கவி பாடலாம் வாங்க - 54

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமும் 
கவி பாடலாம் வாங்க - 54

14.கலிப்பாவின் இனம் (2)


நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த 
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு 
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமும் 
தோளுங் கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றிடினே

இதுவும் கட்டளைக் கலித்துறையே. இதில் அடிதோறும் வெண்டளை பிறழாது வந்திருக்கிறது. நிரை முதலாகிய கட்டளைக் கலித்துறையில், ஓரடியின் ஈற்றுச் சீருக்கும் அடுத்த அடியின் முதற் சீருக்கும் இடையே வெண்டளை அமையாது.

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள் முன்புசெய்த 
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி 
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே

இந்தக் கந்தர் அலங்காரப் பாட்டில் ஒவ்வோரடியின் இறுதிச் சீரும் விளங்காயாக முடிகிறது. அடுத்த அடி நிரையசையில் தொடங்குவதனால் காய்முன் நிரை வந்து கலித்தளை ஆயிற்று. ஆகவே, ஒவ்வோரடியளவில் மட்டும் வெண்டளை அமைவது கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

பழங்காலத்தில் கட்டளைக் கலித்துறையை விருத்தம் என்று சொல்லி வந்தார்கள் என்று தெரிகிறது. தேவாரத்தில் அப்பர் சுவாமிகள் பாடிய திருவிருத்தங்களும், திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள திருவிருத்தமும் கட்டளைக் கலித்துறைகளே.

குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் 
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும் 
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் 
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

இது அப்பர் சுவாமிகள் பாடிய திருவிருத்தம். இது கட்டளைக் கலித்துறையே.
கட்டளைக் கலிப்பா இங்கே கட்டளைக் கலிப்பா என்ற ஒருவகைப் பாட்டின் இலக்கணத்தையும் தெரிந்து கொள்வது நலம். அதுவும் எழுத்துக் கணக்கு உடையதாகும்.

கட்ட ளைக்கலிப் பாவில் எழுத்தினில்
காட்டு மோர்கணக் குண்டுமெய் போக்கியே 
ஒட்டு கின்ற அரையடிக் கேமுதல்
உற்ற தாம்நிரை யென்றிடின் பன்னிரண் 
டெட்டும்; அந்த அரையடி நேர்முதல்
ஏய்ந்த தென்னிற் பதினொ ரெழுத்துறும் 
திட்ட மாக அடிக்கெட்டுச் சீருறும்
சேரு மிந்தக் கணக்கு வழாதரோ

 கட்டளைக் கலிப்பா எட்டுச் சீர்களையுடைய அடிகள் நான்குடையதாக வரும். அரையடிக்கு, முதல் நேரசையானால் எழுத்துப் பதினொன்றும், நிரையசையானால் எழுத்துப் பன்னிரண்டும் இருக்க வேண்டும்.

வேதம் மேவிய தாமரை ஆகம
விரைப்பொ ழிற்படு தூமலர் மாலையாம் 
போதம் மேவிய நெஞ்ச மலரினில்
புக்குத் தேன்சொரி புத்தமு தக்குடம் 
நாத மேலுறு நுட்பம் சுடருரு
ஞான மேயுரு வாகிய சேமவைப் 
பாதி யந்தமி லாததோர் மெய்ந்நிரை
ஆறு மாமுகன் செங்கழற் பாதமே

இந்தக் கட்டளைக் கலிப்பாவில் முதலடியின் பின் பாதியை அன்றி மற்ற ஏழு அரையடிகளும் நேரசையை முதலில் உடையன. அவற்றில் உள்ள எழுத்துக்களை எண்ணிப் பார்த்தால் பதினோரெழுத்துக்களே இருப்பதைக் காணலாம். அரையடியில் முதல் இரண்டு சீரினிடையே நேரொன்றாசிரியத் தளையும், அதன்பின் வெண்டளையும் அமைந்திருக்கின்றன. தளையையும் எழுத்துக் கணக்கையும் பார்த்துப் பார்த்துப் பாடத் தொடங்கினால் பாடவே முடியாது. பழைய கட்டளைக் கலிப்பாக்களைப் படித்துப் படித்துப் பார்த்து அவற்றின் ஓசையை நன்றாக மனத்தில் வாங்கிக்கொண்டு பாட வேண்டும். பாடின பிறகு பாட்டுப் பிழையில்லாமல் இருக்கிறதா என்று தளையையும் எழுத்துக் கணக்கையும் வைத்துப் பார்க்கலாம்.

கட்டளைக் கலிப்பா வீறுகொண்டு சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்ற உருவம். பாரதியார் பாடலில் மிடுக்கான இடங்களில் கட்டளைக் கலிப்பாவை ஆண்டிருக்கிறார். புதுமைப் பெண், சுயசரிதை, பராசக்தி முதலியவற்றில் இந்தப் பாவைப் பார்க்கலாம். 

கலி விருத்தம்

கலிவிருத்தம் என்பது நான்கு சீர்களையுடைய அளவடி நான்கினால் அளவொத்து அமைவது. அதன் வகைகளைப் பற்றி முதல் பாகத்திலேயே பார்த்தோம்.

வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின் 
ஆய்தலி னொண்சுடராழியி னான்றமர் 
வாய்தலி னின்றனர் வந்தென மன்னர்முன் 
நீதலை நின்றுரை நீள்கடை காப்போய்
இது ஒருவகைக் கலி விருத்தம்.
ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய் 
தேடும் கயமா முகனைச் செருவில் 
சாடும் தனியா னைசகோ தரனே
இது மற்றொரு வகைக் கலிவிருத்தம்.
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன் 
அலகில் சோதிய னம்பலத் தாடுவான் 
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

இது பின்னும் ஒருவகைக் கலிவிருத்தம். இது கட்டளைக் கலிப்பாவைப் போன்ற ஓசையுடையதாய், அதில் வரும் அரையடியையே முழு அடியாகப் பெற்றதாய் இருக்கிறது. இந்த விருத்தத்தில் அடிக்குப் பன்னிரண்டும் பதினொன்றுமாக எழுத்துக்கள் அமையும்.

நான்கு சீர்களால் அளவொத்து வந்த கலிவிருத்தங்கள் புலவர்களின் ஆற்றலுக்கு ஏற்றபடி பலபல வகைகளாக விரிந்துள்ளன.

(தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com