சுடச்சுட

  
  tm1

  தமிழகத்தின் மிகப்பெரிய துரதிருஷ்டம் என்னவென்றால், ஒவ்வொரு ஆளுமை மறையும்போதும் அவர்களது இடம் வெற்றிடமாகத் தொடர்கிறது என்பதுதான். அந்த வரிசையில் இப்போது "சிலம்பொலி' செல்லப்பனாரும் இணைகிறார்.
   மாணவப் பருவத்தில், நான் அண்ணாந்து பார்த்த தமிழ் ஆளுமைகளில் ஒருவர் அவர். அவரை நேரில் நெருங்கிப் பார்க்கமாட்டோமா? நான்கு வார்த்தைகள் பேசிவிட மாட்டோமா? என்றெல்லாம் ஆசைப்பட்ட எனக்கு, அவருடைய நேரடித் தொடர்பும், அவரது அன்பும், ஆதரவும் கிடைக்கப்பெற்றது முந்தைய பிறவிகளில் யான் நோற்ற நோன்பு.
   அவர் சதமடிப்பார் என்றுதான் எல்லாத் தமிழார்வலர்களும் என்னைப் போலவே எதிர்பார்த்தனர். அதற்குக் காரணம், அவரது ஒழுக்கமான தமிழ் மரபு சார்ந்த வாழ்க்கை முறை. நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் அவர் மீது வைத்திருந்த பாசமும் மரியாதையும், நம்மிடமிருந்து காலனால் அவரை அவ்வளவு எளிதாக அழைத்துச் சென்றுவிட முடியாது என்று எல்லோருமே நினைத்திருந்தோம்.
   ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்புக்கு அங்கீகாரம் "சிலம்பொலி' செல்லப்பனாரின் அணிந்துரைதான் என்று கருதினார்கள். சற்றும் முகம் சுளிக்காமல் தரமான படைப்பு என்று சொன்னால், அதைத் திறனாய்ந்து அணிந்துரை வழங்கும் அவரது பண்பு இனி யாருக்கு வரும்?
   "தினமணி'யின் நடுப்பக்கத்தில் கட்டுரை வந்தால், கட்டுரையாளரை அழைத்துப் பாராட்டும் முதல் மனிதர் "சிலம்பொலி' செல்லப்பனாராகத்தான் இருப்பார். இதை நான் கூறவில்லை; கவிஞர் ஜெயபாஸ்கரனிடம் கேட்டுப் பாருங்கள், விசும்பலுடனும், துக்கத்துடனும் ஆமோதிப்பார்.
   சென்னையில் எந்தவோர் இலக்கிய நிகழ்வு நடைபெற்றாலும் தன் மகள் மணிமேகலை புஷ்பராஜ் உதவியுடன் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார் "சிலம்பொலி' செல்லப்பன். தமிழ் ஒலிக்கும் இடமெல்லாம், சிலம்பும், "சிலம்பொலி' செல்லப்பனும் இருப்பார்கள் என்பது விதியாகவே மாறிவிட்டிருந்தது.
   அதேபோல, கடந்த மூன்று ஆண்டுகளாக அவரது பிறந்த நாளின்போது இளம் இலக்கியவாதிகளுக்கு "சிலம்பொலி விருது' வழங்கிக் கொண்டாடும் நிகழ்வில், நிரந்தர அழைப்பாளராகவே என்னை மாற்றிவிட்டிருந்தார் அவர். மேடையில் தனக்கு அருகில் என்னை அமரவைத்து அழகு பார்ப்பதிலும், எனக்குப் பெருமை சேர்ப்பதிலும் அவருக்கு, ஒரு தகப்பனுக்கே உரித்தான வாஞ்சை இருப்பதை உணர்ந்து நான் நெகிழ்ந்த தருணங்கள் ஏராளம்... ஏராளம்...
   சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் வெற்றியில், "சிலம்பொலி' செல்லப்பனார் பெரும் பங்கு வகித்தார். மாநாட்டு மலரைத் தொகுத்து வடிவமைத்த பெருமை அவரையே சேரும். தமிழ் மாநாடு நடத்தப்படும்போது, அதற்கான மலர் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் சிலம்பொலியார்தான் என்பதைத் தமிழறிஞர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்வர்.
   அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று இருக்குமானால், அது பிழையுடன் எழுதப்படும் தமிழ்தான். தீக்குள் விரலை வைத்தாற்போல பிழையுடன் கூடிய தமிழைப் பார்த்தால் துடித்து விடுவார். "தினமணி'யில் சொற்குற்றமானாலும், பொருள் குற்றமானாலும் உடனடியாக அவரிடமிருந்து தொலைபேசி வந்துவிடும்.
   தவறு கண்ட இடத்தில் தண்டிப்பதும், பாராட்ட வேண்டிய செயலைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதிலும் எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கே ஆசானாக இருந்த பெருந்தகை இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைத்தாலே இதயம் கனக்கிறது.
   சிலம்பொலியாரின் மறைவுச் செய்தி வந்தபோது நான் தஞ்சையில் இருந்தேன். இப்போது நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது நான் நாமக்கல் சிவியாம்பாளையத்துக்கு விரைந்து கொண்டிருக்கிறேன். இறுதி மரியாதை செலுத்த...
   அடுத்த வாரம் ஞாயிறு "தினமணி கதிர்' இதழ், சிலம்பொலியார் நினைவுகளைத் தாங்கி வரும்.
   
   முன்பு ஒரு முறை, எங்கள் சிவகங்கை நிருபர் ச.சந்தனக்குமார் குறித்து நான் பதிவு செய்திருக்கிறேன். தமிழ் இலக்கியம் படித்தவர். 'தினமணி'யில் நிருபராகப் பணியில் சேர்ந்த பிறகும் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டி வருபவர். தொடர்ந்து புத்தகங்களைப் படித்து வருபவர். அவற்றில் தனக்குப் பிடித்த புத்தகம் இருந்தால் அதை மறக்காமல் என்னிடம் தெரிவிப்பவர். கடந்த வாரம் நான் சிவகங்கை வழியாகப் பயணித்தபோது, அவர் என்னிடம் படிப்பதற்குத் தந்த புத்தகம் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி எழுதிய "ஐம்பெரும் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல்'.
   என் இனிய நண்பர், காலம் சென்ற முனைவர் அ.அறிவுநம்பியின் அணிந்துரையுடன் வெளிவந்திருக்கும் புத்தகம் என்பதிலிருந்தே இந்தப் புத்தகத்தின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ளலாம். புதுவை மையப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தின் பேராசிரியராக இருந்த முனைவர் அ.அறிவுநம்பியால் "பாராட்டுக்குரிய புதுமை வேட்டல்' என்று பாராட்டப்பட்டிருக்கும் படைப்பு எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மியின் "ஐம்பெரும் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல்'.
   முனைவர் அறிவுநம்பி குறிப்பிட்டிருப்பதுபோல, நுண்ணிய செய்திகள் பல இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பழமொழிகள், சங்கப் பாடல்கள், திருக்குறள், சங்கம் மருவிய நூல்கள், பக்திப் பனுவல் வரிகள் போன்றவற்றை தேவைப்பட்ட இடங்களிலெல்லாம் கையாண்டு, தனது ஆய்வுக்கு சுவையூட்டி இருக்கிறார் ஆசிரியர். தனித் தமிழ் இயக்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்த மூலவர் இளங்கோவடிகள் என்ற குறிப்பும், இசை வளர்த்த சிலப்பதிகாரத் தமிழகம், இப்போது சிதைவு காணும் தமிழகமாக மாறியதே என்கிற குறிப்பும் குறிப்பிடத்தக்கவை.
   தமிழகத்தின் ஐம்பெருங் காப்பியங்களை அறிமுகம் செய்வதாக அல்லாமல் வரலாற்றியல், ஒப்பியல், தருக்கவியல், அமைப்பியல் போன்ற கோட்பாடுகளின் வழியாகத் தமிழர் தம் வாழ்வியலை எடுத்தியம்ப முற்பட்டிருக்கிறார் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி. ஒரு வித்தியாசமான பார்வையும், மாறுபட்ட சிந்தனையும் ஒரு முறைக்கு இரு முறை சில பதிவுகளைப் படித்து அடிக்கோடிட்டுக் குறித்துக்கொள்ளத் தூண்டுகிறது.
   
   விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் மா.உ.ஞானவடிவேலின் "அதிகாலைத் தேநீர்' என்கிற கவிதைத் தொகுப்பு. அதில் "காலம்' என்றொரு கவிதை.
   உடலுக்கும் பிணிக்குமாய்
   விளையாட்டு நடக்கிறது
   காலம் நடுவராக நின்று
   நடத்துகிறது
   உடலுக்கும் பிணிக்குமான
   விளையாட்டின்
   இறுதிச் சுற்றில்...
   கள்ளாட்டம் ஆடி
   ஜெயித்து விடுகிறது
   காலம்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai