சுடச்சுட

  

  "பரிமேலழகர்' உரைக்குத் தெளிபொருள் விளக்கம்!

  By -மணிவாசகப்பிரியா  |   Published on : 25th September 2016 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  TM-6

  திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் காலந்தோறும் தோன்றினாலும், பரிமேலழகர் உரையே அவ்வுரை நூல்களுக்கு வழிகாட்டியது எனலாம். ஆனால், பரிமேலழகரின் உரைத்திறன் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதன்று. அத்தகைய உரைத்திறனிலும் ஆழங்காற்பட்டவர் கோ. வடிவேல் செட்டியார். இவர் திருக்குறளுக்கு வழங்கியுள்ள தெளிபொருள் விளக்கம், கருத்
  துரை, குறிப்புரை ஆகியவை தமிழறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டிருக்கிறது - பின்பற்றப்பட்டிருக்கிறது. இவரது தெளிபொருள் விளக்க நூலைத் தேடி எடுத்து, "சிவாலயம்' ஜெ.மோகன் என்பவர் பதிப்பித்து, தமிழ்கூறு நல்லுலகத்திற்கு வழங்கியிருக்கிறார்.
  1904-இல் இரண்டு பாகங்களைக் கொண்டு முதல் பதிப்பும் (ரூ.6), அதையடுத்து 1919-இல் ஆங்கில மொழிபெயர்ப்புடன் திருத்தமான இரண்டாவது பதிப்பும்(ரூ.8) வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு(2015) ஜெ.மோகனால் பதிப்பிக்கப்பட்ட நூல், வடிவேல் செட்டியாரின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பாராட்டியோரின் பாராட்டுரைகள், வடிவேல் செட்டியார் குறித்த சுவையான அரிய செய்திக் குறிப்புகள், வடிவேல் செட்டியார் வழங்கிய முதற் பதிப்பு / இரண்டாம் பதிப்பின் முகவுரைகள், மு.வ. வழங்கிய முன்னுரை, திருவள்ளுவர், பரிமேலழகர் வாழ்க்கை வரலாறு, திருவள்ளுவமாலை, திருவள்ளுவர் வரலாறு குறித்த வேறு பல அரிய குறிப்புகள் எனப் பலவற்றையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.
  வடிவேல் செட்டியார் வழங்கிய முதற் பதிப்பின் முன்னுரையில், ""இப்பரிமேலழகருரை தருக்கம், இலக்கணம், சாங்கியம், யோக வேதாந்தம், தரும சாஸ்திரம், சங்க நூல் முதலியவற்றிற் பயிற்சி யுடையவர்க்கேயன்றி மற்றையோர்க்குப் பெரிதும் பயன்படா திருப்பது கருதி, இவ்வுரை முழுதிற்கும் நன்கு புலனாம் வண்ணம் தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், மேற்படி உரையில் இலைமறைகாய் போலிருக்கும் விஷயங்கள் நன்கு விளங்குமாறு குறிப்புரையும், கற்றோர்கேயன்றி மற்றையோர்க்கும் உபாத்தியாயரின் சகாயம் பெரும்பான்மையு மின்றி யினிது விளங்குமாறெழுதி இந்நூல் அச்சிடப்பட்டது''(15.7.1904) என்றும்;
  இரண்டாவது பதிப்பின் முன்னுரையில், ""இப்பதிப்பு இரண்டாவது பதிப்பாம் முதற் பதிப்புச் சஞ்சிகை வடிவமாக அச்சிடப்பட்டமையின், அது காரணமாகச் சில பிழைகள் அப்பதிப்பில் நேர்ந்துவிட்டன; அவை இப்பதிப்பிற் திருத்தப்பட்டிருக்கின்றன; எழுதாது விடப்பட்டனவும் எழுதப்பட்டிருக்கின்றன; பல நூலாராய்ச்சியால் கண்ட பாட பேதங்களும் காட்டப்பட்டிருக்கின்றன; மூலத்திற்கு முரைக்குமொத்த வேறுசில பிரமாணங்களும் காட்டப்பட்டிருக்கின்றன; நண்பர் பலரது விருப்பின்படி திருக்குறள் மூலத்திற்கு ஆங்கிலேய மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டிருக்கின்றது'' (-10-1918) என்று குறிப்பிட்டுள்ளார்.
  கோ. வடிவேல் செட்டியார், திருக்குறளுக்கு வழங்கியுள்ள தெளிபொருள் விளக்கம் எத்தகையது என்பது குறித்து, பதிப்பாசிரியரின் பதிப்புரை வருமாறு: ""வடிவேலு செட்டியார் சிறந்த ஞானியாக, வேதாந்த வித்தகராக விளங்கினார். செட்டியாருடைய பலதுறை அறிவு வியக்கத்தக்கது. தட்டார், குலாலர் முதலியோர் பயன்படுத்தும் தொழின் முறைச் சொற்களை அவர் காட்டும்போது எப்படி கற்றார் என்னும் வியப்பு மேலிடுகிறது. வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தும் முறை நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. கீதை, உபநிடதங்கள், மனுஸ்மிருதி முதலியவைகளை மூலத்திலேயே ஆழப் பயின்றிருக்கிறார் என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாகிறது. தமிழின் ஆழ அகலம் கண்டுணர்ந்த அறிஞர் வடிவேல் செட்டியார், இலக்கணப் பெருங்கடல் என்பது பரிமேலழகர் உரைக் குறிப்புகளுக்கு அவர் கொடுக்கும் விளக்கங்கள் மூலம் அறியலாம்.''
  கோ. வடிவேல் செட்டியாரின் தமிழ்ப் புலமையும், இலக்கண - இலக்கிய, சைவ சித்தாந்த, வேந்தாந்தப் புலமையும் இத்திருக்குறள் தெளிபொருள் விளக்கத்திலுள்ள ஒவ்வொரு குறள் விளக்கத்திலும் பளிச்சிடுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai