சுடச்சுட

  
  TM-11

  புதன்கிழமை அலுவலக வேலையாக எங்கள் விழுப்புரம் பதிப்பு அலுவலகம் போயிருந்தேன். நண்பர் "கல்கி' பிரியனிடமிருந்து அழைப்பு வந்தது. அவரும் வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனைச் சந்திப்பதற்காகப் புதுச்சேரிக்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். சென்னையை நோக்கிக் கிளம்பிய வாகனத்தைப் புதுச்சேரி நோக்கித் திருப்பச் சொல்லிவிட்டேன். எழுத்தாளர் கி.ரா.வின் 95 வயது நிறைவையொட்டி நேரில் சந்திக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடுமா என்ன? அப்படியொரு வாய்ப்பை நழுவ விடலாமா?
  கி.ரா. அன்று நிறைய விஷயங்கள் குறித்து எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். "ரசிகமணி' டி.கே. சிதம்பரநாத முதலியாருடன் அவர் நெருங்கிப் பழகியவர் என்பதால், "ரசிகமணி', ராஜாஜி குறித்துப் பல சம்பவங்களையும், சந்தேகங்களையும் நானும் பிரியனும் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
  தான் மணியம்மையைத் திருமணம் செய்வது குறித்து அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியைத் திருவண்ணாமலையில் ரயில் "கூப்பே' பெட்டியில் பெரியார் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறித்தும் பேச்சு வந்தது. அன்று ராஜாஜி - பெரியார் சந்திப்பின்போது, "ரசிகமணி' டி.கே.சி.யும் உடன் இருந்தார் என்கிற தகவல் எங்களுக்குப் புதிது.
  ""பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்வதை ராஜாஜி கடுமையாக எதிர்த்தார். பெண் உரிமை குறித்துப் பேசியும் எழுதியும் வரும் பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டால் அது அவருக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும் என்றும், பெரியாரை விமர்சிப்பவர்களுக்கு இதுவே ஆயுதமாகிவிடும் என்றும் ராஜாஜி எச்சரித்திருக்கிறார். தான் மணியம்மையைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்ததற்கான காரணங்களைப் பெரியார் விளக்கிச் சொல்லியும் அதை ராஜாஜி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், நான் பெரியாரின் முடிவை ஆதரித்தேன்'' என்று ரசிகமணியே தன்னிடம் கூறியதாகக் கி.ரா. தெரிவித்தார்.
  கி.ரா.விடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஏறத்தாழ 2 மணி நேரம் அவருடன் அளவளாவியதில் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

   

  புதுச்சேரி வரை சென்றுவிட்டு மன்னர்மன்னனைச் சந்திக்காமல் எப்படித் திரும்புவது? தன் மகன் பாரதியின் வீட்டில் வசித்து வரும் மன்னர்மன்னனுக்கு உடல்நிலை சற்று சரியில்லை. தொண்டையில் புண் என்பதால் சரியாகப் பேச முடியவில்லை. ஆனாலும் நாங்கள் அவரை சந்திக்கப் போனதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
  மகாகவி பாரதியைத் தன் குருநாதராக ஏற்றுக் கொண்டவர் பாவேந்தர். பாரதியாரோடு அவர் கழித்த பத்து ஆண்டுகளைத் தனது வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பெருமைப்பட்டவர். அப்படிப்பட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பாரதியார் இறந்தபோது ஏன் இரங்கற்பா எழுதவில்லை என்கிற கேள்வி எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இத்தனைக்கும் "சுதேசமித்திரன்' நாளேட்டில் மகாகவி பாரதி காலமான செய்தி வெளிவந்திருக்கிறது.
  ""பாரதி இறந்தபோது என் தந்தையார் புதுச்சேரியில் இருந்தார். ஒருவேளை, பாரதியார் மறைந்த செய்தி காலதாமதமாகப் பிரெஞ்சு காலனியான புதுச்சேரியில் வாழ்ந்த பாவேந்தருக்கு எட்டியிருக்கக் கூடும். தன் ஆசான் மகாவித்வான் பு.அ. பெரியசாமிப் பிள்ளை 24.01.1920-இல் மறைந்தபோது பாவேந்தர் இரங்கற்பா பாடியிருக்கிறார். அதனால், பாரதியாருக்கு அவர் இரங்கற்பா எழுதாமல் இருந்திருக்க வழியில்லை.
  அந்தக் காலகட்டத்தில் புதுவை நேசனில் தொடங்கி, ஸ்ரீசுப்பிரமண்யபாரதி கவிதா மண்டலம் உள்ளிட்ட 34 இதழ்கள் புதுச்சேரியிலிருந்து வெளிவந்திருக்கின்றன. அப்படிப்பட்ட இதழ்களில் ஏதாவது ஒன்றில் பாரதி பற்றி என் தந்தையார் எழுதிய இரங்கற்பா கிடைக்குமா என்று தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்'' என்று விளக்கம் சொன்னார் "தமிழ்மாமணி' மன்னர் மன்னன்.
  அவரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்னை திரும்பினோம்.

   

  விமர்சனத்துக்காக அனுப்பப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் எனது மேஜையில் இருக்கும் புத்தகம் முனைவர் கமல. செல்வராஜ் எழுதிய "நியாயமா? இது நியாயமா?' அதைப் படிப்பதற்கான நேரம் இப்போதுதான் வாய்த்தது.
  குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேசப்பற்றும், சமூக அக்கறையும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களைவிட சற்று அதிகமாகவே உண்டு. அவர்கள் நியாய தர்மங்களை வலியுறுத்திச் சண்டை போடுவார்கள் என்பதால்தான், தமிழக அரசியலில் அவர்களை வளரவிடவே மாட்டேன் என்கிறார்கள். முனைவர் கமல. செல்வராஜுக்குக் குமரி மாவட்டத்துக்கே உரித்தான அந்த அறச்சீற்றம் அதிகமாக இருப்பதை இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் எடுத்தியம்புகிறது.
  இவர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக இருப்பவர் என்கிறது எழுத்தாளர் பொன்னீலனின் அறிமுகம். சாமானிய மனிதனின் பார்வையில் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், தமது கண்முன் விரியும் சமூக அவலங்களையும் தமக்கே உரித்தான அறச்சீற்றத்துடன் சாடுகின்றன "சமுதாய நண்பன்' மாத இதழில் வெளியான இதிலிருக்கும் 56 கட்டுரைகளும்.
  இதிலிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு தமிழனும் கேட்டது, கேட்பது, பேசியது, பேசுவது!

   

  சுட்டுரையில் நேற்று முதல் என்னுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் முகேஷ். முகேஷ் 1991 என்று இருப்பதால் இவர் 25 வயது இளைஞராக இருக்கக் கூடும். எதார்த்தமாக அவர் செய்திருந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

  எல்லோருக்கும்
  நம்மை
  பிடிக்கணும்னா
  நாம பணமாதான்
  பொறக்கணும்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai