சுடச்சுட

  
  vairamuthu3

  கவிப்பேரரசு வைரமுத்துவின் 'தமிழ் இலக்கிய முன்னோடிகள்' வரிசையில் அடுத்ததாக திருமூலர் குறித்த கட்டுரை தயாராகிவிட்டது என்கிற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, எங்கே, எப்போது என்பதைத் தெரிவிக்காமல் காலதாமதம் செய்ததற்கு மன்னிக்கவும். வருகிற நவம்பர் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் திருமூலர் குறித்த கவிப்பேரரசுவின் 'கருமூலம் கண்ட திருமூலர்' கட்டுரை அரங்கேற இருக்கிறது.
  கவிப்பேரரசு வைரமுத்துவின் கட்டுரை அரங்கேற இருக்கும் ராஜா அண்ணாமலை மன்றத்துக்கு தமிழக வரலாற்றில் சிறப்பிடம் உண்டு. தமிழ் ஒலிக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்பட்ட அரங்கம் அது. அந்த அரங்கத்தில் அரங்கேற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 'கருமூலம் கண்ட திருமூலர்' இத்தனை நாள் காத்திருந்தது போலும்!
  1940 வரை தமிழிசை என்பதே கர்நாடக சங்கீதத்துக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லாதது போன்ற தோற்றம் நிலவியது. சோழர்களுக்குப் பிறகு தெலுங்கு பேசும் விஜயநகர நாயக்கர்களும், கர்நாடக இசையின் தாயகமாக விளங்கிய தஞ்சைத் தரணியில் மராட்டியர்களும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது அதற்கு முக்கியமான காரணம். 1943இல் மூதறிஞர் ராஜாஜியின் ஆசியுடன் தமிழிசைச் சங்கம் உருவானது.
  தமிழிசைச் சங்கம் என்கிற பெயரை சூட்டியவர் மூதறிஞர் ராஜாஜி. அவருக்குத் துணை நின்றவர்கள் 'ரசிகமணி', டி.கே.
  சிதம்பரநாத முதலியார், எழுத்தாளர் 'கல்கி', இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட பலர். எல்லாவற்றையும்விட, தமிழிசை இயக்கத்திற்கு வலுவும் பொலிவும் சேர்த்தவர் செட்டிநாட்டு அரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார்.
  தமிழிசைச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சிகள் நடத்த மாமன்றம் ஒன்று தேவை என்பதற்காக செட்டிநாட்டு அரசர் ஓர் அரங்கத்தையே உருவாக்க முற்பட்டார். 1948இல் சென்னையில் ஜார்ஜ் டவுன் பகுதியில் 23 கிரவுண்ட் இடம் இதற்காக வாங்கப்பட்டது. சென்னை மாநகரில் இதுபோன்ற பிரம்மாண்டமான அரங்கம் வேறு எதுவும் இல்லை என்கிற அளவிற்கு எல்.எம்.சிட்டாலே என்பவரால் ராஜா அண்ணாமலை மன்றம் வடிவமைக்கப்பட்டது. 
  1949இல் கட்டடத்துக்கான பணி துவங்குவதற்குள் செட்டிநாட்டு அரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் காலமாகிவிட்டார். அவருடைய மகன்களான எம்.ஏ. முத்தையா செட்டியார், எம்.ஏ.சிதம்பரம் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த மாமன்றம் எழுப்பப்பட்டது. செட்டிநாட்டு அரசரின் மறைவிற்குப் பிறகு, தமிழிசைச் சங்கத்தின் தலைவரான இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சர். ஆர்.கே.சண்முகம் செட்டியும் இந்த அரங்கத்தின் வடிவமைப்பில் பெரும் பங்களிப்பு நல்கினார். 
  20 ஆயிரம் சதுர அடியில் இரண்டடுக்கு கொண்ட இந்த மாமன்றம் 1952ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி மூதறிஞர் ராஜாஜியால் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு, செட்டிநாட்டு அரசரின் நினைவாக 'ராஜா அண்ணாமலை மன்றம்' என்று பெயர் சூட்டப்பட்டது.
  தமிழிசைக்காக நிறுவப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாமன்றத்தில்தான் கவிப்பேரரசு வைரமுத்து 'கருமூலம் கண்ட திருமூலர்' என்கிற தலைப்பில் கட்டுரை ஆற்ற இருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புக்கமிக்க நிகழ்ச்சியில் தினமணி வாசகர்களும், கவிப்பேரரசு வைரமுத்துவின் ரசிகர்களும் பெருந்திரளாகக் கூடவேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.
  செட்டிநாட்டு அரசருக்கு நாம் செலுத்த இருக்கும் தமிழ் அஞ்சலி இது!


  முன்னாளில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் அனைவரும் சம்ஸ்கிருதத்திலும் தேர்ச்சியுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். இறையனாரின் (சிவபெருமான்) உடுக்கையின் ஒருபுறத்திலிருந்து தமிழும், இன்னொரு புறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் பிறந்தன என்பது சைவர்களின் கூற்று. இதிலிருந்து அது பிறந்ததா? அதிலிருந்து இது பிறந்ததா? இது மூத்ததா? அது மூத்ததா? இது சிறந்ததா? அது சிறந்ததா? என்றெல்லாம் தேவையற்ற சர்ச்சைகளில் நாம் ஈடுபடத் தேவையில்லை என்பது எனது கருத்து. 
  பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவிய அதன் முதல் துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியன், பேராசிரியர் வையாபுரிப்
  பிள்ளையிடம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கச் சென்றபோது, அவர் கூறிய அறிவுரை, 'சம்ஸ்கிருதமும் படி' என்பதுதான்.
  நண்பர் சுப்ர.பாலனின் 'காவியத்துளி...!' என்கிற தொகுப்பைப் படித்தபோது, சம்ஸ்கிருதம் படிக்கவில்லையே என்கிற எனது ஆதங்கம் மேலும் அதிகரித்தது. 'தீபம்' இதழில் 'ஆத்மேஸ்வரன்' என்கிற பெயரில் இந்தக் கட்டுரைகள் தொடராக வந்தபோது, ஒருசில கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். ஆனால், அதை எழுதுவது சுப்ர.பாலன் என்று அப்போது நான் நினைக்கவே இல்லை. 
  மகாகவி காளிதாசனை நாம் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறோமே தவிர, காளிதாசனின் படைப்புகளைப் படிக்கவோ, அதன் கவியின்பத்தை சுவைக்கவோ இல்லை என்பதுதான் உண்மை. சம்ஸ்கிருதம் தெரியாததால் அதற்கான வாய்ப்பும் நமக்குக் கிட்டவில்லை. என்னைப்போல சம்ஸ்கிருதம் தெரியாதவர்களுக்கு சுப்ர.பாலனைவிட சுவாரஸ்யமாகவும், தெளிவாகவும் காளிதாசனின் கவிநயத்தையும், உவமைச் செறிவையும் வேறு யாராலும் எடுத்தியம்ப முடியாது.
  குடிமக்களிடமிருந்து அரசன் எப்படி வரி வசூலிக்க வேண்டும், அப்படி வசூலித்த வரியை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதைக் காளிதாசர் 'ரகுவம்சம்' முதலாம் சர்க்கத்தில் உவமையுடன் விளக்குகிறார். ஆதவன் பூமிப் பந்திலிருந்து தண்ணீரை ஆவியாக்கி எடுத்துச் சென்று, அதையே பன்மடங்கு மழையாகத் திருப்பித் தருவதுபோல அமைந்திருந்ததாம் திலீபன் என்கிற மன்னனின் வரி விதிப்பு.
  இப்படி, காளிதாசனிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55 ஸ்லோகங்களை, அனைவருக்கும் புரியும் விதத்தில் சுவாரஸ்யமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார் சுப்ர.பாலன்.
  ''வடமொழி சுலோகங்களுக்கு சுப்ர.பாலன் அளித்துள்ள பொருள் விளக்கங்கள் காளிதாசனின் மூலத்தை வாசிக்க வேண்டும் என்று நம்மை யோசிக்க வைக்கும். இதுவரை காளிதாசனை வாசிக்காதவர்களை வாசிக்கத் தூண்டும் வண்ணம் இந்தக் கட்டுரைகள் வசீகரிக்கின்றன. தமிழுக்கு இது புதிது. காளிதாசனை அறிமுகம் செய்த சுப்ர.பாலனுக்குக் காவிய உலகம் கடமைப்பட்டிருக்கிறது'' என்கிற கவிப்பேரரசு வைரமுத்துவின் அணிந்துரை வரிகளை மேற்கோள் காட்டி, 'தமிழுக்குக் காளிதாசனை அழைத்து வரும் அவரது இலக்கியப் பேராசை வெற்றி பெற வேண்டும் என்கிற வாழ்த்தை நானும் வழிமொழிகிறேன்.


  இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, பலத்த காற்றுடன் கொட்டும் மழை. படார், படார் என்று அடித்துக் கொண்டிருந்த ஜன்னல்களை மூடி வைத்தேன். அப்போது நினைவுக்கு வந்தது, எனது நாட்குறிப்பில் நான் பதிவு செய்து வைத்திருந்த ந.சிவநேசன் எழுதியிருந்த கவிதை ஒன்று:

  மரமாக இருந்தபோது
  அசைந்தாடிய ஞாபகமாய்
  இருக்கக்கூடும்
  மழை பெய்யும் பொழுதுகளில்
  அடித்துக் கொள்கிறது
  மர ஜன்னல்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai