Enable Javscript for better performance
இந்த வார கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  

  இந்த வார கலாரசிகன்

  By DIN  |   Published on : 21st April 2019 02:48 AM  |   அ+அ அ-   |    |  

  tm5

   

  ஜெயகாந்தனையும் கண்ணதாசனையும்போல நானும் 24-ஆம் தேதி பிறந்தவன் என்பதில் எனக்கு ஒருவித பெருமிதம் உண்டு. அதனால்தானோ என்னவோ அந்த ஆளுமைகள் மீதும் அவர்களது படைப்புகளின் மீதும் எனக்கு அளப்பரிய ஈர்ப்பு கல்லூரி நாள்களிலிருந்தே ஏற்பட்டது. 

  " ஜெ.கே.' என்று நட்பு வட்டத்தால் அழைக்கப்படும் ஜெயகாந்தனின் 85-ஆவது பிறந்தநாள் வரும் புதன்கிழமை வருகிறது. முனைவர் ம. இராசேந்திரன், கவிஞர் இளையபாரதி, நண்பர் ராஜ்கண்ணன், கிருங்கை சேதுபதி ஆகியோரைப் போல ஜெயகாந்தனிடம் நெருங்கிப் பழகும் பேறு எனக்குக் கிட்டவில்லை. ஆனால், அவர்கள் கூறக்கேட்டு அந்த ஆளுமையின் பிரம்மாண்டம் குறித்து ஏற்படும் வியப்பில் விக்கித்துப் போயிருக்கிறேன். 

  ஜெயகாந்தனைப் பற்றி நினைக்கும்போது நிழலாகவே அவரைத் தொடர்ந்த, அவருடைய படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அவரது இணை
  பிரியாத் தோழர் கே.எஸ்.சுப்பிரமணியனை எப்படி நினைக்காமல் இருக்க முடியும்? டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் எழுதிய "அனுபவச் சுவடுகள்' புத்தகம் நினைவுக்கு வந்தது. 17 கட்டுரைகளை உள்ளடக்கிய "அனுபவச் சுவடுகள்' எத்தனையோ தகவல்களைப் போகிற போக்கில் பதிவு செய்து போகிறது. 
  ஜெயகாந்தன் குறித்த பதிவு இது - "ஜெயகாந்தன் நிறையவே பேசுவார்'. அந்த சம்பாஷணை சுகத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் அதனுடைய தாத்பரியம் புரியும். இதனை எண்ணற்ற முறை அனுபவித்தது எனது பாக்கியம். அந்த  அர்த்தமுள்ள, இனிமையான மாலை நேரங்கள் 7 அல்லது  8 மணி முதல் தொடங்கிக் காலை 1 மணி வரைகூட தொடரும். இலக்கியப் பரிமாற்றம்; சுருள் சுருளாகக் கிளர்ந்தெழும் புதுமைக் கோணக் கருத்துகள்; இயல்பான; பிசிறில்லாத ஹாஸ்ய ரசத்தின் பல விகசிப்புகள். அருமையான அனுபவம் இது' என்று கே.எஸ். கூறும்போது, ஜெ.கே.யின் மடத்தில் அங்கத்தினராக இல்லாமல் போனோமே என்கிற ஏக்கம் எனக்கு மட்டுமல்ல, இதைப் படிப்பவர்களுக்கும் ஏற்படும்.

  கே.எஸ். போலவே எனக்கும் அமரர் "பாரத ரத்னா' சி.சுப்பிரமணியம் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டியதும் எனது பெரும் பேறு. "சி.எஸ். மாமா' என்கிற தலைப்பில் டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் செய்திருக்கும் பதிவைப் படிக்கும்போது, பெரியவர் சி. சுப்பிரமணியத்தை சந்தித்தபோது எனக்கும் அதேபோன்ற உணர்வு மேலிட்டதை உணர்ந்தேன். 

  "பொதுவாக, நாம் மரியாதை செலுத்தும் பெரியோர்களுடன் நெருங்கிப் பழகும்போது அவரது ஆளுமையில் உள்ள வடுக்கள் நம்மைச் சலனமடையச் செய்யும். இதற்கு மாறாக, சி.எஸ். மாமாவுடன் நெருங்கிப் பழகும்போது அவரது ஆளுமையின் பிரம்மாண்டம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது' என்பது கே.எஸ். மட்டுமல்ல, நானும் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. "அனுபவச் சுவடுகள்' படிப்பதற்கான புத்தகம் மட்டுமல்ல, படிப்பினைக்கான புத்தகமும்கூட. 


  ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் மகாகவி பாரதியின் மீது அளப்பரிய மரியாதையும், தமிழ்க் கவிதை மீது இயம்பவொண்ணாக் காதலும் கொண்ட வழக்குரைஞர் கே. ரவி, "வானவில் பண்பாட்டு மையம்' சார்பில் வெளியிடப்பட்ட அவரது "நமக்குத் தொழில் கவிதை' என்கிற கட்டுரைத் தொகுப்பை அனுப்பித் தந்திருந்தார். அவர் அனுப்பித்தந்த அடுத்த ஒரு வாரத்திற்குள் அதைப் படித்து முடித்துவிட்டேன். அதன் பிறகு எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் படித்தும் இருக்கிறேன். ஆனால், இப்போதுதான் அது குறித்துப் பதிவு செய்ய வேளை வந்திருக்கிறது. 

  23 ஆண்டுகளுக்கு முன்னால் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம், தமிழில் சிரஞ்சீவித்துவம் பெற்ற அற்புதமான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு என்பதை அடிக்கோடிட்டுக் கூறுவதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை.
  மகாகவி காளிதாசனின் கூற்று ஒன்று உண்டு - "கவிதா ரஸ சாதுர்யம், வ்யாக்யாதா வேத்தி: ந கவி:'. அதாவது, ஒரு கவிதையின் ரசனை என்பது அதை எழுதிய கவிஞனுக்குத் தெரியாது. அதை வாசித்து ரசிக்கும் ரசிகனுக்கும், விமர்சகனுக்கும்தான் தெரியும் என்று பொருள். "நமக்குத் தொழில் கவிதை' புத்தகத்தைப் புரட்டும்போதும், படிக்கும்போதும் காளிதாசனின் அந்த வரிகள்தான் மின்னல் கீற்றுப்போல என் நினைவில் உரசிச் செல்லும்.

  இந்தக் கட்டுரைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கும் கவிமாமணி ந.சீ. வரதராஜன் (பீஷ்மன்) கூறியிருப்பதைவிட மேலாக என்னால் கே. ரவியின் ரசனை குறித்து எடுத்தியம்பிவிட முடியாது - "கவிதை எழுதுவது, கவிதை புனைவது, கவிதை பாடுவது என்கிற நிலைகளையெல்லாம் கடந்து, கவிதை யோகத்தில் ஆழ்வது என்ற நிலை பற்றி இந்தக் கட்டுரைகளில் கே. ரவி அதிகமாக சிந்தித்திருக்கிறார். கவிதை யோகத்தில் ஆழ்ந்து, அந்த ஆழ்நிலையிலேயே கவிஞனிடம் இருந்து வெளிப்படும் கவிதைகளின் கனலொளியை தரிசித்து மகிழ்வதும், அவற்றின் தன்மைகளில் நனைந்து நனைந்து சிலிர்ப்பதுமான அனுபவங்களை வெளிப்படுத்தும் முயற்சியாகவே இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெளியாகி உள்ளன'. 

  கம்பனிலும் பாரதியிலும் மட்டுமல்ல, புதுக்கவிதையிலும் மூழ்கிக் களித்திருக்கும் கே. ரவியையும், அவருடைய துணைவியார் ஷோபனா ரவியையும், அவர்களது இலக்கிய ரசனையையும் எத்துணை பாராட்டினாலும் தகும். "கவிதை வரம்'  கட்டுரை, "நமக்குத் தொழில் கவிதை' புத்தகத்தின் முத்தாய்ப்பு. இந்தப் புத்தகம் குறித்து சொல்வதற்கு, மேலே சொன்ன காளிதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

  இணையத்தில் பொழுதுபோக்கும் போதுகூட எனது தேடல் என்னவோ கவிதைகளாகத்தான் இருக்கும். நேற்றிரவு எழுத்து டாட் காமில் பதிவாகியிருந்த கவிதைகளை படித்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருந்தபோது, பார்வை இலங்கையைச் சேர்ந்த கயல்விழி மணிவாசனின் கவிதையில் பதிந்தது. இப்போது எந்த ஊரில் வசிக்கிறார், என்ன செய்கிறார் போன்ற தன்விவரக் குறிப்புகள் தெரியவில்லை. "வனம் காக்க மறந்து விட்டோம்' என்பது தலைப்பு. கவிதை இதுதான்:

  உண்ண உணவளித்து
  உயிர்க்காக்க நீர் அளித்து
  உடலுக்கு இதமளித்து
  உன்னத உணர்வளித்து
  சுத்தமான தென்றலை
  சுவாசிக்க வரமளித்து
  வண்ண மலர் அளித்து 
  இளைப்பாற நிழலளித்து
  பாய்ந்தோடும் நதியோடு
  பசுமையை எமக்களித்த 
  வனம் காக்க என்ன செய்தோம்? 
  பணத்துக்காய் விற்றுவிட்டோம்!
  மின் விசிறி வரவினால் 
  மென்காற்றை மறந்துவிட்டோம்!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai