தேவகோட்டையில் படித்து, வளர்ந்து, சென்னைக்கு வந்து பதிப்பக உரிமையாளரானது வரையிலான தன் வாழ்க்கைக் குறிப்புகளை உள்ளடக்கியவை. அதற்குப் பிறகு, தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் அவர் நெருங்கிப் பழகியவர்கள் அனைவர் பற்றிய குறிப்புகள் சுவாரசியமான நிகழ்வுகள், அந்த ஆளுமைகளிடம் திருநாவுக்கரசு பார்த்த தனித்துவங்கள் என்று புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பு.

    ""காஞ்சி முனிவர், ஜயேந்திரர், கிருபானந்த வாரியார், தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகிய நால்வரின் அருட்பார்வையும், ஆன்மிக ஆசியும்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது'' என்கிற வானதியாரின் அசைக்க முடியாத நம்பிக்கை, நேரிடையான அனுபவங்களின் வாயிலாகப் பெற்றது என்பதை அவரது எழுத்துகள் எடுத்துரைக்கின்றன.

    ""உங்கள் வானதி பதிப்பகப் புத்தகங்களை என் நூலகத்தில் ஆயிரக்கணக்கில் வைத்துள்ளேன். இன்னும் நல்ல நல்ல தமிழ்ப் புத்தகங்களை வெளியிடுங்கள். உங்கள் தமிழ்த் தொண்டை இந்த நாடு மறக்காது'' என்று எம்.ஜி.ஆர். கூறியிருப்பது அவருக்குப் புத்தகங்கள் படிப்பதில் இருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோல, சிவாஜியை ஒரு "புக் லவ்வர்' (புத்தகங்களின் காதலன்) என்று குறிப்பிடும் திருநாவுக்கரசு, சிவாஜியும் நாவல்கள், கதைகள், குறிப்பாகச் சரித்திர நாவல்கள் நிறையப் படிப்பார் என்றும், வானதி பதிப்பகத்தின் முக்கியமான வாடிக்கையாளராக விளங்கினார் என்றும் பதிவு செய்கிறார்.

    ராஜாஜி, காமராஜர், ம.பொ.சி., ஆர்.வெங்கட்ராமன் ஆகியோருடனான அவரது தொடர்பும், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி இருவருடனான நெருக்கமும் நமக்குப் பல

    சுவையான செய்திகளைத் தர உதவியிருக்கிறது.

    கவியரசரின் கவிதைகளைத் தொகுத்து வெளியிடத் தீர்மானித்தபோது, கண்ணதாசன் திராவிட இயக்கத்திலிருந்து வெளியேறி காங்கிரஸில் ஐக்கியமாகி இருந்தார். "தேசிய உணர்வுள்ள கவிதைகளை மட்டும் தொகுத்து வெளியிடுவோம். பழைய கவிதைகளைத் தொகுப்பில் சேர்த்தால் முரண்பாடாக இருக்கும்' என்று திருநாவுக்கரசு சொன்னபோது, அதற்குக் கவியரசர் தந்த பதில் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    ""அந்த மாதிரியெல்லாம் முரண்பாடு அது இது என்றெல்லாம் பார்க்க வேண்டாம். ஒரு கவிஞன் கடந்துவந்த பாதை படிக்கிறவர்களுக்கு நன்றாகத் தெரிய வேண்டும். கொள்கை மாற்றமோ, உடன்பாடோ, முரண்பாடோ எதுவானாலும் அவற்றை வருங்கால மக்களும், காலமும்தான் தீர்மானிக்க வேண்டும். நான் பாடிய எல்லாக் கவிதைகளையும் ஒன்று விடாமல் நூல்களாக வெளியிடுங்கள்'' என்றாராம் கண்ணதாசன்.

    இந்த ஒளிவுமறைவே இல்லாத

    துணிச்சல் கவியரசருக்கு மட்டுமேதான் சாத்தியம்.

    இதுபோல எத்தனை எத்தனையோ பிரமுகர்கள், அவர்கள் குறித்த செய்திகள் என்று வரலாற்று ஆவணப் பதிவாக அமைந்த வானதி திருநாவுக்கரசுவின் "வெற்றிப்படிகள்' புத்தகத்தை இன்னும் எத்தனை முறை படித்து ரசிப்பேன் என்று எனக்கே தெரியாது.

     

     

    புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது த. மாலா பிரியதர்சினி எழுதிய "முதல் பயணம் வெற்றியை நோக்கி' என்கிற கவிதைத் தொகுப்பு. இதுதான் அவரது முதல் கவிதைத் தொகுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு கவிதை. இந்தக் கவிதை சொல்லியிருப்பதைவிட சொல்லாமல் விட்டிருக்கும் வார்த்தைகள்தான் அழுத்தமாகவும், ஆழமாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

     

    பிச்சைக்காரன்

    செத்துக் கிடந்தான்

    அருகில் ஒரு நாய்

    செய்வதறியாமல்

    வாலாட்டியபடி!


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp