Enable Javscript for better performance
தமிழ்ச் செல்வங்கள்: ஒல்- Dinamani

சுடச்சுட

  
  tm-7

  "ஒல்' என்பது ஓர் ஒலிக் குறிப்பே!கல் என வீழ்ந்த அருவி "ஒல்' என ஆறாய்த் தவழ்கின்றதாம்! பரஞ்சோதியார் படைப்பு இது! ஒல்லெனத் தவழ்வது சமவெளியில் அன்று! துள்ளி வரும் காட்டில்! அதனால், ""கானத்து ஒல்லெனத் தவழ்ந்து'' என்றார். மக்கள் செவியில் தென்னை, பனை ஆகியவற்றின் கீற்று காற்றில் ஆடுதல் "ஒல்' என ஒலித்தது. அதனை "ஓலை' என்றனர். பச்சோலைக்கு இல்லை ஒலி என்பதால், காய்ந்த ஓலைக்கு ஒலியுண்டு என்பது தெளிவாகும்.
  ஓலைதான், செவ்வியல் மொழிக் கொடைச் "செம்மல்' எனல் உண்மை! அது, ஒலித்தலால் ஓலை ஆயது; நறுக்கி எடுத்தலால் "நறுக்கு' எனப்பட்டது. நகத்தால் கிள்ளி எடுத்தலால் "கிள்ளாக்கு' என்றாயது. ஓர் ஓலையுடன் மற்றோர் ஓலையை நீள அகலம் பார்த்து, இணை சேர்த்தலால் "சுவடி' ஆயது. அச் சுவடிதான் தொல்காப்பியம் முதலாம் நூல்களின் வைப்பகம் ஆகி, நமக்கு ""நூற் கொடைக்கு மேற்கொடை இல்லை'' எனக் காட்டியுள்ளது. பதம் பார்த்து எடுத்துப் பயன்படுத்திய ஓலை "ஏடு' எனப்பட்டது.
  ஓலையில் கணக்கு எழுதினர்; அவர் "ஓலைக் கணக்கர்' எனப்பட்டார். ஓலையில் கடிதம் எழுதினர்; ஓலைத் தீட்டு, நீட்டோலை எனப் பெயர் பெற்றது. இளமை கடந்த பனை ஓலை, பொன்னிறமானது. அதனால், மங்கல அணியாம் தாலி (தாலம் = பனை) ஆயது.
  "குட வோலை' என்னும் ஊராள் அவைத் தேர்தலுக்கும் பயன்பட்டது. குழந்தையரின் இடுப்பில் "மந்திர ஓலை' அரைஞாண் கயிற்றொடு கட்டப்பட்டது. மகளிர் காதணியாம் "தோடு' ஓலையெனவும் வழங்கப்பட்டது. முழுமுதல் இறையும் ""தோடுடைய செவியன்'' எனப்பட்டான். குரல்வளை இல்லாதவை எழுப்புவது ஓசை; இடி, அலை, சங்கு முதலியவை எழுப்புவது ஓசை.
  குரல் வளையுடைய உயிரிகள் எழுப்புவது ஒலி. அதனால், ""ஓசை ஒலி எல்லாம் ஆனால் நீயே'' என்று முறை வைப்புச் செய்தார் நாவுக்கரசர். முன்னவர் தம் அந்நெறி பழ நாளிலேயே "ஓசை ஒலி' என இரண்டும் வேறுபாடற்றவை ஆகி விட்டன. "ஆன்றோர் சான்றோர்' என்பார் வெவ்வேறு பொருளால் பெயர் பெற்றவர். பின்னர் வேறுபாடற்று வழங்கத் தலைப்பட்டமை போல்வது அது!
  குரல்வளையுடைய உயிரி ஒலிப்பதன் வழியாக ஏற்பட்டதே தமிழ் இசையின் முதல் ஒலியாம் "குரல்'. அதன் அடையாள எழுத்தோ எம் முயற்சியும் செய்யாமல் வாயைத் திறந்து காற்றை வெளிப்படுத்திய அளவில் உண்டாகும் "ஆ' என்னும் ஒலி. நெட்டொலி எழுத்துகள் ஏழும் ஏழிசையின் அடையாளங்களாய் அமைந்தன. இயலே இசையின் ஒலியும் குறியீடுமாய் இலங்கும் மாட்சிமை எண்ணத்தக்கதாம்.
  ஒலியால் வந்த ஓலை, ஓலைப் பெட்டி, ஓலைக் கொட்டான், ஓலைப் பேழை, ஓலைக் குடில், ஓலைக் குடிசை, ஓலைக் குடை, ஓலைச் சுருள், ஓலைப் பாய் எனப் பலப் பல செய்பொருள் வடிவங்கள் பெற்றன; ஓலை வெடியாகவும் வெடித்தது.
  ஓலை ஒலி வழியால் "ஓலம்' முறையிடலும், அழுது அரற்றலும் "ஓலாட்டு' எனத் தாலாட்டலும் ஆயின.
  தினை காக்கும் முல்லை நிலத்து மகளிர் "ஆலோலம்' எனத் தினை கவரும் பறவையை ஓட்டினர்; கவணும் வீசினர். இருபக்கமும் நின்று மன்னரை வாழ்த்துவார் வழியாக, இருபால் அமர்ந்த அமைச்சர், படைத் தலைவர், புலவர் கூடிய அவை ஓலக்கம், "திருவோலக்கம்' எனப் பெயர் கொண்டது.
  ஓலை வடிவில் உள்ள மீன் ஒன்று "ஓலை மீன்' எனப் பெயர் கொண்டது. "ஓலைப் பாம்பு' என ஒரு பாம்பு வகையும் உண்டு. சாவு அறிவிப்பு ஓலை வழியாக அயலூர்க்கு அனுப்பிய பழைய வழக்கம் பின்னர், "ஓலையைக் கிழித்து விட்டான்' என்று இறப்பைக் குறிக்கும் மங்கல வழக்கும் ஆகிவிட்டது.
  ஓயாமல் ஒலிக்கும் ஒலுங்கை மறக்க முடியுமா? தன் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கிறதே!

  - தொடர்வோம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai