சுடச்சுட

  
  TM-8

  சிலேடை பாடுவதில் ஈடு இணையில்லாதவரான காளமேகப்புலவர் இயற்றிய முதல் நூலான "திருஆனைக்கா உலா' எனும் சிற்றிலக்கியம் (பிரபந்தம்) பழைமை வாய்ந்ததும் இலக்கிய நயம் செறிந்து விளங்குவதுமாகும். தெய்வத்தையோ, அடியாரையோ, அரசனையோ, வள்ளலையோ புகழ்ந்து பாடும் நூல் பிரபந்தம் எனப்படும். காவிரி நதிக்கரையில் அமைந்த திருஆனைக்கா எனும் தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசன் (ஜம்புகேஸ்வரர்) மீது இவ்வுலா இயற்றப்பட்டுள்ளது.
  பாட்டுடைத் தலைவன் அழகாக ஒப்பனை செய்துகொண்டு பரிவாரங்கள் புடைசூழ உலாவரும்போது எழுவகைப் பருவ மகளிர் அவனைக்கண்டு காதல் கொள்ளுவர் என்று கூறி உலா பாடப்பெறும். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியோர் எழுவகை மகளிர் எனப்படுவர். இவ்வெழுவகை மகளிரின் பருவத்துக்கேற்ற செயல்களையும் விளையாட்டுகளையும் பற்றி விரிவாகப் பாடுவது உலா இலக்கியத்தின் இலக்கண மரபாகும்.
  இவ்வெழுவகை மகளிருள் ஒன்பது முதல் பத்து வயது நிரம்பிய "பெதும்பை' எனும் பெண் திருஆனைக்கா உலாவில், காய்களை வீசியாடி "கழங்கு' ஆடுவது மிகச்சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. கழங்காடுவது என்பது (ஒருவிதமான) ஏழு காய்களைக் கையில் எடுத்துக்கொண்டு, மேலே எறிந்து பின் அதைப் பிடித்து விளையாடுவதாகும். ஒன்று முதல் ஏழு வரை எண்ணிக்கைக்கேற்ப, கருத்துச் செறிந்த பாடல்களைப்பாடி இச்சிறுமியர் விளையாடுவர். ஏழு காய்களுக்கேற்ப பொருள்நயம் மிகுந்த ஏழு கண்ணிகள் அவள் விளையாடும் விதத்தை விளக்குகின்றன.

  ""படர்கயிலை வெற்பெடுத்த பத்திருதோள் வீரன்
  உடல்சரிய ஊன்றியதா ளொன்றும் - மடலவிழ்பூந்

  தேங்காவி சூழும் திருவானைக் காவிலுறை
  ஓங்கார மூர்த்தி உருவிரண்டும் - ஓங்கற்

  கொடிக்கன்பு கொண்டபிரான் கோலமூன் றாக்கி
  முடிக்கும் திருக்கருமம் மூன்றும் - அடைக்கலமென்று

  ஏத்தெடுக்கும் எம்மை எழுபிறப்பின் வீழாமற்
  காத்தெடுக்கும் நாதன் கரம்நான்கும் - பூத்தொடுக்கும்

  தார்காக்கும் செஞ்சடையான் சங்கரிக்கு நாள்வரைமால்
  பார்காக்கத் தந்த படைஐந்தும் - போர்காட்டும்

  திண்பினா கப்படையான் சேவடிசே ரத்தவம்செய்
  பண்பினார் வெல்லும் பகையாறும் - ஒண்பார்

  திருந்து விடங்கரெனத் தேற்றும்பா ரேத்த
  இருந்த இடங்கள்தாம் ஏழும்''

  கயிலை மலையைத் தூக்கிய பத்திருதோள் (இருபது தோள்) வீரனான இராவணனின் உடல் சரியும்படி எம்முடைய ஈசன் ஊன்றிய தாள் ஒன்று எனக்கூறி முதற் கழங்காடினாள்; அடுத்து, திருஆனைக்காவிலுறை ஓங்கார மூர்த்தியின் உரு இரண்டு (சிவ,சக்தி) என்றாடினாள்; மலைமகளான உமையிடம் அன்பு கொண்ட ஈசன், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று வடிவங்கொண்டு, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் தான் ஒருவனே செய்பவன் எனக்கூறிக் கழங்காடினாள்; "உமக்கே நாம் அடைக்கலம்' என ஏத்தும் எம்மை பிறவிக்கடலில் விழுந்தெழாமல் காத்தெடுக்கும் திருக்கரங்கள் நான்கு என்றுகூறி ஆடினாள்;
  பூக்களாலான மாலையை அணிந்த செஞ்சடையானான சிவபிரான், உலகினை அழிக்கும் காலம் வரை (சம்கார காலம்) அவ்வுலகைக் காத்து வர, திருமாலுக்குத் தந்த ஆயுதங்கள் ஐந்து (சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம், கட்கம்) எனக்கூறி ஐந்தாம் கழங்கு ஆடினாள்; வலிமை பொருந்திய "பினாகம்' எனும் வில்லைக் கையிலேந்தியவன் சிவபிரான் - அவனுடைய சேவடியை அடையத் தவம் செய்பவர்கள் வெல்லும் பகைகள் ஆறாகும்; அவை: காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பனவாம் எனக்கூறி ஆறாம் கழங்காடினாள்; அழகான விடங்கர் (சுயம்புவாக உண்டான லிங்கம்) என்று உலகம் போற்றும் தியாகராஜ மூர்த்திக்கு உண்டான இடங்கள் ஏழு (திருவாரூர், திருநாகை, திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில், திருவாய்மூர், திருக்கோளிலி என சப்த விடங்கத்தலங்கள் ஏழு) என்றும் போற்றி ஏழாம் கழங்கினையும் ஆடினாள் என்கிறது இக்கண்ணிகள்.
  எல்லா உலா நூல்களிலும் இத்தகைய பாடல் அமைப்பு காணப்படவில்லை. கடம்பர் கோயில் உலாவில் மட்டுமே, இதுபோன்று கழங்காடுதல் எண்களைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எண்களில் பாட்டுடைத் தலைவனாம் சிவபெருமானின் புகழைப்பேசிக் கழங்காடுதல் விளக்கப்படுவது சிறந்த இலக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது.

  -மீனாட்சி பாலகணேஷ்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai