சுடச்சுட

  
  tm-7

  நேற்று "தினமணி' நடத்திய "ஆரோக்கியம்' கண்காட்சியில் கலந்துகொள்ள, திருச்சி சென்றிருந்தேன். புரட்டாசி முதல் தேதி. அதிலும் சனிக்கிழமை. ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசிக்காமல் திரும்பினால் எப்படி? ""ஐயனே அரங்கா என்றழைக்கின்றேன், மையல் கொண்டு ஒழிந்தேன் எந்தன் மாலுக்கே...'' என்று குலசேகர ஆழ்வார் மெய்யுருகப் பாடிய அரங்கநாதனை சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது என்பது ஒருபுறம். திருவரங்கம் ஆலயத்தில் நிகழ்ந்திருக்கும், வார்த்தையால் விவரிக்க முடியாத மாற்றம் இன்னொரு புறம்.
  நமது ஆலயங்கள் வெறும் சமயச் சின்னங்கள் மட்டுமல்ல. தமிழனின் வரலாற்றையும், கட்டடக் கலைத் தேர்ச்சியையும் பறைசாற்றும் பண்பாட்டு அடையாளங்கள்; சரித்திரச் சான்றுகள். நமது முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள். கோட்டை கொத்தளங்கள் பராமரிப்பே இல்லாமல் இடிந்து தரைமட்டமாகிவிடும். ஆனால், இறை வழிபாட்டுடன் இணைந்த ஆலயங்கள் காலம் கடந்தாலும், அவ்வப்போது திருமுழுக்கு நடத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் என்பதை உணர்ந்திருந்தார்கள். தமிழனின் பெருமையைப் பறைசாற்ற நமக்கு இருப்பதெல்லாம் நமது பண்டைய சிற்ப, கட்டடக் கலையின் உன்னதத்தைப் பறைசாற்றும் ஆலயங்கள் மட்டுமே. சமய உணர்வு இல்லாமல் போயிருந்தால் இவையும் இல்லாமல் போயிருக்கும்.
  திருவரங்கம் ஆலயத்தில் அப்படி என்ன அற்புதம் நிகழ்ந்திருக்கிறது? நீண்டகாலமாகப் போதிய பராமரிப்பு இல்லாமல் போயிருந்ததால் ஆலய வளாகத்தில் உள்ள கட்டடங்கள் பல மண்ணுக்குள் பல அடிகள் புதைந்துபோய் விட்டிருந்தன. அவ்வப்போது காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த காலங்களில் கோயிலுக்குள்ளும் வெள்ளம் வந்து, அதன் வண்டல் தங்கிவிட்டிருக்கிறது.
  அரபு மொழியில் "தெüஹீத்' என்றொரு வார்த்தை இருப்பதாகத் "தமிழ் நேசன்' சிங்கப்பூர் முஸ்தபா அடிக்கடி கூறுவார். அந்த வார்த்தைக்கு, "இறைவன் எதையாவது நடத்த விரும்பினால், அவனே அதற்கான நபரைத் தேர்ந்தெடுத்து, அதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்தி, அதை நிறைவேற்றிக் கொள்வான்'' என்பது பொருள். அப்படி, அரங்கன் தனது ஆலயத்தில் மண்டிக் கிடக்கும் மண்ணையும், குப்பைக் கூளங்களையும் அகற்றி சுத்தப்படுத்தித்
  தனது ஆலயத்தை சுத்தப்படுத்தத் தேர்ந்தெடுத்த நபர் இணை ஆணையர் ஜெயராமன்!
  அடேயப்பா, ஏறத்தாழ ஒரு லட்சம் டன் மண்ணும், குப்பையும் அகற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ 40 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. டி.வி.எஸ். மோட்டார் - சுந்தரம் கிளேட்டன் நிறுவனங்களின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசன் ஏறத்தாழ 15 கோடி ரூபாயை இந்தப் பணிக்காக நன்கொடை வழங்கியிருக்கிறார். மண்ணுக்குள் போய்விட்டிருந்த பல மண்டபங்களும், அவற்றின் அடித்தளத்தில் இருந்த சிற்பங்களும் இப்போது வெளியே வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. இப்படியொரு அதிசயத்தை நடத்திக் காட்டியிருக்கும் வேணு ஸ்ரீநிவாசனையும், இணை ஆணையர் ஜெயராமனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
  ""இறைத் தொண்டு செய்வதற்கான வாய்ப்பையும் தந்து, அதற்கு ஊதியமும் கிடைக்கிறது என்றால் இது இறையருள் என்பதல்லாமல் வேறென்ன?'' என்று பணிவுடன் பகரும் ஜெயராமன் நமது கோயில்கள் பற்றிக் கூறிய ஒரு கருத்து சிந்திக்கத்தக்கது.
  ""மேலை நாடுகளில் எழுப்பப்பட்ட சரித்திரச் சின்னங்களும், கட்டடங்களும் அடிமைகளின் உழைப்பினால் மட்டுமே உருவாக்கப்பட்டவை. ஆனால், நமது ஆலயங்கள் பக்தியால் எழுப்பப்பட்டவை. இதுபோன்ற கலைச் செல்வங்களை அடிமைகள் உளியாலும் சுத்தியலாலும் உருவாக்கி இருக்க முடியாது. பக்தியும், அர்ப்பணிப்பும் இல்லாமல் இது சாத்தியமே இல்லை!''
  ஆமாம். அவர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. திருவரங்கம் சென்றால், அங்கே நிகழ்த்தப்பட்டிருக்கும் அதிசயத்தைத் தயவு செய்து பார்த்துவிட்டு வாருங்கள். நமது தொன்மையும் பெருமையும் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது!

   

  எனக்கு இலங்கைத் தமிழர்தம் பிரச்னை குறித்தும், ஈழத்தமிழர் வரலாறு குறித்தும் புரிதலை ஏற்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் "புதிய பார்வை' இதழில் "தீக்குள் விரலை வைத்தேன்' தொடரை எழுதிய தோழர் சி. மகேந்திரன். இன்னொருவர் அந்த இதழின் பொறுப்பாசிரியராக இருந்த, "ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம்' என்ற தொடரைத் "தினமணி'யில் எழுதிய பாவை சந்திரன்.
  எப்போதோ தொடராகப் படித்த "தீக்குள் விரலை வைத்தேன்' இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இலக்கியக் கருத்தரங்கம் ஒன்றிற்காக முதன்முதலில் எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், பொன்னீலன் ஆகியோருடன் இலங்கைக்குப் பயணமான தோழர் சி. மகேந்திரன், அதனைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்திற்கும் பலமுறை சென்று, அந்த மக்களின் பிரச்னைகளை நேரில் அறிந்து, அவர்களது நிலையைப் பார்த்துத் தனக்குத் தீக்குள் விரலை வைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டதை, வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அதுதான் இந்தப் புத்தகம்.
  ""இந்நூல் வெறும் பயணக் கட்டுரை நூலல்ல, படித்து மறந்துவிட. இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் ஒரு முக்கிய காலகட்ட வரலாற்றைக் கூறி நிற்கும் நூல். நாவல் போல் படிக்கத்தக்க வேகமான நடையில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் வாழ்க்கையையும், சிங்கள மக்களது வரலாற்றையும் இந்நூல் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்நூல் இலங்கை வரலாற்றையே சுருக்கமாகத் தருகிறது'' என்று இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவரான செ. கணேசலிங்கமே தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கும்போது, அதைவிட அதிகமாக நான் என்ன கூறிவிட முடியும்?
  இலங்கைத் தமிழர்தம் போராட்ட
  வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, தோழர் சி. மகேந்திரனைப் போலவே எனக்கும் தமிழன் என்கிற முறையில் குற்ற உணர்வு சுடுகிறது. வள்ளுவப் பேராசானின் குறள் நினைவுக்கு வருகிறது.
  "தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
   தன்நெஞ்சே தன்னைச் சுடும்''

   

  கடந்த ஒரு மாதமாக அலுவலக வேலை நிமித்தம் தொடர்ந்து தமிழகமெங்கும் ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். வறண்டு போயிருக்கும் நதிகளைக் கண்டு வேதனைப்படுகிறேன். எனது வேதனையை வெளிப்படுத்துவதுபோல இருக்கிறது கவிஞர் பிறைநிலா கடந்த வார ஆனந்தவிகடன் "சொல்வனம்' பகுதியில் எழுதியிருக்கும் "பயணம்' என்கிற கவிதை.

  வெகுநாளாகிவிட்டது
  நீரோடும் ஒரு நதியைக் கண்டு
  ரயிலில் போகும்போது
  பேருந்தில் போகும்போது
  மோட்டார் சைக்கிளில் போகும்போது
  நதிகளைக் காணாத ஏமாற்றம்
  தற்செயலாக
  நடந்து செல்லும்போது பார்க்கிறேன்
  லாரியில்...
  எங்கு பயணப்படுகிறது நதி?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai