9. ஆசிரியத் தாழிசையும் துறையும்

ஆசிரியப்பா நான்கு வகைப்படும் என்பதை முன்பு பார்த்தோம். நேரிசைஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்ற நான்கு
 9. ஆசிரியத் தாழிசையும் துறையும்

கவி பாடலாம் வாங்க - 42
ஆசிரியப்பா நான்கு வகைப்படும் என்பதை முன்பு பார்த்தோம். நேரிசைஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்ற நான்கு வகைகளின் இலக்கணத்தையும் முதற் பாகத்தில் அறிந்தோம். இனி, ஆசிரியப்பாவின் இனங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
 ஆசிரியத் தாழிசை: ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் என்று ஆசிரியப்பாவின் இனம் மூவகைப்படும். அளவொத்து அமைந்த மூன்று அடிகளால் வருவது ஆசிரியத் தாழிசை. ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வருவது சிறப்பு.
 "வேலினை எடுத்தனை விண்ணவர்க் கருளினை
 மாலற அன்பர் மனத்தில் இருந்தனை
 காலுற வணங்கினம் கருணையை அருள்தியே'
 இது ஒரு பொருள் மேல் ஒன்று வந்த ஆசிரியத் தாழிசை.
 "கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
 இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயிற்
 கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ'
 "பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
 ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
 ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ'
 "கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
 எல்லிநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
 முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ'
 இவை மூன்றடியால் அளவொத்து ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை. ஓரடிக்கு இத்தனை சீர் என்ற வரையறை இல்லை. எத்துணைச் சீராலும் மூன்றடி அமைந்து வரலாம்.
 ஆசிரியத்துறை: ஆசிரியத் துறை நான்கு வகைப்படும். நான்கு அடிகளாய் இடையிலே குறைந்த அடிகளை உடையனவாய் வருவது பொது இலக்கணம். அந்த நால்வகையும் வருமாறு:
 1. நான்கு அடி உடையதாய் ஈற்றயலடி குறைந்து வருவது.
 2. நான்கு அடி உடையதாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவது.
 3. நான்கடியாய் இடையிடை குறைந்து வருவது.
 4. நான்கடியாய் இடையிடை குறைந்து மடக்காய் வருவது.
 ஓரடிக்கு எத்துணைச் சீரும் வரலாம்.
 1. "சாந்தமலை யாமனத்துத் தாபர்கள் நனிபோற்றித்
 தாழும் குன்றம்
 காந்தமலை எனவறிந்து சென்றினிது மலர்தூவிக்
 கந்த னைவேல்
 வேந்தமலி யுங்கடம்ப வள்ளியொடு மமரர்கரி
 காந்தமலை வில்லாயென் றாதரித்தால் புவியிலிடர்
 காணா மன்றே'
 இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து, மற்ற அடிகள் மூன்றும் ஒத்து வந்த ஆசிரியத்துறை. மூன்றாவது அடியும் ஒத்திருந்தால் இது ஆசிரிய விருத்தமாகிவிடும்.
 2. "வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய்
 வடிவே போலத்
 தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித்
 தணந்தோன் யாரே
 தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம்
 பண்டையப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து
 படர்ந்தோ னன்றே'
 இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடை மடக்காய் வந்த ஆசிரியத்துறை. இரண்டாம் அடியில் வந்த தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி என்ற பகுதியே மூன்றாமடியில் மீட்டும் மடக்கி வந்தமையின் இடைமடக்காயிற்று.
 3. "கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழினிறக்
 குருதிக் கோட்டன இருந்தடப் பெருங்கைக்
 குன்றாமென அன்றாமெனக்
 குமுறா நின்றன கொடுந்தொழில், வேழம்
 வென்றாங் கமைந்த விளங்கொளி இளம்பிறைத்
 துளங்குவாள் இலங்கெயிற் றழலுளைப் பரூஉத்தாள்
 அதிரும் வானென எதிரும் கூற்றெனச்
 சுழலா நின்றன சுழிகண் யாளி
 சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்ளுகிர்ப்
 பொறிஎருத் துறுவலிப் புலவுநா றழல்வாய்ப்
 புனலாமென அனலாமெனப்
 புகையா நின்றன புவிமா னேற்றை
 என்றாங் கிவைஇவை இயங்கலின் எந்திறத்
 தினிவரல் வேண்டலம் தனிவரல் விலக்கலின்
 இறுவரைமிசை எறிகுறும்பிடை இதுவென்னென
 அது நோனார்
 காவிரவிடைக் களவுளமது கற்றோரது கற்பன்றே'
 இது முதலடியும் மூன்றாமடியும் பதினான்கு சீராய் மற்ற அடி இரண்டும் பதினாறு சீராய் அமைந்தது. இது இடையிடை குறைந்து வந்த ஆசிரியத்துறை.
 4. "இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா
 அரங்கம் அணிபொழிலா ஆடும் போலும் இளவேனில்
 அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின்
 மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்'
 இது நான்கடியாய் இடையிடை குறைந்து இடை மடக்காய் வந்த ஆசிரியத்துறை. இதில் முதலடியும் மூன்றா மடியும் நான்கு சீர்களாலும், இரண்டாமடியும் நான்காமடியும் ஐந்து சீர்களாலும் வந்தது காண்க.
 (தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com