சுடச்சுட

  
  TM-2

  நீர்தான் பேசுகிறேன். உயரத்தால் மலைக்க வைத்தல் மட்டுமா, அம் மலைப்பொடு, உள்ளே வந்தால், வளங்களைக் கண்டும் மலைத்துப் போவாயே! அம் மலைப்பை ஊட்டி "மலை'யாக்கியது யார்? நீராகிய நான்தானே! நான் வழிந்ததால்தானே, மலையே வெளிப்பட்டுத் தோற்றம் தந்தது. அதனைத் தானே,

  ""பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
  வையகம் போர்த்த வயங்கொலி நீர் - கையகலக்
  கல் தோன்றி''

  என்று புலமையாளர் ஒருவர் சொன்னார் (புறப்பொருள் வெண்பாமாலை). மலைக்கு நான்தானே "கல்' எனப் பெயர் வைத்தேன்! உயிரும் அறிவும் உணர்வும் இல்லாத நான் எப்படிப் பெயர் வைக்க முடியும் எனத் திகைக்கிறாயா? திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதியாரைக் கேட்டுப் பார்! அவர் சொல்வார்!

  ""கல் எனக் கரைந்து வீழும்
  கடும்புனல் குழவி''

  துளிதுளியாகப் பொசிந்து வந்த புனல், பற்பல இடங்களில் இருந்தும் வந்து ஒன்று சேர்தலால், பெருகிக் கடிய ஓட்டம் கொண்டு, எட்ட இருப்பாரையும் அழைத்துச் "செவியுள்ளீர் கேளுங்கள்' என்று பல்காறும் சொல்லிக், "கல்' என வீழ்கிறது'' என்கிறார்.
  மலைக்கு மட்டும்தானா "கல்' பெயர்? அதை உடைத்து உடைத்துச் சிறிதாக்கினாலும் கல்லே! அந்தக் "கல்' நடை வழியில் கிடக்கிறது; நடக்கின்ற ஒருவன் "கால்' தட்டுகிறது அதில்! தட்டிய தட்டுக், குருதி வழியச் செய்தது. தன் குற்றம் - பார்த்து நடவாக் குற்றம் - உணராமல், ""கல் தட்டி விட்டது''; ""புண்ணாகி விட்டது'' என்கிறான்.
  கல்லா வந்து தட்டியது; தட்டுவதற்கு என்ன, "கேடு செய்யப் போகும் மாந்தன் போலத் தேடி வந்தா தட்டியது? பண்படுத்த வந்த அதனை உணராமல் புண்படுத்தியது என்கிறான் பேரறிவன்!
  என்ன பண்படுத்தியது கல்? ""பார்த்துப் போ' - பண்படுத்த மில்லையா? ""ஒதுங்கிப் போ'' - பண்படுத்த மில்லையா? ""எடுத்துப் போட்டு விட்டுப் போ; உன்னைப் போல் யாராவது பாராது வந்து புண்படாமல் இருக்கலாமே!'' - இது பண்படுத்த மில்லையா?
  கற்றேன் என்கிறாயே! என்ன கற்றாய்? ""கற்றது கைம் மண்ணளவுதானே! கல்லாதது உலகளவு'' அல்லவோ! ஆதலால் சாமளவும் விடாமல் கல்! பாடை ஏறும் வரை ஏடது கைவிடாது கல் என ஏவிப் பண்படுத்த வில்லையா?
  ""யான், எனது என்றும் செருக்கு'' இருக்கிறதே! அது, "அகந்தைக் கிழங்கு' அல்லவா, அதை அகழ்ந்தெடுத்து எறி என ஏவிப் பண்படுத்தவில்லையா? உன்னை ஒப்பிலாத் துறவர் நிலைக்கு ஆட்படுத்தல், பண்படுத்தத்தில் உயர்ந்த நிலையல்லவா!
  ""மதி கெட்டு என்னை மிதித்தாய்! உனக்கு மதி - சிற்பக் கலை மதி - இருந்தால், கையில் உளியும் சுத்தியலும் இருந்தால், என்னைத் தெய்வ வடிவாகச் செதுக்கி நட்டால், எத்தனை எத்தனை பேர்கள் ஓடியும் தேடியும் வந்து வழிபடுவார்கள்? உனக்கு மதி இல்லை! என்னை மிதித்தாய்!
  ""நான் புண்படுத்தி விட்டேன்'' என்றும் பழித்தாய்! மெய்யாக எண்ணினால் நான் பண்படுத்தினேன் என்பதை உணர்வாயா இல்லையா? என வாயிருந்தால் - வாய்த்த அறிவு இருந்தால் - கேட்குமா இல்லையா? நான் இட்ட பெயர் தானே "கல்' என்கிறது நீர்!
  தொடர்வோம்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai