பெரியாழ்வார் - ஆண்டாள் பாசுரங்களில் மண்ணின் மணம்

மார்கழி மாதம் பிறந்து விட்டாலே,  மனத்தை மகிழச் செய்யும் பாடல்கள் (திருப்பாவை - திருவெம்பாவை) எங்கும் ஒலிக்கக் கேட்கலாம். ஆண்டாள் நாச்சியார் பாடியருளிய அழகுத் தமிழ்ப் பாசுரங்களிலும், அவரை
பெரியாழ்வார் - ஆண்டாள் பாசுரங்களில் மண்ணின் மணம்


மார்கழி மாதம் பிறந்து விட்டாலே,  மனத்தை மகிழச் செய்யும் பாடல்கள் (திருப்பாவை - திருவெம்பாவை) எங்கும் ஒலிக்கக் கேட்கலாம். ஆண்டாள் நாச்சியார் பாடியருளிய அழகுத் தமிழ்ப் பாசுரங்களிலும், அவரை வளர்த்தெடுத்த பெரியாழ்வார் திருமொழியிலும் அவர்கள் வாழ்ந்து வந்த தென்பாண்டித் தீந்தமிழ்ப் பேச்சு வழக்காறுகள் ஊடும் பாவுமாக இழையோடுவதைக் காணலாம். தென்பாண்டி நாட்டுப் பகுதியில் இன்றும் பேச்சுவழக்கில் அச்சொற்கள் பயன்பாட்டில் உள்ளன.

கொட்டாவி விடுதல்: களைப்பு மேலிட்டால் அல்லது தூக்கம் வந்தாலோ வாயைத் திறந்து கொட்டாவி (கெட்ட ஆவி) விடுவோம். தமிழகத்தின் சில பகுதிகளில் இச்செயலைக் "கோட்டுவாய் விடுதல்' என்றும் சொல்வர். சந்திரனைக் கண்ணனோடு விளையாட வருமாறு அழைக்கும் அம்புலிப் பருவப் பாடலில் பெரியாழ்வார், "கண்துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்'  (பா.59) என்று கண்ணபிரான் கொட்டாவி விடுவதாகப் பாசுரம் இடுகிறார். 

பைய: கண்ணன் வளர் பருவத்தினை அனுபவித்துப் பாடும் பெரியாழ்வார் - செங்கீரைப் பருவப் பாடலில் "பைய உயோதுயில் கொண்ட பரம்பரனே' (பா.64) என்று அன்பொழுகக் கண்ணனை விளிப்பார். இன்றும் தென்பாண்டி நாட்டுப் பகுதியில் "பொறுமையாக - மெதுவாக - கவனமாகப் பார்த்து' எனும் பொருள்களை உள்ளடக்கி ஒரே சொல்லால் "பைய  பைய' என்று அடுக்குச் சொற்களால் பேசுவதைக் கேட்கலாம். கண்ணபிரான் குழந்தைப் பிராயத்தில் தள்ளாடி, அசைந்து, தளர்நடையிட்டு நடப்பதைப் பிறிதோர் பாடலில் "படுமும் மதப்புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல்' (பா.86) என்று யானைக்கன்று மெது, மெதுவே நடப்பதாகப் பாடுவது நம் கண்முன்னே ஓர் அழகுக் காட்சியை நிலைநிறுத்துகிறது.

தத்து எடுத்தல்: தத்து என்பது வடசொல்; மகன்மை கொள்ளுதல் என்பதைக் குறிக்கும். தமிழகம் எங்கும் இச்சொல் இன்றும் பேச்சு வழக்கில் உள்ளது. "பூச்சி காட்டி விளையாடுதல்' எனும் தலைப்பில், "தத்துக் கொண்டால் கொலோ? தானே பெற்றாள் கொலோ?' (பா.124) என்று யசோதைப் பிராட்டியினை எண்ணிப் பாடுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.

மச்சு: தாய்மை நிலையில் தன்னை பாவித்துக்கொண்டு பெரியாழ்வார் பாடுகையில் கண்ணனைப் பூச்சூட்டிக்கொள்ள அழைக்கையில் "மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம் புக்கு' (பா.184) என்று பாடுவார். கண்ணன் கோபிமார்களோடு மாடத்தில் - வீட்டின் மேல்தளத்தில் ஏறி விளையாடுகிறான். வீட்டின் மேல்தளப் பகுதியை "மச்சு' எனும் சொல்லால் தென்பாண்டிப் பகுதி மக்கள் இன்றும் குறிப்பதுண்டு. நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் "மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்' (பா.610) என்று திருவரங்கம் மற்றும் திருவரங்க நாதனின் பெருமைகளைச் சொல்ல முற்படுகையில் மாடமாளிகை,  கூட கோபுரம் எனும் பொருள்பட "மச்சணி மாட மதிள்' என்று பாடுவார்.

கண்ணாலம்: திருமணம், கல்யாணம் என்பதை நாட்டுப்புறப் பேச்சு வழக்கில் "கண்ணாலம்' என்று குறிப்பிடுவது வழக்கம். தாய்மை நிலையில் நின்று ஆண்டாள் நாச்சியாரை எண்ணித் துயருற்றுப் பாடும்முகமாக, பெரியாழ்வார் "கண்ணாலம்' எனும் சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார்.

"கைத்தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து' (பா.294); (மாடு - செல்வம்);  "பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து' (பா.295);  "நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து' (பா.302); ஆண்டாள் தம்முடைய திருமொழியில், "கண்ணாலம் கோடித்து' (பா.615) என்று பாடுவார்.

வெள்: கிராமப் பகுதிகளில் "வெள்' என்ற சொல்லை அதிகாலைப் பொழுதைக் குறிப்பதற்குப் பயன்படுத்துவர். குறிப்பாகத் தென்பாண்டிப் பகுதிகளில் பரவலாக இச்சொல்லாட்சி இன்றும் வழக்கில் உள்ளது. திருமணம் முடிந்து புக்ககம் செல்லும் பெண்ணை நினைத்துத் தாய் வருந்துவது போல, பெரியாழ்வார் பாடுவார். 

"""வெண்ணிறத் தோய் தயிர்தன்னை 
வெள்வரைப்பின்முன் எழுந்து கண்ணுறங்காதே
யிருந்து கடையவும்தான் வல்லள்கொலோ?' (பா.305)

என்று தன் மகள் அதிகாலையிலேயே, கண்விழித்து எழுந்து தயிர் கடைவாளோ? என்று கவலைப்படும் தாயின் புலம்பலில் "வெள் வரைப்பதன் முன்' என்ற சொல்லாட்சி இடம்பெறுகிறது. ஆண்டாள் நாச்சியார், அதிகாலைப் பொழுது குளியலைக் குறிக்கும்பொழுது "வெள் வரைப்பதன் முன்னம் துறை படிந்து' (பா.505) என்று பாடுவார். சென்னை மாநகர வட்டார வழக்கைத் தவிர, தமிழ் நாட்டில் வேறு எங்குமே பேச்சு வழக்கில் இல்லாத "கூவுதல்' என்ற சொல்லை ஆண்டாள் பயன்படுத்தியிருப்பது பெரு வியப்பாக இருக்கிறது.

பிற பெண்களைத் துயில் எழுப்ப, தோழிமாரோடு செல்லும் ஆண்டாள் ஒரு பெண்ணை எழுப்ப முற்படும்போது "உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்' (திருப்பாவை 8) என்று பாடுவார். ஒருவேளை, அக்கால வில்லிபுத்தூர்வாழ் மங்கைமார் குரல் குயில் போல அத்துணை இனிமையாக இருந்திருக்குமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com