சுடச்சுட

  
  TM-4

  கல்வி என்ற சொல்லும் அது தொடர்பான பல கருத்துகளும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பதிவாகியுள்ளன. கல்விக்கு அடிப்படையான நூலியல், உரையியல் சிந்தனைகள் தொல்காப்பியத்தில் காணப்படுவதும் கல்வியியல் சிந்தனையாகக் கருதத் தோன்றுகிறது. எனவே, தொல்காப்பியத்திலும் சங்க கால இலக்கியங்களிலும் காணப்படும் கல்விமுறை, மொழிக் கல்வி, கல்வியின் பயன் போன்றவை விளக்கப்பட்டிருப்பது சிறப்பாக அறியத் தகுந்தது.

  கல்வி முறை

  ""உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
  பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்றே''. (183. 1-2 )

  என்ற புறநானூற்று அடிகள் கல்வி முறையில் இரண்டு வகை இருப்பதை உணர்த்துகின்றன. ஒன்று: குருகுலக் கல்வி. மற்றொன்று: பணம் கொடுத்துப் படிக்கும் தனியார்ப் பள்ளிக் கல்வி. இரண்டாவது அடி, கற்றல் முறையை வழிபட்டுக் கற்றலைக் குறிக்கிறது. திருவள்ளுவரும்(395) பணக்காரன் முன் ஏழை இருப்பதுபோல உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்று(ஏங்கி தாழ்ந்து நின்று) கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
  மொழிக் கல்வி: கல்வி என்பது தாய்மொழிக் கல்வியைக் குறிக்கும். இடைக்காலத்தில் பிற மொழி கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் இருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதன் ஆணிவேராகச் சங்க காலத்திலும் வடமொழி அதாவது சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் அறிந்தவர்கள் தமிழகத்தில்
  இருக்க வேண்டும் என்பதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன. அதன் உச்சகட்டமாகத்தான் செய்யுள் ஈட்டச் சொற்களில் வட சொல்லைத் தொல்காப்பியர் சேர்த்திருப்பதும் (இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே(எச்சவியல்.1) குறிப்பிடத்தகுந்தது. அதாவது, சங்க காலத்தில் இருமொழிக்
  கல்வி இருந்தது என்பதற்கு அதை ஒரு சான்றாகக் கொள்ளலாம்.
  அதற்கு மேலாக, நூலின் வகைகளாக முதல் நூல், வழி நூல் என்று இரண்டு வகையைக் குறிப்பிட்டு(மரபியல்.95) வழி நூலின் வகைகளில் ஒன்றாக "மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்' என்று கூறுவது(மரபியல்.99) இன்று நாம் வழங்கும் மொழிபெயர்ப்பு நூல்களே. அதன் உள்கிடை என்ன? அன்று தமிழகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிக் கல்வி இருந்திருக்க வேண்டும். அல்லது தாய்மொழியில் இல்லாத அறிவுத்துறை பிற மொழியில் அறிந்துகொள்ள அந்நாட்டுக்குச் சென்று, அந்த மொழியையும் அறிவுத் துறையும் கற்றுத் தன்னுடைய தாய்மொழிச் சமூகத்துக்காக மொழிபெயர்ப்பில் ஈடுபட வேண்டும் என்பதே. தமிழகத்தில் இருமொழி அறிந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று பொருள்.

  கல்வியின் பயன்: புறநானூற்றுப் பாடல் ஒன்று(183.3-10) அக்காலக் கல்வியின் பயனைச் சமூக நிலையிலிருந்து விளக்குகிறது.

  ""பிறப்போர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
  சிறப்பின் பாலால் தாயின் மனந் திரியும்
  ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
  மூத்தோன் வருக என்னாது அவருள்
  அறிவுடையோன் ஆறு அரசன் செல்லும்
  வேற்றுமைத் தெரிந்த நாற்பாலுள்ளும்
  கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
  மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே''

  இங்குக் கல்வியின் பெருமையை சமூகப் படிநிலை நோக்கில் - 1. குடும்பம் (பெற்றோர்/உடன்பிறந்தோர்), 2. சொந்த சமூகத்துக்குள் அரசுச் சிறப்பு, 3. மாறுபட்ட சமூக மதிப்பு உடைய சமூகங்களுக்கு இடையே கிடைக்கும் சமூக மதிப்பு ஆகியவை விளக்கப்படுகின்றன.
  வள்ளுவரும் விலங்கு / மனிதன் மாறுபாட்டுக்கு (410) ஒரு காரணி கல்வி என்று கூறுவது கல்வி மனித சமூகத்தின் அடிப்படைப் பண்பாக மிகைப்படுத்திக் கூறுகிறது. கற்றல் பயன் அறிவு பெறுதலே. அதாவது அறியாமை நீங்குதல் என்று எதிர்மறை நிலையில் வள்ளுவர் அதைக் காதலுக்கு உவமையாக ""அறிதோறும் அறியாமைக் கண்டற்றால்''(ஒரு பொருளை அறிய அறிய அறியாமை வெளிப்படுவது போல்-1110) என்று கூறினாலும் இன்னொரு குறளில்(397) யாதும் ஊரே என்ற கருத்தை ""யாதானும் நாடாமால் ஊராமால்'' என்று குறிப்பிடுகிறார்.
  கல்வி தன்னிலையில் சுயமரியாதை போல, சுய கெüரவம் கொள்ளவும் பங்கு கொள்கிறது என்கிறார் தொல்காப்பியர். அவர் பெருமிதம் என்று மெய்ப்பாட்டுக்கு உரிய கூறுகளில் ஒன்றாகக் (தறுகண், புகழ்மை, கொடையென சொல்லப்பட்ட பெருமிதம்(9) நான்கே) கூறுவது உயர்கல்வி அல்லது உயர் கல்வியில் சாதனை என்ற அகநிலைச் சாதனையின் ஒருவித புறநிலை, மெய்ப்பாட்டின் வகையாகிறது. அந்நிலையில், தமிழகத்தில் கல்வியின் அவசியம் உணரப்பட்டுள்ளது புலனாகிறது.
  கல்வி நிலை: "கல்வி நிலை' என்பது அடிப்படைக் கல்விக்குப் பிறகு தானே விரும்பும் நூலைப் படித்து அத்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல். அது பற்றியும் பழந்தமிழ் நூல்கள் பதிவு செய்துள்ளன. தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாக "நோக்கு' என்பதைக் கூறி(செய்.1) அதை,

  ""மாத்திரை முதலா அடிநிலை காறும்
  நோக்குதற்குக் காரணம் நோக்குஎனப் படுமே''
  (செய்.103)

  என்று விளக்கியிருப்பது கவிதைப் படிப்பதற்குரிய இலக்கணமாக அமைந்தாலும், எழுத்தை எண்ணிப் படிக்க வேண்டும் என்ற மரபை மீறி, மாத்திரையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; ஆழமாகப் படிக்க வேண்டும் என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது. இன்று இந்த நூற்பா மொழியியல் இலக்கியத் திறனாய்வுக்கு வழிகாட்டியாகக் கொள்ளப்படுவதோடு, வாசிப்பவரின் நோக்கு (ல்ர்ண்ய்ற் ர்ச் ஸ்ண்ங்ஜ்) வாசிப்புக்கு ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டிருப்பது பலவகை வாசிப்புக்கு இடமளிப்பதாக அமைகிறது. இவ்வாறு சங்க காலக் கல்வி குறித்த பல செய்திகள் தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai