கவி பாடலாம் வாங்க - 46

தரவு ஒன்றும், தாழிசை மூன்றும், அம்போதரங்க உறுப்பும், தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். அம்போதரங்கம் என்பதற்கு நீரின் அலை என்று
கவி பாடலாம் வாங்க - 46

11.ஒத்தாழிசைக் கலிப்பாக்கள் (2)
 அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
 தரவு ஒன்றும், தாழிசை மூன்றும், அம்போதரங்க உறுப்பும், தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். அம்போதரங்கம் என்பதற்கு நீரின் அலை என்று பொருள். கரையை அடைய அடைய அலையின் உயரம் சுருங்குவது போல இருப்பதனால் இந்தப் பெயர் அமைந்தது.
 முதலில் நாற்சீரடி, பிறகு முச்சீரடி, பின்பு இரு சீரடிகளாக அமைவது இந்த உறுப்பு. நாற்சீரடிகள் இரண்டு அமைந்தவை இரண்டு, நாற்சீர் ஓரடி நான்கு, முச்சீரடி எட்டு, இரு சீரடி பதினாறு இவை அமைந்து அம்போதரங்கம் வரும். நான்கு, எட்டு, பதினாறு என்பவை அவற்றிலே பாதியாக வருவதும் உண்டு.
 அம்போதரங்க உறுப்பை அசையடி, பிரிந்திசைக் குறள், சொற்சீரடி, எண் என்றும் கூறுவர். நாற்சீர் ஈரடிகளைப் பேரெண் என்றும், நாற்சீர் ஓரடிகளை அளவெண் என்றும், முச்சீர் ஓரடிகளை இடையெண் என்றும், இருசீரடிகளைச் சிற்றெண் என்றும் சொல்வார்கள். அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு உதாரணம்
 வருமாறு:
 (தரவு)
 "கெடலரும் மாமுனிவர் கிளந்துடன் தொழுதேத்தக்
 கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய
 அழலுவிர் சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத்
 தாரொடு முடிபிதிர்த்த தமனியப் பொடிபொங்க
 வார்புனல் இழிகுருதி அகலிட முடிநனைப்பக்
 கூருகிரால் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்'
 (தாழிசை)
 "முரசதிர் வியன்மதுரை முழுவதுஉம் தலைபனிப்பப்
 புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்லர்
 அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேரப்
 பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? (1)
 கலியொலி வியனுலகம் கலந்துடன் நனிநடுங்க
 வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு
 மாணாதார் உடம்போடு மறம்பிதிர எதிர்மலைந்து
 சேணுயர் இருவிசும்பிற் சிதைத்ததுநின் சினமாமோ? (2)
 படுமணி யினநிரை பரந்துடன் இரிந்தோடக்
 கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு
 வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறம் வேறாக
 எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இகலாமோ?' (3)
 (அம்போதரங்கம்)
 "இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல்
 வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம் (1)
 விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
 பொருகளி றட்டோய் புரையும் நின்னுடை' (2)
 (இவை பேரெண்)
 கண்கவர் கதிர்முடி கனலும் சென்னியை, (1)
 தண்சுடர் உறுபுகை தவிர்த்த ஆழியை, (2)
 ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியை (3)
 வலிமிகு சகடம் மாற்றிய அடியினை. (4)
 (இவை அளவெண்)
 போரவுணர்க் கடந்தோய் நீ, (1)
 புணர்மருதம் பிளந்தோய் நீ, (2)
 நீரகலம் அளந்தோய் நீ, (3)
 நிழல்திகழ்ஐம் படையோய் நீ. (4)
 (இவை இடையெண்)
 ஊழி நீ, உலகும் நீ, (1-2)
 உருவும் நீ, அருவும் நீ, (3-4)
 ஆழி நீ, அருளும் நீ, (5-6)
 அறமும் நீ, மறமும் நீ. (7-8)
 (இவை சிற்றெண்)
 (தனிச்சொல்)
 "எனவாங்கு'
 (சுரிதகம்)
 "அடுதிறல் ஒருவன்நிற் பரவுதும் எங்கோன்
 தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற்
 கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
 புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்
 தொன்று முதிர்கடல் உலகம் முழுதுடன்
 ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே'
 அம்போதரங்க ஒத்தாழிசைக் கலியில் தரவு ஆறடியாகவே வரும்.
 (தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com