இந்த வாரம் கலாரசிகன்

மகாகவி பாரதியின் நினைவு நாள் எனும்போது, ஆண்டுதோறும் எட்டயபுரத்தில் டிசம்பர் 11-ஆம் தேதி அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவது குறித்த நினைவு வருகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து
இந்த வாரம் கலாரசிகன்

மகாகவி பாரதியின் நினைவு நாள் எனும்போது, ஆண்டுதோறும் எட்டயபுரத்தில் டிசம்பர் 11-ஆம் தேதி அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவது குறித்த நினைவு வருகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆசிரியர் விக்கிரமன் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் பாரதியாரின் பிறந்த நாளன்று எட்டயபுரத்தில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது அவரது ஆன்மா இட்ட கட்டளையோ என்னவோ, அவரைத் தொடர்ந்து நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதைக் கடைப்பிடிக்க முற்பட்டிருக்கிறேன். கடந்த ஆண்டு நான் தெரிவித்தது போல, ஆண்டுதோறும் மகாகவி பாரதியின் பிறந்த நாளன்று தமிழை நேசிப்பவர்களும், எழுத்தாளர்களும் கவிஞர்களும், ஊடகவியலாளர்களும், தமிழறிஞர்களும் பெருந்திரளாக எட்டயபுரத்தில் கூட வேண்டியது நமது கடமை.
மலேசியாவிலிருந்து நண்பர் ராஜேந்திரன் முப்பது, நாற்பது பேர் கொண்ட குழுவுடன் இந்த ஆண்டு எட்டயபுரத்துக்கு வரப்போவதாகத் தெரிவிக்கிறார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் "வந்து விடுவேன்' என்று சிங்கப்பூரிலிருந்து "தமிழ் நேசன்' முஸ்தபா தெரிவித்திருக்கிறார். தில்லி தமிழ்ச் சங்கத்திலிருந்து அதன் செயலாளர் முகுந்தனும் நண்பர்களும் பங்கு பெறுவதாக ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள்.
எனது வேண்டுகோள் எல்லாம், அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழகம் எங்குமுள்ள கம்பன் கழகங்கள், இளங்கோவடிகள் மன்றங்கள், மணிமேகலை மன்றங்கள், பாரதியார், பாரதிதாசன் பாசறைகள், தமிழ்ச் சங்கங்கள் முதலிய எல்லாத் தமிழ் அமைப்புகளும், அவர்கள் சார்பில் டிசம்பர் 11 -ஆம் தேதி பாரதியார் பிறந்த நாளன்று எட்டயபுரத்தில் கூட வேண்டும் என்பதுதான். 
தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் இலக்கிய உரையாளர்கள் மட்டுமல்லாமல், முன்னணி இசைக்கலைஞர்களும், திரைக் கலைஞர்களும் கூட அன்று எட்டயபுரத்தில் கூடி தமிழுக்குப் புதுப்பாதையிட்ட பாவலனுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தங்களது கடமையாகக் கொள்ள வேண்டும் என்பதுதான். 
தனிப்பட்ட முறையிலும் "தினமணி'யின் சார்பிலும் மூன்று மாதங்கள் முன்னதாகவே என் உள்ளக்கிடக்கையைத் தெரிவித்துவிட்டேன். டிசம்பர் 11, செவ்வாய்கிழமை மகாகவி பாரதியின் பிறந்த நாளன்று எட்டயபுரத்தில் அவரது இல்லத்தில் சந்திப்போம் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.

*

வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி சிலம்பொலியார் அகவை 90 கடந்து 91-இல் அடியெடுத்து வைக்கிறார். தொடர்ந்து ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் பணியாற்றி இப்போதும் கூடத் தன் நினைவும் செயலும் தமிழும் சிலம்புமாகத் தொடரும் அந்த மூதறிஞரின் பிறந்த நாள் வழக்கம்போல சிலப்பதிகார விழாவாக இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது.
கடந்த புதன்கிழமை சென்னை, திருவான்மியூரிலுள்ள அவரது இல்லத்தில் சிலம்பொலியாரை சந்தித்தேன். இந்த ஆண்டுக்கான "சிலம்பொலி விருது' மூத்த தமிழறிஞர் இரா.இளங்குமரனாருக்கு வழங்கப்படுகிறது என்று உற்சாகத்துடன் தெரிவித்தார். ஆண்டுதோறும் இளம் சொற்பொழிவாளர் இருவருக்கு "இளம் சிலம்பொலி' விருது வழங்கப்படுகிறது. இளைய தலைமுறையைச் சேர்ந்த ஓர் ஆண், ஒரு பெண் சொற்பொழிவாளர் இளைய சிலம்பொலி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 
தமிழகத்திலுள்ள 25 வயதுக்குட்பட்ட இளம் பேச்சாளர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் silambolichellappan@
yahoo.com என்கிற இணைய முகவரிக்கோ, 9940634248 என்கிற செல்லிடப்பேசி - கட்செவி அஞ்சலுக்கோ தங்களது தன்விவரக் குறிப்பை அனுப்ப வேண்டும். அவர்களில் தகுதியானவர்களாகக் கருதப்படுபவர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு, செப்டம்பர் 24-ஆம் தேதி சிலப்பதிகாரம் குறித்து உரையாற்ற வாய்ப்பளிக்கப்படும். உரையாற்றுபவர்களில் ஆண்-பெண் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு "இளைய சிலம்பொலி' விருது வழங்கப்படும்.
தமிழகத்தின் மிக மூத்த தமிழறிஞர் கையால் அவர் பெயரிலான விருதைப் பெற இருக்கும் அந்த இளைய தலைமுறை நம்பிக்கை நட்சத்திரங்கள் யார் என்பதை அறிந்துகொள்ள உங்களைப் போலவே நானும் ஆவலுடன் இருக்கிறேன்.

*

கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டியில் "சொந்தம் கல்விச் சோலை' நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, எங்கள் நிருபர் சுடர்மதி பிரான் சிஸ் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்த "அயலகத் தமிழ் இலக்கியம்' என்கிற புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்தது குறித்து பதிவு செய்திருக்கிறேன். கடந்த பிப்ரவரி மாதம் எழுத்தாளர் சா.கந்தசாமி கையொப்பமிட்டு எனக்கு அன்பளிப்பாகத் தந்த புத்தகம் "நவீன தமிழ்ச் சிறுகதைகள்'. இதை அயலகத் தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகத்தான் கருத வேண்டும்.
கடந்த செவ்வாய்க்கிழமை மின்னல் வேகப் பயணமாக தலைநகர் தில்லிக்கு விமானத்தில் சென்றுவந்தபோது, "நவீன தமிழ்ச் சிறுகதைகள்' புத்தகத்தை மறக்காமல் எடுத்துச் சென்றேன். ஐந்து மணி நேர விமானப் பயணத்தில் நேரம் போனதே தெரியவில்லை என்பது மட்டுமல்ல, தமிழ் சிறுகதை இலக்கியத்தினூடே பயணித்த சுகானுபவம் கிடைத்தது.
1960-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி 1995-ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்புதான் இது. அசோகமித்திரன், ஜெயகாந்தன், நகுலன், சுஜாதா, சுந்தர ராமசாமி என்று தொடங்கி, சுப்ரபாரதிமணியன், பாவண்ணன், ஜெயமோகன், எஸ்.இராமகிருஷ்ணன், சோ.தர்மன், ம.ராசேந்திரன், விழி. பா.இதயவேந்தன் வரையிலான தமிழில் குறிப்பிடத்தக்க அத்தனை எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம்பெற்றிருப்பது இந்தத் தொகுப்பின் சிறப்பு. இதிலுள்ள எழுத்தாளர்கள் குறித்து தொகுப்பாசிரியர் சா.கந்தசாமி நூலின் இறுதியில் தந்திருக்கும் குறிப்பு, குறுகத் தரித்த குறளுக்கு நிகர்.

புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்தது சாந்தா- ஆதிலட்சுமி எழுதிய "கொக்காம் பயிர்' என்கிற கவிதைத் தொகுப்பு. சாந்தாவும் ஆதிலட்சுமியும் மாமியாரும் மருமகளும் என்பதுதான் இந்தக் கவிதைத் தொகுப்பின் தனிச்சிறப்பு. அதில், "மனசு' என்று ஒரு கவிதை.
எவ்வளவுதான்
அடித்துத் துவைத்து
காயப்போட்டாலும்
எங்கேயோ 
ஒட்டிக் கொண்டிருக்கும்
அழுக்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com