Enable Javscript for better performance
குறளுடன் இயைவன!- Dinamani

சுடச்சுட

  

  குறளுடன் இயைவன!

  By - உமா கல்யாணி  |   Published on : 21st April 2019 02:44 AM  |   அ+அ அ-   |    |  

  tm3

  திருக்குறள் பாடல்கள் ஒவ்வொன்றும் சங்க இலக்கியப் பாடல்களுடன் எவ்வகையிலேனும் இயைபுடையனவாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, "குறிப்பறிதல்' என்ற அதிகாரத்தில் வரும் முதல் மூன்று குறள்களும் குறிப்பறிவாரது சிறப்பைப் பேசுகின்றன. அவற்றுள், 

  "குறிப்பிற் குறிப்புணர்வாரை உறுப்பினுள்
  யாது கொடுத்தும் கொளல்'

  எனும் மூன்றாவது குறள் புறநானூற்றுப் பாடல் ஒன்றுடன் மிகவும் இயைந்து போகிறது. பரிமேலழகர் இக்குறளுக்கு, ""தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை அரசர் தம் உறுப்புக்களில் அவர் வேண்டுவது ஒன்றைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க'' என்று பொருள் உரைக்கின்றார்.

  இங்கே அரசரின் உறுப்புகளாகச் சொல்லப்படுவது பொருள், நாடு, யானை, குதிரை முதலியவை. இதற்கு இயைபுடையதாகிய ஒரு பாடல்தான் (புறநா) 179-ஆவது பாடலாகும். இப்பாடலைப் பாடியவர் வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும் கூறப்படும். பாடப்பட்ட அரசன் "நாலை கிழவன் நாகன்'; 

  "வல்லாண் முல்லை' துறையில் அமைந்த இப்பாடல் வாகைத் திணைக்குரியது.

  "ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,
  ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
  மலர்ப்போர் யார்? என வினவலின் மலைந்தோர்
  விசிபிணி முரசமொடு மண்பல தந்த
  திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன் 
  படை வேண்டுவழி வாள் உதவியும்,
  வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
  வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
  அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்,
  தோலா நல்லிசை, நாலை கிழவன்    
  பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
  திருந்துவேல் நாகற் கூறினர், பலரே' (பா.179) 
      

  புலவர் வட நெடுந்தத்தனார், தமது வறுமையைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு, "வள்ளல் இல்லை என்று கவிழ்த்து வைத்திருந்த என் உண்கலத்தை உணவிட்டு மலரச் செய்பவர் யார்' என வினவிக் கொண்டிருந்தபோது, "நாலூர் (நாலை) என்னும் ஊரில் வாழ்ந்த நாகன் என்பவன் பசிப்பிணியைப் போக்குவான் எனப் பலரும் கூறினர். இந்த நாகன் நற்பணிக்கு உதவும் திருந்திய வேலினை உடையவன். நாடுகள் பலவற்றை வென்ற பசும்பூண் பாண்டியன் என்னும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனுக்குப் படைக்கருவிகளையும், படைவீரர்களையும் திரட்டித் தந்து உதவியவன். 

  இந்தப் பாண்டியனுக்காகப் போரிலும் ஈடுபட்டவன். தளராத நுகம் போன்றவன்; தோல்வி காணாத புகழை உடையவன்.  பருந்தின் பசி தீர்க்கப் பகைவரை அழித்துப் போரிட்டு, போரிலே வெற்றி கொள்ளும் நாலை கிழவன் நாகன் உளன்' என்றனர் பலரும்.  

  திருமகள் விரும்பிய நுண்ணிய தொழில் பொருந்திய ஆபரணத்தை அணியும் பாண்டியன் மறவனுக்கு, நாலை கிழவன் நாகன் வேண்டும் தருணத்தில் வாள் போரை உதவுகிறான். அரசியற்கேற்ற கருமச் சூழ்ச்சி வேண்டிய இடத்து அமைச்சியலோடு நின்று அறிவுரை பல உதவுகின்றான்.

  இவ்வாறு தன் மன்னனுக்கு எப்பொழுது எது தேவையெனக் குறிப்பினால் உணர்ந்துகொண்டு, அரசனுக்குக் கை கொடுப்பதில் வல்லவனாய் இருக்கின்ற நாலை கிழவன் நாகனை, பாண்டிய மாறன் தனது உறுப்பினுள் (உடைமையினுள்) எதையேனும் கொடுத்துத்தான் அமைச்சனாகவும், படைத்தலைவனாகவும் ஆக்கியிருப்பான் என்பது உறுதி. வள்ளுவம் சொல்லும் குறிப்பறிதலுக்கு, இப்புறநானூற்றுப் பாடல் எத்தகைய இயைபுடன் விளங்குகிறது பாருங்கள்!

  kattana sevai