Enable Javscript for better performance
ஆறிய கற்பும் அடங்கிய சாயலும்- Dinamani

சுடச்சுட

  
  TM-4

  அன்றிருந்த புலவர்கள் தூய நட்பிற்கு உறைவிடமாகத் திகழ்ந்தவர்கள்; வள்ளல் பேகனிடம் அவன் மனைவி கண்ணகிக்காகக் கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர்க் கிழார் முதலானோர் பரிசில் வேண்டாது, மன்னர்களின் நல்வாழ்வை வேண்டி நிற்பதுபோல, குமட்டூர்க் கண்ணனார் சேரலாதனிடம் அவன் தேவிக்காகப் பரிந்து பேசுகிறார்.
  ""நீயோ பாசறையில் உள்ளாய். உன் தலைவியோ அரண்மனையில் உள்ளாள்; பிரிவுத் துயரைத் தாங்கிய அவளது மாண்பினைச் சொல்கிறேன் கேள்!

  ""ஆறிய கற்பின் அடங்கிய சாயல்,
  ஊடினும் இனிய கூறும் இன்னகை,
  அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கின்,
  சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியள்''
  (ப.ப.16:10-13)

  தலைவி நெறிபிறழாத கற்பினை உடையவள். சினக்கவும் சீறவும் காரணமிருந்தும் தணிந்து ஒழுகுவதால் "ஆறிய கற்பு' என்றார். அடக்கமும் மென்மையும் அவளிடம் காணப்பெற்றதால் "அடங்கிய சாயல்' என்றார். பிரிவின் காரணமாக ஊடல் கொண்டாலும் இன்மொழியே பேசுபவள்; எப்போதும் முறுவலுடன் காட்சியளிப்பவள்; அமுதம் பொழியும் சிவந்த வாயினை உடையவள்; ஒளிவிளங்கும் சிறு நுதலைக் கொண்டவள்; மென்மையாக நடை பழகுபவள்; இத்தகைய குணநலன்களைக் கொண்ட தலைவி உன் பிரிவால் துயருற்றிருக்கிறாள்.
  வினைமேல் சென்ற நீ இன்ன பருவத்தே வருவேன் என்று குறித்துச் சொல்லிய பருவம் வந்தும் மீளவில்லை. உன் மார்பையே தனக்குரிய துயிற் பாயல் எனக் கருதுபவள் அவள். ஏனெனில்,

  ""அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட
  அடாஅ அடுபுகை அட்டுமலர் மார்பன்''
  (20:19-20)

  காவற்காடும், ஆழ்ந்த கிடங்கும், நெடிய மதிலும், நிலையான ஞாயிலும்(மதில் ஏவறை), அம்புக் கட்டுடைமையால் கடத்தற்கரிய அக மதிலையும் உடைய பகைவரைக் கொன்று அச் செருக்கால் விம்மிப்புடைத்த விரிந்த மார்பினை உடையவன் நீ.

  ""எழுமுடி கெழீஇய திருஞமர் அகலத்துப்
  புரையோர் உண்கண் துயிலின் பாயல்
  பாலும் கொளாலும் வல்லோய் நின்
  சாயல் மார்பு நனியலைத் தன்றே''
  (16:17-20)

  ஏழு மன்னர்களை வென்று அவர்தம் முடியிலிருந்த அழகிய மாணிக்கக் கற்களை இழைத்த பசும்பொன்னாலான அணிகளை அணிந்த உன் மார்பு மகளிர் கண்ணுறங்குவதற்கமைந்த படுக்கையாக விளங்குவதால் உன் வரவை எதிர் நோக்கிக் காத்திருகிறாள் அவள். மனையின்கண் உறையும் காலத்து, கூட்டம் இடையீடின்றி அளித்தலில் வல்லவன் நீ'' என்று சேரனின் வெற்றிச் சிறப்பையும் அவன் தன் குலமகளோடு நிகழ்த்திய இல்லறச் சிறப்பையும் பதிற்றுப்பத்து சொல்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai