Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  


  பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது மனிதர்களுக்கும் பொருந்தும் உவமைதானா என்கிற ஐயப்பாட்டைப் போக்குகிறது கே.பி. ராமகிருஷ்ணனின் செயல்பாடு. "தினமணி' வாசகர்களுக்கு கே.பி. ராமகிருஷ்ணனைத் தெரியாமல் இருக்காது. ஞாயிறு கொண்டாட்டத்தில் அவர் எழுதியிருந்த "எம்ஜிஆரும் நானும்' (27.1.19 முதல்) தொடர் அந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்ற தொடர்.

  எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராகவும், அவர் இரட்டை வேடம் ஏற்ற திரைப்படங்களில் அவருக்கு மெய் மாற்றாக நடிப்பவராகவும் இருந்தவர் அவர். எம்.ஜி.ஆருடன் அவர் இயங்கிய பசுமை நிறைந்த நினைவுகளுடன் கூடிய நாள்களையும், நிகழ்ச்சிகளையும், "எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்', "மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்' என்று பல புத்தகங்களாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். 

  எம்.ஜி.ஆரின் புகழ் இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பதற்குக் காரணம், அவர்  நடிகர் என்பதாலோ, அரசியல் கட்சித் தலைவர் என்பதாலோ, தமிழக முதல்வர் என்பதாலோ மட்டுமல்ல. அதையெல்லாம் மீறி  அவர் மனிதாபிமானம் மிக்க மனிதராகவும், தன்னிடம் இருப்பதை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல் என்கிற பெயரை சம்பாதித்துக் கொண்டதாலும்தான்,  காலத்தால் அழியாத வரலாற்றுப் புகழை அவரால் அடைய முடிந்திருக்கிறது.

  அவரது நிழலாகத் தொடர்ந்த கே.பி. ராமகிருஷ்ணனும் தனது தலைவனின் வழியில் நடைபோட முற்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தனது புத்தகங்களில் இருந்து கிடைக்கும் காப்புரிமைத் தொகையை, ஆதரவற்ற முதியோரின் நலனுக்காகச் செயல்படும் "விஸ்ராந்தி' என்கிற முதியோர் காப்பகத்துக்கு வழங்கி இருக்கிறார். தனது மரணத்துக்குப் பின்பும்கூட, எம்.ஜி.ஆரின்  கொடைத்தன்மை கே.பி.ராமகிருஷ்ணனின் உருவத்தில் தொடர்கிறது என்பது நெகிழ்விக்கிறது.


  ஞாயிறு காலையில் குறைந்தது பத்து வாசகர்களிடமிருந்தாவது, "தினமணி' கதிரில் வெளியாகும் சின்ன அண்ணாமலையின் "சொன்னால் நம்ப மாட்டீர்கள்' தொடர் குறித்து சிலாகித்துத் தொலைபேசி அழைப்பு எனக்கு வரும். கடந்த ஞாயிறு அதிகாலை  முதல் அழைப்பு, மதுரையிலிருந்து வழக்குரைஞர் வெங்கட்ரமணனிடமிருந்து வந்தது. நான் சின்ன அண்ணாமலை பற்றிப் பேசப் பேச, அவரும் உச்சுக் கொட்டியபடி ரசித்துக் கொண்டிருக்க,  கைக்கடிகாரத்தில் பெரிய முள் ஒரு சுற்றுச் சுற்றி, அடுத்த 60 நிமிடத்துக்குத் தயாராகிவிட்டிருந்தது. 

  அவருடன் பேசி முடித்துவிட்டு, புத்தக அலமாரியைத் திறந்தால், என்ன ஆச்சரியம்! கொட்டக் கொட்ட என்னையே  பார்த்து விழித்துக் கொண்டிருந்தது சின்ன அண்ணாமலையின் "காணக் கண்கோடி வேண்டும்' என்கிற புத்தகம். இது அவரது கட்டுரைத் தொகுப்பு. "சொன்னால் நம்ப மாட்டீர்'களிலிருந்து இந்தப் புத்தகம் நிறையவே வித்தியாசப்படுகிறது.

  ஆசிரியர் கல்கியுடனும், "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியாருடனுமான அவரது பயணங்கள், கலந்து கொண்ட கூட்டங்கள், ருசிகரமான கட்டுரைகள் ஆகியவைதான் "காணக் கண்கோடி வேண்டும்' புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் அந்தக் கட்டுரைகளாகும். ராஜாஜி பற்றிய செய்திகளும்  குறிப்புகளும், ஒரு மிகப்பெரிய ராஜதந்திரியை, தொலைநோக்குப் பார்வை கொண்ட தீர்க்கதரிசியை, அப்பழுக்கில்லாத நேர்மையான அரசியல்வாதியைத் தமிழக அரசியல் எந்த அளவுக்குக் கொச்சைப்படுத்திக் களங்கப்படுத்த முற்பட்டது   என்பதை   சொல்லாமல் சொல்கின்றன.

  இந்தப் புத்தகத்தை நான் படிப்பது இது முதல் தடவையல்ல. சில திரைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதுபோல, சின்ன அண்ணாமலையின் இந்தப் புத்தகத்தை நான் பலமுறை படித்துவிட்டேன். இன்னும்கூடப் படிக்கக்கூடும். அதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை. அணிந்துரையில் ஆசிரியர் கல்கி எழுதியிருப்பதுபோல,  "புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்  ஒரு தடவையாவது வாசகர்கள் சிரித்தே தீரும்படியிருக்கும்'

  புதுக்கோட்டை  "ஞானாலயா' நூலகத்துக்கு 2015-இல் நான் போயிருந்தபோது, கிருஷ்ணமூர்த்தி  ஐயாவின் துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி கையெழுத்திட்டு எனக்கு அன்பளிப்பாகத் தந்த புத்தகம் ரவீந்திரநாத் தாகூரின் "சலனம்'.

  "குருதேவர்' ரவீந்திரநாத் தாகூரின்  "ஃப்யூஜிடிவ்', கல்லூரி நாள்களில் எனக்குப் பாடமாக இருந்த நூல் என்பதால், "சலனம்' எப்படி மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பதில் எனக்கு அதீத ஆர்வம் இருந்ததில் வியப்பில்லை. சில மொழிபெயர்ப்புகள்,  மூலத்தையே விஞ்சிவிடும் அளவுக்கு, மூல ஆசிரியர்களை ரசித்து,  உள்வாங்கி அவரது எழுத்துக்கு மெருகேற்றி எழுதப்பட்டிருக்கும். டோரதி கிருஷ்ணமூர்த்தியின் மொழியாக்கம் அந்த ரகத்தின்பாற்பட்டது.

  "சலனம்' கவிதையல்ல; நாடகமல்ல; கதையல்ல; வசனமல்ல - இவையெல்லாமே கடந்த சிறுசிறு நாடகக் காவியங்களின் தொகுப்பு. "இலக்கிய அழகும், கவித்துவ மணமும் கலந்ததொரு அழகிய அமரத்துவ மலராக "குருதேவர்' தாகூர் படைத்திருக்கும் "சலனம்', டோரதி கிருஷ்ணமூர்த்தியின் இதயம் கவர்ந்த படைப்பாக இருந்தது என்பது படிக்கும்போது பளிச்சிடுகிறது.

  "சலனம்' புத்தகத்தை இப்போதுதான் படித்தேனா? இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாகப் பலமுறை படித்துவிட்டேன். பிறகு ஏன் இது குறித்து இத்தனை நாள்களாக எழுதவில்லை? எழுதத் தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை? ரசனையில் திளைத்த மனம் எழுத மறந்து விட்டதோ என்னவோ...

  செ.கார்த்திகாவின் முதல் கவிதைத் தொகுப்பு "இறகென இருத்தல்'. கோவை கம்பன் கழகத்தின் தயாரிப்பு கார்த்திகா என்கிற முன்னுரை மட்டுமல்ல, "தவழ்ந்த குழந்தை எழுந்து நின்று  எட்டு வைக்க முயல்வதைப் போன்றதுதான் என் முதல் கவிதைத் தொகுப்பு முயற்சியும்.  என்னை இனி நடை பழக்குதல் உங்கள் விமர்சனங்களின் பொறுப்பே' என்கிற அந்த முன்னுரையின் முடிவுரையும், "இறகென இருத்தல்' தொகுப்பை ஒரு முறைக்கு இரு முறை படிக்க வைத்தது.

  புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்த இந்தக் கவிதைத் தொகுப்பிலிருந்து, நான்கைந்து கவிதைகள் என்னை ஈர்த்தன என்றாலும், எனது தேர்வு இந்தக் கவிதைதான்:
  எச்சமிட்டு விட்டு
  பறக்கும் பறவைகளை
  சபிக்காதீர்கள்
  அது ஒரு
  மரம் நடும்
  முயற்சியாக இருக்கலாம்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai