இந்த வார கலாரசிகன்

எனக்கு, மகாகவி பாரதியாருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களான வ.ரா., பாரதிதாசன்
இந்த வார கலாரசிகன்

எனக்கு, மகாகவி பாரதியாருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களான வ.ரா., பாரதிதாசன், வ.வே.சு. ஐயர், குவளைக் கண்ணன், மண்டயம் சீனிவாசாச்சாரியார், கவியோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோர் மீது ஒருவிதப் பொறாமை கலந்த மரியாதை உண்டு. மரியாதைக்குக் காரணம் அவர்கள் பாரதியாரின் நண்பர்களாக இருந்தவர்கள் என்பது. பொறாமைக்குக் காரணம், அவர்கள், பாரதியார் எழுதிய பாடல்களை அவரது வாயால் பாடியதைக் கேட்கும் பெரும் பேறு பெற்றவர்கள் என்பது.

பாரதியாருக்கு சங்கீதமும் நன்றாகத் தெரியும். தன்னுடைய பாடல்களை ராகங்களில் மெட்டமைத்துப் பாடும் திறமை உள்ளவர். திடீரென்று அவருக்குக் கவிதை பிரவாகமெடுக்கும். உரக்க சத்தமிட்டுப் பாடத் தொடங்கி விடுவார். சில நேரங்களில், தன் நண்பர்கள் வந்தால், அன்று தான் எழுதியிருக்கும் கவிதையை அவரே பாடிக் காட்டுவார்.

புதுச்சேரி கடற்கரையில் கப்பலில் வரும் சரக்குகளை இறக்குவதற்காகக் கட்டப்பட்ட பாலத்தை "பியர்' என்று அழைப்பார்கள். நண்பர்கள் புடைசூழ அந்தப் பாலத்தில் போய் ஆனந்தமாகக் காற்று வாங்கிக்கொண்டே தேசவர்த்தமானம் பேசிக் கொண்டிருப்பாராம். அப்போது அவர் தான் எழுதிய பாடலைப் பாட, அதை அவர்கள் கேட்டு ரசிப்பார்களாம். இது வ.ரா.வின் பதிவு.

மகாகவி பாரதியார் தனது பாடலை அவருடைய சொந்தக் குரலில் பாடிக் கேட்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்கிற எனது ஏக்கத்திற்கு இப்போது வடிகால் கிடைத்திருக்கிறது. முண்டாசுக் கவிஞனின் வரிசையில் வந்த சமகாலக் கவிஞர் ஒருவர் தனது குரலில் தனது எழுத்தைப் படித்துக் கேட்கும் பெரும் பேறு எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே கிடைக்க இருக்கிறது; அதுவும் பாரதியாரைப் பற்றியே!

ஒரு வாரம் பொறுமை காத்தால், அந்த வரலாற்று நிகழ்வு எங்கே, எப்போது நடைபெறுகிறது என்பதைக் கூறுகிறேன்.

கதை சொல்வதும், வேறு பல விஷயங்கள் போல, நமது நாட்டிலிருந்து வெளியேறிய சரக்குதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் பஞ்சதந்திரக் கதைகளும், விக்கிரமாதித்தன் கதைகளும் இங்கே பரவலாக அறியப்பட்டிருந்தது. அவற்றைத் தழுவித்தான் அரேபியா, பெர்ஸியா, துருக்கி போன்ற நாடுகளில் அவரவர் மொழியில் கதை சொல்லும் வழக்கம் உருவானது. ஆனால், ஐரோப்பியர்கள் கதையை ஒரு கலையாய் வளர்த்தது போல நாம் வளர்க்கவில்லை.

சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களால் கட்டமைக்கப்பட்ட நாவல் என்கிற கதை வடிவம் தற்போது ஆலமரமாய்த் தழைத்தோங்கி நிற்கிறது. அதன் தொடர்ச்சியாக 19-ஆம் நூற்றாண்டில் சிறுகதைகள் பிரபலமாயின.

நாவலுக்கும் சிறுகதைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாடு கதையின் நீளத்தைப் பொருத்தது மட்டுமல்ல. நீளம் ஒரு முக்கியமான விஷயமும் அல்ல. நாவல் எழுதுபவனுக்கு எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்கிச் சொல்ல முடியும். கற்பனைகளால் அலங்கரிக்க முடியும். வார்த்தை வித்தகம் காட்ட முடியும். சிறுகதை எழுதுவது அப்படிப்பட்டதல்ல. சிறுகதை எழுத்தாளனுக்கு, சொல்வதைவிட சொல்லாமல் விடுவது என்கிற தந்திரம் அதிகம் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ.வே.சு. ஐயர் எழுதிய "குளத்தங்கரை அரசமரம்' என்று சொல்வார்கள். புதுச்சேரியிலிருந்து அவர் நடத்தி வந்த "கம்ப நிலையம்' என்னும் பதிப்பகத்தால் 1917-இல் வ.வே.சு. ஐயர் வெளியிட்ட "மங்கையர்க்கரசியின் காதல்' என்கிற தொகுப்பில் இந்தக் கதை இடம் பெற்றிருக்கிறது. ஏறத்தாழ அதே நேரத்தில் மகாகவி பாரதியாரும் "பஞ்சகோணக் கோட்டை' என்கிற சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார்.

ஆனால், சிறுகதை இலக்கியம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது 1940களில்தான். தமிழகத்தில் சிறுகதை வளர்ச்சி குறித்து க.நா.சு. ஒரு பதிவைச் செய்திருக்கிறார்.

""மணிக்கொடிக்காரர்கள் தமிழுக்கும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கும் ஏதோ சேவை செய்ததாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு இலக்கிய மறுமலர்ச்சிக்குள்ள பெருமைகள் அல்லயன்ஸ் குப்புசாமி அய்யருக்கும் சேர வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். எத்தனை பத்திரிகைகள் எத்தனை சேவை செய்தாலும் தமிழில் ஆரம்ப காலத்தில் சிறுகதைகளைத் தொடர்ச்சியாக நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்று பாடுபட்டவர் குப்புசாமி அய்யர்'' என்கிற க.நா.சு.வின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் "கதைக் கோவை' தொகுப்புகளைப் படித்தபோது புரிந்து கொண்டேன்.

சிறுகதைகள் விலைபோகாத 70 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்ந்து ராஜாஜி, கு.ப.ரா., கி.வா.ஜ., வ.வே.சு. ஐயர் உள்ளிட்ட பிரபல கதாசிரியர்களின் சிறுகதைகளைப் புத்தகங்களாக வெளியிட்டவர் குப்புசாமி அய்யர். தமிழகத்தில் பிரபல சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியலை எடுத்து அவர்களது சிறந்த சிறுகதைகளை எல்லாம் தொகுத்து, "கதைக் கோவை' என்கிற பெயரில் நான்கு தொகுதிகளாக 1942-இல் வெளியிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

225 கதாசிரியர்களின் அவர்களது சிறந்த சிறுகதைகளைப் பொறுக்கி எடுத்து நான்கு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் "கதைக் களஞ்சியம்' அப்போது வெளியிடப்பட்டபோது விலை போகவில்லை. அவற்றில் பாதிக்கும் மேல் விற்பனையாகாமல் கரையானுக்கு இரையாகின. இப்போது மறுபதிப்பாக வெளியாகி இருக்கும் "கதைக் கோவை' தொகுப்புகள் தமிழ் சிறுகதைகள் குறித்த வரலாற்று ஆவணமாகியிருக்கிறது.

தமிழில் குறிப்பிடும்படியான அத்தனை எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இதில் அடங்கி இருக்கிறது. ஆனந்த விகடன், கல்கி, கலாமோகினி, திருமகள், கலைமகள், காவேரி, கிராம ஊழியன், குமரி மலர், சங்கநாதம், சுதேசமித்திரன், தினமணி, நவசக்தி, நவயுவன், பாரததேவி, பாரதமணி, ஜகன்மோகினி, பிரசண்ட விகடன், ஹனுமான், சங்கு, வஸந்தம், மிராசுதார், லோகோபகாரி என்று பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள் இதில் இடம்பெறுகின்றன.

இப்படியொரு அற்புதமான ஆவணப் பதிவைச் செய்திருக்கும் "அல்லயன்ஸ்' குப்புசாமி அய்யரை, பழந்தமிழ் இலக்கியங்களின் ஏட்டுச் சுவடிகளைக் கண்டெடுத்துப் பிரசுரித்த "தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாத ஐயருக்கு நிகராக வைத்துப் போற்றினாலும் தகும். "கதைக் கோவை' சிறுகதைத் தொகுப்பின் முதல் சிறுகதை எது தெரியுமா? மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் எழுதிய "தருமம் தலை காக்கும்'!

விமர்சனத்திற்கு வந்திருந்தது கவிமதி சோலச்சி எழுதிய "காட்டு நெறிஞ்சி' என்கிற கவிதைத் தொகுப்பு. அதில் "நாகரீகம்' என்றொரு கவிதை.

விலைக்கு

வாங்கினேன்

விலையுயர்ந்த

வியாதியை...

நாகரீகத் தொட்டிலில் நான்...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com