சுடச்சுட

  
  tm-4

  'கணபதி' என்கிற சொல் இருக்கு(ரிக்) வேதத்தில் வழங்கப்படுகிறது. இச்சொல்லிற்குக் "கணங்களுக்குத் தலைவர்' என்று பொருள். சைவர்கள் சிவகணங்களுக்கு எல்லாம் இவரைத் தலைவர் என்பர். இறை நம்பிக்கை உடையவர்கள் எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வணங்காமல் தொடங்குவதில்லை.

  இவர் ஐந்து கைகளைப் பெற்றிருப்பதால் "ஐங்கரன்' என்றும், யானை முகத்தினை உடையவராகையால் "யானை முகத்தோன்' என்றும், பெரிய வயிற்றைப் பெற்றிருப்பதால் "மகோதரன்' என்றும் அழைக்கப்படுகிறார். இவருடைய நிறத்தை ஒளவையார் "நீலநிறம்' என்பார். வடமொழி நூல்கள் இவருக்கு "சிவப்பு' நிறத்தைக் குறிப்பிடுகின்றன. "சுக்லாம் பரதரம்' என்கிற வடமொழி சுலோகம் இவரைப் பலவாறு வர்ணித்து, இவரை வணங்கினால் விக்கினங்களாகிய தடைகள் நீங்கும் எனக் குறித்துள்ளது.

  இவருடைய வடிவத்தை யோகிகள் "ஓங்கார வடிவம்' எனக் குறிப்பிட்டு, ஆறு ஆதாரங்களில் முதல் ஆதாரமாகிய மூலாதாரத்தில் இவரை வைத்துத் தியானிப்பர். இவரைத் திருமூலர்,

  ""ஐந்து கரத்தனை யானை முகத்தனை

  இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை

  நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

  புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே''

  என்று கூறித் திருமந்திரத்தைத் தொடங்கியுள்ளார். பரிபாடல், விநாயகரை ""ஐங்கைம் மைந்த''(பரி.3:37) என்று குறிப்பிட்டுள்ளது. இவருக்கு "ஆதிதேவர்' என்றொரு பெயருண்டு. "விநாயகர் அகவல்' இயற்றிய ஒளவையாருக்குக் கணபதி ஞானோபதேசம் செய்துள்ளார் என்றும், அவருடைய இறுதிக் காலத்தில் அவரைக் கயிலாயத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார் என்றும் அறிஞர் கூறுவர்.

  தமிழ்ப் புலவர்கள் "பிள்ளையார்சுழி' என்ற ஒன்றைக் குறிப்பிட்டுவிட்டுத் தம் எழுத்துப் பணியைத் தொடங்குவர். தமிழ்நாட்டு உழவர்கள் தங்களுடைய உழவுத் தொழிலைப் பிள்ளையாரை வேண்டியே தொடங்குவர். சிறப்பாக நன்செய் நிலத்தில் நாற்று நடும்போதும், விதைக்கும்போதும் அந்நிலத்தின் வடகிழக்கு மூலையில் மண்ணினால் இரண்டு பிள்ளையார் உருவம் பிடித்து வைத்து வழிபாடு செய்து, அதன்மேல் விதைநெல், விதை நாற்றைத் தூவிவிட்டு அதன்பின்தான் ஏனைய பணிகளைத் தொடங்குவர். இச்செய்தியைப் புறநானூறு, ""நெல் உகுத்துப் பாவும் கடவுள்'' எனக் குறித்துள்ளது. விதை நெல்லைக் கடவுள் மேல் தூவி அதன் பின்னர் விதைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்றளவும் இருந்து வருகிறது.

  அகத்தியர் கங்கை நீரைக் கமண்டலத்தில் அடைத்து வைக்க, அதை விநாயகப் பெருமான் காக்கையாக மாறிக் கவிழ்க்க அந்நீர் காவிரியாகப் பெருகிற்று என்பது வரலாறு. இச்செய்தியை ""காகம் கவிழ்த்த காவிரிப் பாவை'' என்று மணிமேகலைக் குறிப்பிட்டுள்ளது.

  உழவர்களும் சைவர்களும் ஒரு செயலைத் தொடங்கும்முன் பசுஞ்சாணியால் இரண்டு உருவங்களைப் பிடித்து வைத்து அருகம்புல் சூட்டிப் பிள்ளையார் வழிபாடு செய்த பிறகுதான் அச்செயலைத் தொடங்குவர். இவ்விரண்டு உருவங்களுள் ஒன்று மூத்த பிள்ளையாகிய விநாயகரையும், மற்றொன்று இளைய பிள்ளையாகிய முருகனையும் குறிக்கும். இவ்விருவரையும் பிள்ளையார் என்னும் பன்மைச் சொல்லாலே அழைப்பர்.

  கடவுளின் முதிய நிலையைத் தந்தை என்றும், இளைய நிலையைப் பிள்ளை என்றும் கருதி வழிபடுதல் நம் சமயப் பேரறிஞர்களின் வழக்கமாகும். மேலும், அப்பிள்ளை நிலையை இரண்டாகப் பிரித்து மூத்த பிள்ளையென்றும் இளைய பிள்ளையென்றும் அழைப்பர். இவ்விருவருள் முறையே விநாயகரை அண்ணன் (மூத்தபிள்ளை) என்றும், முருகனைத் தம்பி (இளையபிள்ளை) என்றும் குறிப்பர்.

  சிதம்பர சுவாமிகள் முருகன் மீது இயற்றியுள்ள "திருப்போரூர் சந்நிதிமுறை'யில் இரண்டு பிள்ளைகளையும் குறிப்பிட்டுள்ளார். "பெரியகட்டியம்' என்னும் பகுதியின் முதற்பாட்டில், மழையைப் போல் விளங்கும் அருள், அதனைப் பொழிகின்ற யானைமுகப் பெருமான் அவருடைய மடியின்கண் வீற்றிருக்கும் முருகப்பெருமானாகிய குலமணி என்கிறார். அஃதாவது, மூத்த பிள்ளையாகிய விநாயகரின் மடியில் இளைய பிள்ளையாகிய முருகப்பெருமான் வீற்றிருக்கும் காட்சியை நம்முன் கொண்டு வருகிறார். இதை,

  ""மழையின்இல் கியகருணை பொழியும்மழ களிறதிக

  மடியின்மிசை நிலவுகுல மணியே'' (பா.1)

  என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

  மகாகவி பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது, அங்குள்ள மணக்குள விநாயகப் பெருமானிடம் பேரன்பு கொண்டு அக்கோவிலுக்குச் சென்று வணங்கி வருவார். அப்பொழுது அவர் இயற்றியதுதான் "நால்வர் நான்மணி மாலை' என்பர். அதில்,

  ""யான்முன் உரைத்தேன் கோடிமுறை

  இன்னும் கோடி முறைசொல்வேன்

  ஆன்மா வான கணபதியின்

  அருள்உண்டு அச்சம் இல்லையே'' (பா.23)

  என்றார். எனவே, கணபதியை வணங்கக் கவலைகள் தீரும்!

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai