சுடச்சுட

  
  TM-7

  பாரதியார் குறித்துத் தான் எழுதியதைப் படிக்க இருக்கும் கவிஞர் யாராக இருப்பார் என்று ஊகித்தவர்களுக்குப் பாராட்டு. ஊகிக்க முடியாதவர்களுக்கு விடை, "கவிராஜன் கதை' எழுதிய கவிஞர் வைரமுத்து அல்லாமல் அவர் வேறு யாராக இருக்க முடியும்?
  ஆமாம்! நாளை, அதாவது திங்கள்
  கிழமை "தினமணி' நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரையாக மகாகவி பாரதியார் பற்றி "யுகத்துக்கு ஒருவன்' என்கிற தலைப்பில் எழுதும் கவிஞர் வைரமுத்து, அந்தக் கட்டுரையை, தனது குரலில் அப்படியே படிக்க இருக்கிறார். இடம் மயிலாப்பூர் "பாரதிய வித்யா பவன்' அரங்கம். நேரம் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை. அவரது உரைக்கு முன்பாக சாஸ்வதி பிரபு குழுவினர் பாரதியார் பாடல்களை இசைக்க இருக்கிறார்கள்.
  பாரதியார் குரலில் அவருடைய கவிதைகளைக் கேட்க வாய்ப்பில்லாத குறையைத் தனது குரலில் பாரதி குறித்துத் தான் எழுதியதைப் படித்துத் தீர்த்துவைக்க இருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இவரன்றி வேறு யாருக்கு அந்தத் தகுதியுண்டு?

   

  கடந்த வியாழனன்று வேலூரை அடுத்த பள்ளிகொண்டாவில் நமது "தினமணி' நாளிதழின் திருவண்ணாமலை நிருபர் சரவணப் பெருமாளுக்கும், ரத்தினகிரி முருகன் கோயிலில் சென்னை நிருபரும், செய்தி ஆசிரியர் ராஜசேகரின் மகனுமான ஜெகதீசனுக்கும் திருமணம். அந்த இரண்டு திருமணங்களிலும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதில் எனக்குக் கிடைத்த மனநிறைவைச் சொல்லி மாளாது. கடந்த ஞாயிறன்று நடந்த, சென்னை தினமணி பதிப்பின் பக்க வடிவமைப்பாளர் சரவணனின் திருமணத்திற்குப் போகமுடியவில்லையே என்கிற வருத்தத்தை இந்தத் திருமணங்கள் சற்றே தீர்த்து வைத்தன.
  நிருபர்கள் சரவணப் பெருமாள், ஜெகதீசன் ஆகிய இருவரின் திருமணத்திற்குப் போனபோதுதான் என்னுடைய குடும்பம் எவ்வளவு பெரிது என்பதை உணர்ந்தேன். ஒரு மூத்த சகோதரனிடம் வைத்திருப்பதுபோல என்னிடம் "தினமணி'
  ஆசிரியர் குழு சகாக்கள் வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும், அன்பும், பாசமும் புரிந்துகொள்ள முடிகிறது. அதைவிட, அவர்களது குடும்பத்தாரும், நட்பு வட்டமும்கூட, தங்களில் ஒருவனாக என்னை நேசிப்பதைப் பார்க்கும்போது நான் நெகிழ்ந்து விடுகிறேன்.
  அந்த இரண்டு திருமணங்களில் கலந்து கொள்வதற்காக வேலூர் சென்றிருந்தபோது, வி.ஐ.டி. பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கினோம். ஓர் ஆல விருட்சமாகக் கிளை பரப்பி வளர்ந்திருக்கும் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 26,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்கிற மக்கள் தொடர்பு அதிகாரி நந்தகுமாரின் தகவல் மலைக்க வைத்தது. ஆந்திரத்தின் புதிய தலைநகரான அமராவதியில் 200 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு அங்கே வி.ஐ.டி. மாநிலப் பல்கலைக்கழகமாகச் செயல்பட இருப்பதாக இணைவேந்தர் ஜி.வி. செல்வம் தெரிவித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

  வி.ஐ.டி. வேந்தர் ஜி. விஸ்வநாதனுக்குத் தமிழகம் கடமைப்பட்டிருக்கிறது. நேர்மைக்கும், அரசியல் தூய்மைக்கும், நாடாளுமன்றச் செயல்பாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் 95 வயது இரா. செழியனைத் தனது பல்கலைக்கழக வளாகத்தில் தங்க வைத்திருக்கிறார் அவர். அதுமட்டுமல்ல, இரா. செழியன், நெடுஞ்செழியன் ஆகியோரின் சொந்த சேகரிப்பில் இருந்த நூல்களை எல்லாம் நூலகமாக்கி வைத்திருக்கிறார். அந்த நூலகத்திலேயே இரா. செழியனுக்கு அலுவலகமும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
  வி.ஐ.டி. விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு பெரியவர் இரா. செழியனை சந்திக்காமல் திரும்பிவர மனம் எப்படி இடம் கொடுக்கும்? செய்தி ஆசிரியர் ராகவன், துணை செய்தி ஆசிரியர் சரவணன், பக்க வடிவமைப்பாளர் சரவணன், வேலூர் நிருபர் சமுத்திரராஜன் ஆகியோர் புடைசூழ இரா. செழியன் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்றேன்.
  இரா. செழியன் ஓர் அறிவுச் சுரங்கம், தகவல் பெட்டகம். அதுவும், அவரிடம் அண்ணாவைப் பற்றிப் பேசத் தொடங்கினால், பேசிக்கொண்டே இருக்கலாம். அண்ணாவை நிழலாகவே கடைசிவரை தொடர்ந்த அந்தப் பெருந்தகை, பல நெகிழ்ச்சியான சம்பவங்களை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பு, இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தைக் "கருப்பு நாள்' என்று அவர் விமர்சித்தது போன்ற சந்தர்ப்பங்களில் அண்ணா எடுத்த நிலைப்பாடு குறித்து விளக்கியபோது, அண்ணாவின் சாதுர்யம் பிரமிக்க வைத்தது.

  அண்ணா மரணமடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால், தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தபோது சொன்னாராம் - ""எனக்குப் பின்னால் கட்சி உடைஞ்சுடுமய்யா...!'' என்று. அப்படிச் சொன்னபோது எந்த அளவுக்கு அண்ணா மனமுடைந்து போயிருந்தார் என்பதை நினைத்தால், விழி நனைகிறது.

  எனக்கொரு ஆசை. அவருடன் தங்கியிருந்து இரா. செழியன் குறித்த ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்பதுதான் அது!


  இன்று பாரதியார் நினைவுநாள். "தினமணி' நாளிதழின் 83-ஆவது ஆண்டு விழா. இந்த செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 1893-ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 11-ஆம் தேதிதான், சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநகரில் உலக சமயங்கள் மாநாட்டில் உரையாற்றியதும். சுவாமி விவேகானந்தருக்கும், மகாகவி பாரதியாருக்கும், "தினமணி'க்கும் இப்படியொரு தொடர்பு இருப்பதால்தானோ என்னவோ, மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தனது "சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை' புத்தகத்தின் இரண்டாவது பாகத்திற்கு என்னிடம் அணிந்துரை எழுதி வாங்கிக் கொண்டார்.
  அணிந்துரை எழுதுவதற்காகப் படிப்பது என்பது வேறு. விமர்சனத்திற்காகப் படிப்பது என்பது வேறு என்பதை, புத்தக வடிவில் சுவாமி கமலாத்மானந்தரின் இத்தொகுப்பைப் படித்தபோது உணர்ந்து கொண்டேன். இப்புத்தகத்தின் முதல் பாகத்தில், சுவாமி விவேகானந்தர் குறித்து பாரதியார் எழுதியது, பேசியது உள்ளிட்ட எல்லா விவரங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த இரண்டாவது பாகத்தில், சுவாமிஜியின் சீடர்கள் குறித்தும், ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தைச் சேர்ந்த சான்றோர்கள் குறித்தும் பாரதியார் எழுதியிருப்பதைத் தொகுத்தளித்திருக்கிறார்.
  இந்தியாவுக்கென்று முதன் முதலில் தேசியக் கொடியைத் தயாரித்த பெருமைக்குரியவர் சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அரவிந்தர், மகாகவி பாரதி என்று பலருக்கும் சகோதரி நிவேதிதைதான் வழிகாட்டி. அவரைப் பற்றிய அற்புதமான பதிவுகளை இந்தத் தொகுப்பில் இணைத்திருப்பதற்காக சுவாமி
  கமலாத்மானந்தரை வணங்கத் தோன்றுகிறது.இதன் பின்னால் இருக்கும் சுவாமி கமலாத்மானந்தரின் உழைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!
  இத்தொகுப்பின் இரண்டு பாகங்களும் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும்.


  கவிஞர் ஆரிசன் எழுதிய "கனவற்றவர்களின் வாழ்க்கை' கவிதை நூல் விமர்சனத்திற்கு வந்திருந்தது. அதில் "ரியல் எஸ்டேட்' என்றொரு கவிதை.

  உரங்கள்
  தின்று தீர்த்த
  மிச்சத்தை
  விழுங்கிக் கொண்டிருக்கிறது
  ரியல் எஸ்டேட்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai