அறம் காக்கும் வேட்டுவ மனை

"நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்; கடுமா பார்க்கும் கல்லா ஒருவற்கும்' (புறம்: 189) என்று வேட்டுவரைக் குறிப்பார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
அறம் காக்கும் வேட்டுவ மனை

"நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்; கடுமா பார்க்கும் கல்லா ஒருவற்கும்' (புறம்: 189) என்று வேட்டுவரைக் குறிப்பார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். அத்தகு கல்வியறிவு இல்லாத வேட்டுவராயினும் அவர் உள்ளத்திலும் அறம் நிறைந்திருக்கும் உண்மையைப் புலவர் வீரை வெளியனார் தம் புறநானூற்றுப் பாடலில் (புறம்-320) பதிவு செய்கிறார்.
 வீரை வெளியனார் அப்பாடலில் இரு காட்சிகளைத் தந்து, வேட்டுவர் அறம் போற்றும் பாங்கினை உணர்த்துவார் முதல் பகுதியில் வேட்டுவப் பெண் ஒருத்தியின் ஈர நெஞ்சம் புலப்படுவதாய் உள்ளது. மறுபாதி வேட்டுவர் விருந்து போலும் சிறப்பு உணர்த்தப்படுவதாய் உள்ளது.
 முதல் பகுதியில், பெண் வாழும் மனையையும் அவளது செயலையும் விளக்குகிறார். அவ்வேட்டுவ மனையின் உள்ள முற்றத்தின் நிழலில் வேட்டுவன் களைப்பினால் துயில் கொள்கிறான். அந்நேரம் அங்கே ஒரு கலைமான் தன் பிணையோடு கலந்து புணர்ச்சியின்பம் கொள்கிறது.
 இக்காட்சியைக் கண்ட வேட்டுவப் பெண், ஒலி எழுப்பினால் மகிழ்ந்திருக்கும் மான்கள் அந்த இன்பத்தை இழக்கக் நேரிடுமோ என்ற பரிவினாலும்; துயில் கொள்ளும் கணவன் விழிக்க நேரிடுமோ என்ற கலக்கத்தாலும்; விழித்தால் புணர்ச்சியின்பம் கொள்ளும் மான்களைக் கொன்று விடுவானோ என்ற அச்சத்தாலும் செயலற்றுத் திகைத்து நிற்கிறாள். குலத்தொழில் வேட்டையாடுவதாக இருந்தாலும் எவ்வித ஊறும் இழைக்காது நிற்கும் மான்களை வேட்டையாட அவள் மனம் ஒப்பாதது வேட்டுவப் பெண் ஒருத்தியின் அறச்சிந்தையை நமக்கு உணர்த்துகிறது.
 அப்பாடலின் அடுத்த பகுதியில் வேட்டுவர் விருந்து போற்றும் தகைமை சொல்லப்படுகிறது. வேட்டுவ குலப் பெண்ணொருத்தி வீட்டு முற்றத்தில் மான் தோலில் தினை அரிசியைப் பரப்பி காய வைக்கிறாள். அதனைப் பறவைகள் கவர வரும் என்பதால் அதன்மேல் வலையை விரித்திருக்கிறாள். அதை அறியாத காட்டுக் கோழி, கௌதாரி முதலான பறவைகள் அவ்வலையில் அகப்படுகின்றன. அப்பறவைகளைச் சந்தனக் கட்டைகளால் சுட்டு பக்குவப்படுத்தி, ஆரல் மீன் குழம்போடு தம்மைத் தேடிவந்த பாணர் முதலான சுற்றத்திற்குப் படைத்து மகிழ்கிறாள்.
 விருந்து படைத்ததோடன்றி, விருந்தினர் பிரிந்து செல்லுகையில், வேந்தன் தமக்களித்த பெருஞ்செல்வத்தை அவர்களுக்கு வேட்டுவத் தலைவன் வாரி வழங்குவது, "எல்லார்க்கும் கொடுமதி மனை கிழவோயே' (புறம்.163) என்ற பெருஞ்சித்திரனாரின் பரந்த உள்ளத்தையும், "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பே மெனினே தப்புவ பலவே', (புறம் 189) என்ற அறத்தையும் உணர்ந்தவர்களாக வேட்டுவரைக் காண முடிகிறது.
-முனைவர் கா.ஆபத்துக்காத்த பிள்ளை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com