கடவுளைத் தொழுவதும் தவறுகொல்?

மணவிலக்குகளும், மறுமணங்களும் மிகுதியாகக் காணப்படும் இற்றை நாளில் "கற்பு' எனும் சொல்லுக்கு வெவ்வேறு வகையில் பொருள் கூறும் போக்கைக் காண்கிறோம். 
கடவுளைத் தொழுவதும் தவறுகொல்?


மணவிலக்குகளும், மறுமணங்களும் மிகுதியாகக் காணப்படும் இற்றை நாளில் "கற்பு' எனும் சொல்லுக்கு வெவ்வேறு வகையில் பொருள் கூறும் போக்கைக் காண்கிறோம். 

அற்றை நாளில் கற்பெனப்படுவது "சொற்பிறழாமை' என்றும், "கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு சுடும் பெற்றியர்;  அதனால் பிறர் நெஞ்சு புகார்' என்றும், அத்தகு பெருமைமிகு பெண்கள் "பெய்க' என ஆணையிட வான் மழை பொழியும் என்றும், அதுவே கற்பினுக்கு இலக்கணம் என்றும் இயம்புவர் நூலோர்.

வள்ளுவப் பேராசானின் சொற்களை அப்படியே நேரிடையாகவும் சில மாறுதலுடனும் ஏற்றுக்கொண்ட பிற்காலப் புலவர்கள் பலர். இதற்கொப்ப மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரும்,

"தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை'

என்ற திருக்குறளை எடுத்துக்கொண்டு தெய்வத்தைத் தொழுத ஒரே குற்றத்திற்காக "மருதி' எனும் பெண் எவ்வாறு தன் கற்பினை இழந்தவளாகி - இழிந்தவளானாள் என்பதை விளக்கும் பாங்கு "கடவுளைத் தொழுவது கற்புடைய பெண்களின் செயல் ஆகாது; அதனால் அவள் கற்பு கெடுமேயன்றி நிலைக்காது;  அவள் நிறை கற்புடையவள் அல்லள்' என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதை எடுத்துரைக்கும் நிகழ்வு பின்வருமாறு:

மருதி எனும் மங்கை நல்லாள்,  யார் துணையுமின்றி தனியளாய் புகார் நகரத்துக் காவிரியில் நீராட வருகிறாள். அதுகண்ட சுகந்தன் எனும் புகார் மன்னனின் மகனான சிறுவன் மருதி கற்பற்றவள் (தெய்வத்தைத் தொழும் பொருட்டுத் தனியாக வந்ததால்) என்று கருதி அவளை நோக்கி, "நீ என்னுடன் வா..'  என அழைக்கிறான். 

இதனால் துடித்துப் போகிறாள் துடியிடையாள்! "கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகாரே! நான் எப்படி அச்சிறுவனின் நெஞ்சில் புகுந்தேன். யான் செய்த குற்றம் என்ன?' என பூம்புகார் நகரத்து சதுக்கப்பூதத்தின் முன் நின்று பூதத்தை நோக்கி வினவுகின்றாள். இது கேட்ட,

மாபெரும் பூதம் தோன்றி, "மடக்கொடி 
நீ கேள்' என்றே நேரிழைக்கு உரைக்கும்
தெய்வம் தொழாள், கொழுநற் றொழுதெழுவாள் 
பெய்பெனப் பெய்யும் பெருமழையென்றஅப்
பொய்யில் புலவன் பெருளுரை தேறாய்!
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு 
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்
கடவுட் பேணல் கடவியை யாகலின்,
மடவரல்! ஏவ, மழையும் பெய்யாது;
நிறையுடைப் பெண்டிர் தம்மே போல
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை;
ஆங்கவை ஒழிக்குவை யாயின், ஆயிழை!
ஓங்கிரு வானத்து மழையும்நின் மொழியது
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போல
(மணி. 22, சிறைசெய் காதை, 57-70)

இதற்கு சதுக்கப்பூதம், "தெய்வத்தைத் தொழாதவளாகத் தன் கணவனையே தனக்குரிய தெய்வமாகத் தொழுது எழுகின்ற கற்புடைய நங்கை, பெய்யென்று ஏவப் பெருமழையும் அந்நிலையே பெய்வதாகும் என்று கூறிய அந்தப் பொய்யுரைத்தலில்லாத புலவனின் பொருள் பொதித்த அறவுரையினைத் தெளிந்து நீயும் மேற்கொள்ளாதவள் ஆயினை. மெய்ப்பொருளோடு சேராத பொய்யுரைகளையும், பொருளோடு கலவாத வெற்றுரையாக விளங்கும் உரைகளையும் பிறர் சொல்லக் கேட்டு, அவற்றின்படியே நடப்பவளாகவும் ஆயினை.

கட்டப்பெற்ற கட்டினையுடைய முழவின் முழக்கத்தோடும் கூடியதான விழாக் கொள்ளுதலைக் காண்பதற்கு விருப்பம் உடையளாகிக் கணவனையன்றி வேறு கடவுளைப் பேணுகின்ற ஒரு கடப்பாட்டினையும் மேற்கொள்வாய் ஆயினை! ஆதலினாலே, மடவரலே! நீ ஏவினால் மழையும் பெய்யாது. உள்ளத்தே நிறையுடை கற்புடைய பெண்டிரைப் போல பிறர் நெஞ்சினைச் சுடுகின்ற கற்புத் தன்மையும் நின்பால் இல்லை. முன் சொல்லிய நின் பிழையினை நீ கைவிட்டனையானால், மிகுதியாக உயர்ந்த வானத்து மழையும் நின் ஏவலைக் கேட்கும் தன்மையதாகும். கற்புடையப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகூஉம் எளியர் அல்லர்; பிறர் நெஞ்சு சுடும் பெற்றியர் என்ற தன்மையை உணர்க' என்கிறது பூதம்.

இதன் முடிவு, பிறரால் காமுறப்படுதலே கற்பின் நிறைக்கு ஓர் இழுக்குத் தருவதாகும் என்பதாம்.

இந்தச் செப்பத்துடனேயே கற்புடைமையைப் போற்றியும், பேணியும் மதிப்பது பழந்தமிழர் மரபாக இருந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com