Enable Javscript for better performance
கந்தை - இருநான்கா? இருநான்கொடு ஒன்றா?- Dinamani

சுடச்சுட

  

  கந்தை - இருநான்கா? இருநான்கொடு ஒன்றா?

  By DIN  |   Published on : 14th April 2019 01:54 AM  |   அ+அ அ-   |    |  

  KANTHAI

  மலைவளமும் மண்வளமும் நிரம்பிய பகுதி அது. அப்பகுதியின் மன்னனுக்கு ஓர் அழகிய மகள். இயற்கையின் அழகின் தன் இதயத்தைப் பறிகொடுக்கும் அவள் அன்றும் வழக்கம் போல் தன் தோழிகளுடன் மலைவளம் காணச் செல்கிறாள்.
   அன்றோர் அதிசயக் காட்சி. வியப்பு மேலிட தன் தோழிகளை அழைத்து அந்தக் காட்சியைக் காட்டுகின்றாள். காண்போர் மயங்கும் தோற்றத்தில் ஓர் ஆண்மகன் நாட்டிய முத்திரைகளைத் தனது முகபாவத்தாலும், கால், கைகளினாலும் காட்டிக் கொண்டிருந்தான். பொலிவான ஒளிரும் முகம்; விரிந்த மார்பு; சற்றே குறுகிய இடை; நீளமான கூந்தலுடன் நிறைவாய் இருந்தது அவன் உடற்கட்டு; தனியே ஆடிக் கொண்டிருந்தான்; இடையில் ஒரே ஒரு கந்தை ஆடை.
   விலக முடியாமல் அந்தக் காட்சியில் தனை மறந்திருந்த தோழிகளை தலைவியே விலக்கி, வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் அனைவரும். வீடு வந்தும் அந்தக் காட்சியில் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தாள் தலைவி. விளைவு, நாள்தோறும் மாலையில் அவனது நாட்டியம் காண நாணமுடன் தோழிகளுடன் விரைந்தாள். துணிவை வரவழைத்துக்கொண்டு அவனுடன் பேசத் துவங்கினாள். அவனது குரல் தலைவியை மேலும் மயக்கியது.
   இனம் காண இயலாத இன்ப ஊற்று அவளது உடலில் பரவ, முகத்தையும் உடலையும் உற்று நோக்கி, "கந்தையுடை உடுத்தியுள்ளீர்! அதுவும் ஒரே ஒரு கந்தையாடை ஏன்?''
   என்றாள்.
   பொலிவான முகத்தில் புன்னகை தவழ, "தடையில்லாத இனிய மொழியுடையவளே! நீ சொல்வது உண்மைதான், நான் ஒரு கந்தையை உடையாய்க் கொண்டிருக்கின்றேன். ஆனால், நீயோ எட்டு கந்தையை உடுத்திக் கொண்டிருக்கின்றாயே! இது சரியா?'' எனக் கேட்கிறான் அவன்.
   வெட்கத்தில் முகம் சிவந்தாள் தலைவி. அழகிய உடைகளை, அணிகலன்களை, அளவிட முடியாத வாசம் வீசும் அவளை நோக்கி "எட்டு கந்தை உடையவள்' என ஏகடியம் செய்துவிட்டானே என மனதிற்குள் பொங்கிப் பொசுங்கி "என்ன சொன்னீர்? நன்றாய் எனைப் பாருங்கள்; பின்னர் சொல்லுங்கள்'' என்றாள்.
   ""பெண்ணே! உறுதியாய் நீ எட்டு கந்தையுடையவள்தான்! அதில் ஐயமில்லை'' என்றான் அவன்.
   "முந்தைய மறையோன் புகழ்ஒற்றி
   முதல்வர் இவர்தம் முகம் நோக்கி
   கந்தையுடையீர்! என்னென்றேன்?
   கழியா வுன்றன் மொழியாலே
   இந்து முகத்தோய் எமக்கென்றே!
   இருநான் குனக்குக் கந்தையுள(து)
   இந்த வியப்பென் னென்கின்றான்!
   இதுதான் சேடீ என்னேடி!
   (திருவருட்பா - திரு.2) "இங்கிதமாலை' -பா.16)
   அழுத கண்ணைத் துடைத்துக்கொண்டு அமுத மொழியாள் வீடுவந்து, அந்த நாட்டியக்காரனின் வார்த்தைகளை அசைபோட்டுப் பார்த்தாள். ஒன்பது கந்தை என்றாலும் ஒருவாறு ஊகிக்கலாம். எட்டு கந்தை என்கின்றாரே! என்ன இது?
   தோழி ஒருத்தியிடம் தோண்டித் தோண்டி விளக்க வேண்டினாள். நீண்ட விவாதத்திற்குப் பின் அவள் தோழியின் வாயிலாய் பொருள் உணர்ந்தாள்.
   எட்டு என்பதைத் தமிழில் "அ' என எழுதுதல் மரபு. எட்டு கந்தை என்பது "அகந்தை' வேறென்றுமில்லை. சைவ சித்தாந்தம் கூறும் மும்மலங்களில் (ஆணவம், கன்மம், மாயை) முதல் மலம் அகந்தை (ஆணவம்). அது நீங்கினால் முதல்வனை (ஆண்டவனை) அடையலாம் என்றாள் தோழி.
   ஓரெழுத்து ஒரு சித்திரம் (மொழி) எனில், அதற்கு இராமலிங்க அடிகளாரின் அருட்பாடல்களே சிறந்த எடுத்துக்காட்டு. வாசித்து மகிழ்வதினிலும் வாழ்ந்து மகிழலாம்.
   -இரா. வெ. அரங்கநாதன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai