Enable Javscript for better performance
சிறந்த "அறம்' எது?- Dinamani

சுடச்சுட

  
  ARAM

  தமிழர் வாழ்வியலின் மூன்று கோட்பாடுகளாக அமைந்தவை அறம், பொருள், இன்பம் என்பன. இவை மூன்றிலும் அறம் தலைமை உடையது.
   சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
   அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல (புறம் - 31)
   எனக் கோவூர்கிழார் அறத்தின் தலைமை கூறுவார். அறம் என்னும் சொல்லுக்கு கடமை, தருமம், கற்பு, புண்ணியம், அறநூல், அறக்கடவுள், அறச்சாலை, தருமதேவதை, யமன், ஞானம், நோன்பு, நல்வினை எனப் பொருள் உரைக்கும் அகராதி. அறம் என்பதற்குச் சுருங்கக்கூறின், "நல்லவை செய்தலும் அல்லவை கடிதலும்' எனலாம். தமிழர் தம் வாழ்வின் துறைதோறும் அறத்தை மையமாகக் கொண்டிருந்தனர். இல்லறம், துறவறம், காதலறம், போரறம், அரசியலறம் என அறம் என்பது எல்லாச் செயல்களிலும் நீக்கமற நிறைந்து நின்றது. வாழ்க்கையில் கடைப்பிடிக்கத்தக்க அறங்கள் பல உள்ளன. பற்பல நற்பண்புகளெல்லாம் அறத்தின் பன்முகங்களாகவே எண்ணப்பட்டிருக்கின்றன.
   சங்க காலத்திலிருந்து இன்று வரையிலான தமிழிலக்கியங்கள் அறத்தின் மாட்சிமைகளை நன்கு விளக்குகின்றன. தொட்டிற் பருவத்திலிருந்தே அறம் தொடங்கி விடுகிறது. "கொடையும் தயையும் பிறவிக்குணம்' என்று ஒüவையார் பிறப்பிலிருந்தே அறப்பண்புகள் மலர்வதைக் காட்டுவார்.
   பண்புமிக்க செல்வர் வீட்டுக் குழந்தை, புலவர் ஒருவருக்குத் தன் கையில் இருந்த நடைவண்டியையே கொடைப் பொருளாகக் கொடுத்ததாம். உள்ளம் சிலிர்த்த அவர், "நடை கற்குமுன் கொடை கற்றாயே' என்று பாடினாராம். பிறப்புத் தொடங்கி வாழ்க்கை முடியும் வரை மனித வாழ்வு அறத்தொடு இயங்குவதாக அமைய வேண்டும் என்பது தமிழிலக்கியத்தின் நுவல் பொருளாகும்.
   சங்ககாலம், அவரவர் தம் கடமையை முறையாக ஆற்றுவதை அறமாக எண்ணியது. இதைப் புலவர் பொன்முடியார் (புறம் - 312) பட்டியலிட்டுள்ளார்.
   மேலும், சங்ககாலம் கொடையறத்தில் பீடுற நின்ற பெருமைக்குரியது. பாரி, பேகன், ஆய், அதியன், ஓரி, காரி, நள்ளி என்னும் கடையெழுவள்ளல்கள் ஒருவரை ஒருவர் புகழில் விஞ்சுமளவு கொடை நேர்ந்தமை கூறப்படும். இதற்கு மேலும் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? அரியணை இருந்த அரசன் எல்லாம் துறந்து காட்டில் கிடந்து நலிந்த நிலையிலும் இரந்து வந்த புலவனுக்குத் தலையைக் கொடுக்க முன்வந்த குமணன் செயல் (புறம் 165) கொடையறத்தின் உச்ச நிலையாகும்.
   உயிரிரக்கம் என்னும் பண்பே அறத்தின் மையக்கரு. பசித்தவர்க்கு எல்லாம் உணவு வழங்கிய அறம் சிறுகுடிப்பண்ணனில் தொடங்கி
   வள்ளலார் வரையில் வரலாற்றில் பொன்போலப் பொலியக் காணலாம்.
   அறம் உயிர்க்குத் துணையாவது எனத் திருக்குறள் (குறள் -31)
   மொழியக் காண்போம். அறம் என்பது நினைவு, சொல், செயல் என்னும் மூன்றானும் செய்யப்படுவது எனினும், மனமே அதாவது நினைவே அறத்தின் மிக இன்றியமையா தளமாகும்.
   மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
   ஆகுல நீர பிற (குறள் 34)
   என இதன் தலைமைக் கூறப்பெறும். திருவள்ளுவர் அறத்திற்கு விளக்கம் கூறுகையில்,
   அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
   இழுக்கா இயன்றது அறம் (குறள் -35)
   என்று நான்கு வகையால் அறம் குற்றப்படாவாறு கூறினார்.
   இல்வாழ்வின் முதுகெலும்பாக அமைந்தது அறம். துறவறம் செய்வார் தம் கருமம் செய்வார். இல்லறம் புரிவார் துறந்தார், துவ்வாதவர், இறந்தார் என எல்லா வகையினார்க்கும் துணையாக அமைவர். அன்பு என்பது இல்வாழ்வின் பண்பு என்றும், அறம் அதன் பயன் என்றும் கூறியமை (குறள் 45) இல்லறத்தின் இரு நாடிகளைத் தெளிவாகப் புலப்படுத்திய பாங்கைத் தெரிவிக்கும்.
   இளங்கோவடிகள் அரசியல் அறம் காட்டினார். "செல்லுயிர் கொடுத்தேனும் செங்கோலை வளையாது நிமிர்த்துவது அரசியல் அறமாகும்' என்பதை உணர்த்தினார். மணிமேகலை பசித்துயர் போக்குவதைத் தலையாய அறமாகப் (மணி.13) போற்றியது.
   மணிமேகலையும் ஆபுத்திரனும் மக்கள் பசி துடைத்த சமயநெறிக் காலத்தில், திருக்கோயில் பணி செய்தலும், விருந்தோம்பலும், ஆதரவற்றாரைப் பேணலும், கருணை கூர்ந்து யாவருக்கும் வேண்டுவன ஈதலும் அறமெனப் போற்றப்பட்டன. பெரியபுராணம் காட்டும் இளையான்குடி மாறனார் வரலாறு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
   இடைக்காலத்தும் பிற்காலத்தும் எல்லோருக்கும் உணவு வழங்கல் பேரறமாக விளங்கியது. சமணரும், கிறிஸ்தவரும் கல்வி புகட்டுதலாகிய அறத்தில் கருத்துச் செலுத்தினர். மாணவர்க்குச் சுவடிகளைக் கொடுத்தல் சமணர் அறமாக விளங்கியது.
   "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்' என்று தொடங்கிய மகாகவி பாரதியார், "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றதே பிற்காலத்தில் தலையாய அறமாகப் போற்றப்பட்டது. யாவரும் கல்வி கற்கும் நிலையே தமிழர்க்கு வேண்டுவது என்றார் பாவேந்தர். இன்றியமையாப் பேரறமாக இன்று ஏழைக்கு அறிவூட்டல் திகழ்கின்றது.
   மக்களுக்குத் துயரம் என்றதும் களமிறங்கி கடமை ஆற்றுவார் ஒரு திரைப்படத்தில் மாவட்ட ஆட்சியராக வரும் கதாநாயகி. எனவே, கடமையாற்றுவதுதான் அறம்.
   இது தேர்தல் நேரம். ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டும் என்பது உரிமை மட்டுமல்ல, கடமையும் ஆகும். யார் மக்களுக்குக் கடமையாற்றுவார்களோ அவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்; அதுதான் தேர்தல் அறம். அறம் தவறின் நாம் மனிதர்கள் அல்லர்; மரம்.
   -முனைவர் அரங்க. பாரி
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai