இந்த வார கலாரசிகன்

எட்டயபுரத்தில் தினமணி நாளிதழ் சார்பில் சீனி.விசுவநாதனுக்கு "மகாகவி பாரதியார்' விருது வழங்கிக் கெளரவித்ததில் மிகப்பெரிய மன நிறைவு. எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் விருது  வழங்கப்பட்டதிலும்


எட்டயபுரத்தில் தினமணி நாளிதழ் சார்பில் சீனி.விசுவநாதனுக்கு "மகாகவி பாரதியார்' விருது வழங்கிக் கெளரவித்ததில் மிகப்பெரிய மன நிறைவு. எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் விருது  வழங்கப்பட்டதிலும், அதற்கு ஆளுநர் வருகை புரிந்ததிலும் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன.  

எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்திலுள்ள நூலகம்  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்  பராமரிப்பில் இருக்கிறது. இந்த நூலகத்தை விரிவுபடுத்தி பாரதி ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில்  மாற்ற உறுதிபூண்டிருக்கிறார், அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கி.பாஸ்கர்.

ஏற்கெனவே நல்லி குப்புசாமி செட்டியார் அந்த நூலகத்துக்குப் பல புத்தகங்களை வழங்கியிருக்கிறார். கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம்  தனது பங்குக்கு ரூபாய் ஒரு லட்சம் பெறுமானமுள்ள தமிழ் இலக்கிய நூல்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். இதுபோல எல்லாப் பதிப்பகங்களும், பாரதி ஆர்வலர்களும் எட்டயபுரம் பாரதி மணி மண்டபத்தில் அமைந்திருக்கும் நூலகத்துக்குத் தங்களது புத்தகப் பங்களிப்பை செலுத்த முற்பட்டால்,  அங்கே மிகப்பெரிய  பாரதி ஆய்வுக்கான ஒரு நூலகத்தை ஏற்படுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 
மணி மண்டபத்தின் முகப்பில் பூங்கா ஒன்றை அமைத்துப் பராமரிக்க வேண்டும். பூங்கா அமைக்கும் பணியை தான் ஏற்றுக்கொள்வதாக சிங்கப்பூர் "தமிழ் நேசன்' முஸ்தபா உறுதியளித்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏதாவது நிறுவனம்  அந்தப் பூங்காவை முறையாகப் பராமரிக்க முன்வந்தால், பாரதி மணி மண்டபம் புதுப்பொலிவு பெற்று உள்ளூர், வெளியூர் மக்கள் திரளாக விஜயம் செய்யும் இடமாக மாறிவிடும்.
பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தால் ஏற்பட்ட இன்னொரு மிகப்பெரிய நன்மை, மக்களின் பங்களிப்புடன் எட்டயபுரம் பாரதியார் மணி மண்டபம் கட்டுவதற்கு மூதறிஞர் ராஜாஜியால் அடிக்கல் நாட்டப்பட்டதற்கான கல்வெட்டு தேடி எடுக்கப்பட்டிருப்பதுதான்.  அந்தக் கல்வெட்டைத் தேடி எடுத்ததில் இளசை மணியன், நமது விளாத்திகுளம் நிருபர் சங்கரேஸ்வர மூர்த்தி, மணி மண்டபக் காவலர் கென்னடி ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. மாவட்ட ஆட்சியர் 

சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் வதனாள் ஆகியோரின் முயற்சியும் உதவியும் அதற்குச் சற்றும் குறைந்ததல்ல. 
அடுத்த ஆண்டு பாரதி மணி மண்டப விழாவில் ஒட்டுமொத்த தமிழகமே திரண்டு வந்து  பங்கெடுக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். கனவு மெய்ப்படுகிறது...


இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது எஸ்.ராமகிருஷ்ணனின் "சஞ்சாரம்' நாவலுக்குத் தரப்பட்டிருக்கிறது. தமிழில் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் என்பது மட்டுமல்ல எஸ். ராமகிருஷ்ணனின் சிறப்பு. இலக்கியம், சினிமா, நாடகம், இதழியல், இணையம் என்று இவரது இயக்கம் பரந்துபட்டது என்பதும் கூட.  

திரைப்படங்கள் மீது இவருக்கு இருக்கும் அசாத்தியமான புரிதல் என்னை பிரமிக்க வைத்திருக்கிறது.  இவரது "உலக சினிமா' குறித்த புத்தகம் ஓர் அற்புதமான களஞ்சியம் என்றுதான் கூறவேண்டும். உலக சினிமா குறித்து மட்டுமல்ல, உலக இலக்கியங்கள் குறித்தும்  இவர்  தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். மகாபாரதத்தை மையமாகக் கொண்ட இவரது "உபபாண்டவம்' நாவல் சாகித்ய அகாதெமி விருது பெறும்  என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், இவருக்கு சாகித்ய அகாதெமி விருதை பெற்றுத்தரும்  அதிர்ஷ்டம்  "சஞ்சாரம்' நாவலுக்குத்தான் கிடைத்திருக்கிறது. 
கடந்த வாரம் எட்டயபுரம் பாரதி விழாவுக்காக நான் பயணித்தபோது, வழித்துணையாகப் படிப்பதற்கு எடுத்துச் சென்ற புத்தகம் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய "கதா விலாசம்'. 2005-இல் வெளியான அந்தப் புத்தகம் இப்போது குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட  பதிப்புகளைக் கண்டிருக்க வேண்டும். இதை நான்  மீண்டும் ஒரு முறை  படிப்பதற்குத் தேர்ந்தெடுத்து பெட்டியில் வைத்தபோது, எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைக்கப்போகிறது என்று எனக்குத் தெரியாது. 

எஸ். ராமகிருஷ்ணனின் "கதா விலாசம்' ஒரு வித்தியாசமான அணுகுமுறையுடன் கூடிய பதிவு. தமிழின் ஐம்பது  மிக  முக்கியமான கடந்த கால, நிகழ்கால "கதை சொல்லி'கள் குறித்த  இலக்கியப் பதிவுதான் "கதா விலாசம்'. எஸ். ராமகிருஷ்ணனைக் கவர்ந்த படைப்பிலக்கியவாதியின் படைப்பையும்,  அதையொட்டிய அவரது அனுபவத்தையும்  மிகவும் சுவாரசியமாக  மரத்தில் கொடி படர்வது போல லாகவமாக இணைத்து வாசகர்களுக்குப் புதியதொரு வெளிச்சத்தைப் பாய்ச்சும் அவரது  உத்தி வித்தியாசமானது. மெளனியில் தொடங்கி பாரதியாரில் முடிகிறது எஸ். ராமகிருஷ்ணன் வழங்கியிருக்கும் "கதா விலாசம்'. 

ஒவ்வோர் எழுத்தாளர் குறித்த சிறு குறிப்பும் அந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.  கடைசி பதிவான  "அகச்சித்திரம்'  என்கிற பாரதியார் குறித்த பதிவு  "கதா விலாச'த்தின் உச்சம். 

"சிறுகதை என்ற வடிவம் உருவாகி ஒரு நூற்றாண்டைக் கடந்த நிலையில், அதன் துவக்கப்புள்ளி பாரதியாரின் சிறுகதைகளில் தொடங்குவதைக் காணமுடிகிறது' என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். காசியிலுள்ள மகாகவி பாரதியாரின் வீட்டைக் காணச் சென்றது, பாரதியார் வசித்த இடங்களையும், அவரது கையெழுத்துப் பிரதிகளையும் பார்த்துத் தெளிந்தது என்று சுழல்கிறது எஸ். ராமகிருஷ்ணனின் பதிவு. 

ஒவ்வொருவர் குறித்த பதிவுக்கும் அவர் கொடுத்திருக்கும் தலைப்பு "சபாஷ்' போடவைக்கிறது. "கதா விலாசம்' புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரை படித்து முடிக்கும்போது, தமிழகத்தின் தலைசிறந்த ஐம்பது எழுத்தாளுமைகளை ஒருசேர வலம் வந்தது போன்ற  உணர்வு என்னில் எழுந்தது. சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு "தினமணி'யின் சார்பில்  வாழ்த்தும், பாராட்டும்!

இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் பள்ளி மாணவர்களிலிருந்து இளம் கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தேசத்தின் இலக்கியத் தூதுவர்களாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்கள். அவர்களில் தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட மாயா ஈஸ்வரனும் ஒருவர். அவர் வாசித்த ஆங்கில வசன கவிதையின் தமிழாக்கம் இது. இதை இந்த வாரக் கவிதையாக்குகிறேன்.
"தலைமுடி உதிர்வதைப் போல என் இனத்தின் அடையாளத்தை நான் உதிர்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எனது தாய்மொழியான தமிழில் பேசி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தாயே, வெகு விரைவில் நான் வழுக்கைத் தலையாகி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com