இந்த வாரம் கலாரசிகன்

கடந்த புதன்கிழமை பெங்களூரு சென்றிருந்தபோது, பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகள்
இந்த வாரம் கலாரசிகன்

கடந்த புதன்கிழமை பெங்களூரு சென்றிருந்தபோது, பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர், இன்று சிவமொக்காவில் (ஷிமோகா) நடைபெற இருக்கும் கர்நாடகத் தமிழ் அமைப்புகளின் கூட்டம் குறித்துத் தெரிவித்தார்.

பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஹாசன், மங்களூரு, குடகு, தாவணகரே, சிக்கமகளூரு, சிவமொக்கா, தார்வாட், பெல்லாரி, பெலகாவி, கோலார், சாம்ராஜ் நகர், சித்திரதுர்கா, தென் கன்னடம் முதலிய பல்வேறு கர்நாடக மாவட்டங்களில் தமிழ் அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளராக ஹூப்ளியைச் சேர்ந்த ஆ.தனஞ்செயன் செயல்படுகிறார்.

தலைநகர் தில்லியில் "தினமணி'யின் சார்பில் தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இலக்கிய அமைப்புகளின் மாநாட்டின் நீட்சியாக இப்போது ஆங்காங்கே உள்ள தமிழ்ச் சங்கங்கள் ஒன்றோடொன்று தொடர்பு வைத்துக்கொண்டு செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அகில இந்திய அளவிலும், பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் செயல்படும் முக்கியமான தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. சிவமொக்காவில் இன்று கூடும் கர்நாடக மாநில தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் 40க்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகளும் கலந்து கொள்ள இருக்கின்றன.

"இந்தியாவிலுள்ள எல்லா தமிழ் இலக்கிய அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற உங்களது வேண்டுகோள்தான் இப்போது செயல்வடிவம் பெற்றிருக்கிறது. அதனால், சிவமொக்காவில் வரும் ஞாயிறன்று கூடும் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும்'' என்கிற பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரனின் வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை. அதனால், இப்போது சிவமொக்காவில் இன்று கூடவிருக்கும் கூட்டத்தில் நான் கலந்துகொள்ள வந்திருக்கிறேன்.

‘சிஹி மொக்கே' என்பது ஆங்கிலேயர்களால் "ஷிமோகா' என்று அழைக்கப்பட்டு இப்போது "சிவமொக்கா' என்று பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. இங்கே 1946ஆம் ஆண்டிலேயே 34 தமிழர்கள் ஒன்றுகூடி உருவாக்கிய அமைப்புதான் "சிவமொக்கா' தமிழ்ச் சங்கம். இந்தச் சங்கத்தின் பதிவேடுகள் இதை "தமிழ்த்தாய் சங்கம்' என்று குறிப்பிடுகின்றன.

1965-ஆம் ஆண்டிலேயே சொந்தமாகக் கட்டடம் கட்டி, அரசால் நியமனம் செய்யப்பட்ட தமிழ் ஆசிரியர்களால், மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுத்த பெருமை சிவமொக்கா தமிழ்ச் சங்கத்துக்கு உண்டு. இப்போது ஏறத்தாழ 3,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இந்தத் தமிழ்ச் சங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைப் பார்க்கும்போது, தமிழகத்திற்கு வெளியேயும் தமிழ் தழைக்கிறது என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ் வளர்க்க இங்கே கூடியிருக்கும் பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தி.கோ.தாமோதரனுக்கு நன்றி!

*

விமர்சனத்திற்கு வந்திருந்தது முனைவர் இளசை சுந்தரம் எழுதிய "மகாத்மா 200' என்கிற புத்தகம். அண்ணல் மகாத்மா காந்தியடிகள் வாழ்க்கையில் நடந்த 200 சம்பவங்களையும், தகவல்களையும் தொகுத்து புத்தகமாக்கி இருக்கிறார் முனைவர் இளசை சுந்தரம்.

அண்ணல் காந்தியடிகளின் "சத்திய சோதனை'யில் தொடங்கி, அவர் குறித்து ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வந்துவிட்ட பிறகும் கூட, இப்படியொரு நூலை வெளிக்கொணர்வதன் காரணத்தை முனைவர் இளசை சுந்தரம் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு அருமை. இன்றைய அவசர உலகில் வரலாற்றை மொத்தமாகப் படிப்பதைவிட சிறு சிறு நிகழ்வுகளாகத் தொகுத்து வழங்கினால், அது வாசிப்பதை எளிமையாக்குவதுடன் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு அண்ணல் காந்தியடிகளைப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கும் என்பது அவர் முன்வைக்கும் காரணம். "பலாப்பழத்தை முழுசாகக் கொடுக்காமல் சுளைகளாக வழங்கியிருக்கிறேன்'' என்கிறார் அவர்.

சின்ன வயதில் காந்தியடிகளின் செல்லச் பெயர் "மோனியா' என்பதையும், அவருக்கு "மகாத்மாஜி' பட்டம் எப்படிக் கிடைத்தது என்பதையும் பதிவு செய்திருக்கிறார் இளசை சுந்தரம். ஒருமுறை சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்த காந்தியடிகள், கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை, "நமஸ்தே குருதேவ்' என்று முகமன் கூறியபோது, அவர்தான் முதன்முதலில் காந்தியடிகளை "மகாத்மாஜி' என்று அழைத்ததாக இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது. ஒரு கொசுறுச் செய்தி. காந்தியடிகளை "தேசப்பிதா' என்று முதன் முதலில் அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். மகாத்மா காந்தியை, தமிழில் "காந்தியடிகள்' என்று அழைத்தவர் "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.

காந்தியடிகளுக்குத் தமிழ் மீது அளவுகடந்த பற்றுதல், அவரது தென்னாப்பிரிக்க வாச காலத்திலிருந்தே உண்டு. பீனிக்ஸ் என்ற ஊரில் காந்திஜி அமைத்த ஆசிரமத்தில் இருந்த தமிழ்க் குழந்தைகளுக்கு அவர் தமிழிலேயே கல்வி கற்க ஏற்பாடு செய்திருந்தார். 1937ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சென்னை ஹிந்தி பிரசார சபையில் பாரதிய சாகித்ய பரிஷத்தின் இரண்டாவது மாநாட்டில் "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரின் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள்,

"சாமிநாதையரைப் பார்க்கும்போதும், அவர் பேச்சைக் கேட்கும்போதும், அவரது காலடியின் கீழிருந்து தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டாகிறது'' என்று தனது உரையில் குறிப்பிட்டதை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் இளசை சுந்தரம்.

வானொலி நிலைய முன்னாள் இயக்குநராக இருந்தவர் என்பதால், காந்திஜி தொடர்பான முக்கியமான தகவல்கள் அனைத்தையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து, அவரால் தொகுத்தளிக்க முடிந்திருக்கிறது. இளைய தலைமுறையினர், குறிப்பாக, பள்ளி மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. அவர்களுக்கு அண்ணல் காந்தியடிகள் குறித்த புரிதலை இதைவிட மேலாகவும், சிறப்பாகவும் யாரும் எடுத்தியம்பி விட முடியாது.
 

*

இரண்டு மாதங்களுக்கு முன்பு மங்கையர் மலரில் வெளியான, போளூர் ஆர்.வனஜா எழுதிய "சுரண்டல்' என்கிற கவிதைதான் இந்த வாரத் தேர்வு. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரியும் இந்தக் கவிதைக்கு, அவரவர் நோக்கில் விளக்கம் தரமுடியும்.

 உழைப்புச் சுரண்டல்
 எங்குதான் இல்லை...?
 சேவல் கூவ
 பெயர் தட்டிக்கொண்டு
 போனதோ கோழி...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com