சுடச்சுட

  
  TM-5

  இராமநாதபுரம் சமஸ்தான அவையில் மாம்பழக் கவிராயர் என்ற புலவர் சிறந்து விளங்கினார். அவருக்குக் கண் பார்வை இல்லை. அவர் "ஏக சந்த கிராஹி' (ஒரு முறை சொன்னாலே கிரகிக்கும் ஆற்றல்) என்ற பட்டம் பெற்றவர்.
  ஒரு சமயம் கந்தசாமி கவிராயர் என்ற புலவர் ஏதோவொரு காரணத்திற்காக மாம்பழக் கவிராயரை அவமரியாதை செய்துவிட்டார். அந்தச் சம்பவத்தை மாம்பழக் கவிராயரால் மறக்க முடியவில்லை.
  பிறிதொரு சமயம் கந்தசாமி கவிராயர் நூறு பாடல்கள் கொண்ட ஒரு "சதகத்தை' இயற்றிக்கொண்டு வந்து இராமநாதபுரம் சமஸ்தான அவையில் அரங்கேற்றினார்.
  அவருக்குப் பாடம் கற்பிக்க இதுதான் நல்ல சமயம் என்று தீர்மானித்த மாம்பழக் கவிராயர், உடனே எழுந்து அவையினரை நோக்கி, ""புலவர் பாடிய இந்த நூறு பாடல்களும் என்னுடையது. அதைப் புலவர் திருடிக்கொண்டு வந்து இங்கு அரங்கேற்றம் செய்திருக்கிறார்!'' என்று பொய்ப் புகார் செய்தார். அப்போது அவையில் இருந்தவர்கள், ""அப்படியானால் அதிலே சில பாடல்களையாவது திருப்பிச் சொல்லுங்கள் பார்க்கலாம்!'' என்று கேட்டார்கள்.
  உடனே, ஏக சந்த கிராஹியான மாம்பழக் கவிராயர், ""சில பாடல்கள் என்ன? நான் இயற்றிய பாடல்கள்; எனக்குத் தெரியாதா? பாடல்கள் முழுவதையும் சொல்கிறேன், கேளுங்கள்!'' என்று கூறி நூறு பாடல்களையும் அப்படியே திருப்பிச் சொன்னார். அவையில் இருந்தோர் அனைவரும் வியப்படைந்தனர்.
  பாடலை அரங்கேற்றம் செய்த கந்தசாமி கவிராயர் நடுநடுங்கிப் போனார். "பல நாள்கள் இரவும் பகலுமாக ஓய்வின்றி சிந்தித்து நான் கற்பனை கலந்து உருவாக்கிய பாடல்கள் இவருக்கு எப்படித் தெரிந்தது. அவர் இயற்றியது போல் அல்லவா அப்படியே திருப்பிச் சொல்கிறார். என்ன விந்தையிது?' என்று குழம்பினார். எனவே, செய்வதறியாது திகைத்த புலவர், மாம்பழக் கவிராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
  உடனே மாம்பழக் கவிராயர், கந்தசாமி கவிராயரை அருகே அழைத்து, அன்புடன் அணைத்தபடியே அவையோரைப் பார்த்து, ""அவையோர்களே, உண்மையிலேயே இவர் பாடி அரங்கேற்றிய நூறு பாடல்களும் இவர் இயற்றியதுதான். நான் இயற்றியதாகச் சொன்னதும் பொய்; இவர் திருடியதாகவும் சொன்னதும் பொய். இவர் பிறரை மதிக்க வேண்டும் என்பதற்காகவே, அவருக்கு புத்தி புகட்டவே அப்படிச் சொன்னேன். நான் "ஏக சந்த கிராஹி'யாகையால், இவர் பாடியபோது நூறு பாடல்களையும் என்னால் கிரகிக்க முடிந்தது. அதைத் திருப்பிச் சொல்லவும் முடிந்தது. எனக்கு இறைவன் அளித்த நினைவாற்றலே சாதித்தது. புலவர் குற்றமற்றவர்!'' என்று கூறி அவரைப் பாராட்டியதோடு அவர் இயற்றிய பாடல்களையும் புகழ்ந்து பாராட்டினார்.
  இவ்வாறு நினைவாற்றல் வேந்தர்களாக இருந்த மகாத்மா காந்தி, சர்.டி. முத்துசாமி ஐயர், சுரேந்திரநாத் பானர்ஜி போன்றோரைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai