Enable Javscript for better performance
தமிழ்த் தாத்தாவின் தமிழன்பு- Dinamani

சுடச்சுட

  

  "தமிழ்த் தாத்தா'வின் தமிழன்பு!

  By எஸ். சாய்ராமன்  |   Published on : 25th June 2020 06:40 PM  |   அ+அ அ-   |    |  

  tm1

  "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் 1900-இல் தமக்குக் கிடைத்த "தமிழ்விடு தூது' என்னும் ஏட்டுச் சுவடியை அவர் கருத்தூன்றிப் படித்து வருகையில், அந்நூலாசிரியரின் ஒப்பற்ற தமிழன்பு சாமிநாதையரின் நெஞ்சைக் கசிந்துருகச் செய்தது. ஆம், "தமிழ்விடு தூது' என்னும் அந்தச் சுவடியில் 151-ஆவது கண்ணி பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

  "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்'

  "தமிழை "அமிழ்தம்' என்றும் சொல்லக்கூடாது. ஏனெனில் தமிழ்மொழி அமிழ்தினும் சிறந்ததாகும். அது தன்னிகரற்றது' என்னும் பொருள் பொதிந்த இந்தக் கண்ணியைப் படித்துத்தான் சாமிநாதையர் நெஞ்சம் நெகிழ்ந்துருகிக் கண்ணீர் பெருக்கி, மெய்சிலிர்த்தார். எனவே,  தமிழ்விடுதூதின் இந்தக் கண்ணியில் அவர் உள்ளம் சிக்கிக்கொண்டது என்று மிகவும் நயமாகக் குறிப்பிடுகின்றார் கி.வா.ஜ. தமது வாழ்க்கை நோக்கத்தைப் பூர்த்தி செய்வது போலவே இந்தக் கண்ணியைத் தனிச்சொல்லோடு இரண்டு அடிகளையும் சேர்த்துப் பாடிப் பின்வருமாறு பூர்த்தி செய்தார் உ.வே.சா.

  "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் 
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் - திருந்த 
  உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன்
  பதிப்பிக்க வேகடைக்கண் பார்' 

  இந்தப் பாடலை, "தமிழ்த் தெய்வ வணக்கம்' என்னும் தலைப்பில் ஐயரவர்களின் "தக்கயாகப்பரணி' பதிப்பு (1930) முகவுரையின் தொடக்கத்தில் இன்றும் தரிசிக்கலாம். "தமிழ்விடு தூது' 1930 ஆண்டிலேயே விரிவான ஆராய்ச்சி முகவுரையுடன் ஐயரவர்களால் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பெற்றது. 

  1902-ஆம் ஆண்டில் ஒரு சமயம் உ.வே.சா. கூத்தனூருக்குச் சென்றிருந்தார். அங்கே அவர் ஒட்டக்கூத்தர் எடுப்பித்த சரஸ்வதி கோயிலில் எழுந்தருளியிருக்கும் சரஸ்வதி தேவியைத் தரிசித்தார். மனமுருகி தமது வேண்டுகோளை நிறைவேற்றுமாறு கலைமகளிடம் பின்வருமாறு இறைஞ்சினார்:

  "காவிரிபாய் சோணாட்டில் காமர் தமிழ்வாணர் 
  நாவிரிசீர்க் கூத்தனூர் நண்ணுற்ற - பாவையே
  தீர்க்கத் தொலையாத தீவினையேன் முத்தமிழ்நூல் 
  பார்க்கத் திருவருள்வைப் பாய்!'

  இங்ஙனம் தமிழ் நூல்களைத் தரிசிப்பதும், படிப்பதும், அவற்றை மிகச் செம்மையாகப் பதிப்பிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருந்தார் தமிழ்த் தாத்தா.

  "ஏடு'களையே தேடுகின்ற ஒருவருக்குத் தமிழ் ஏடுகளையே தேடுகின்ற ஒருவருக்கு, அந்த ஏட்டின் பெயர் - "ஏடு' என்பதன் பெயர், எந்தச் சொல்லின் வடிவத்தில் மாறியிருந்தாலும் அடையாளம் தெரிந்துவிடும். "தமிழ்த் தாத்தா'வுக்குக் காவிரியின் வடகரையிலுள்ள "திருப்பனந்தாள்' என்ற சோழநாட்டுத் திருத்தலம் ஏட்டின் பெயரையே - ஏட்டின் பொருளையே நினைவுபடுத்திற்று. "நினைவு மஞ்சரி' இரண்டாம் பாகத்தில் இதனை நினைவுகூர்கின்றார்.

  "பனந்தாள் என்றால் பனையேடு' என்று பொங்கிப் பெருகிய தமிழ்ப் பேரன்புடன் தெரிவிக்கின்றார். "பனந்தாள்' என்னும் அருஞ்சொல்லுக்கு உரிய "பனையேடு' என்னும் சிறப்புப் பொருளை புதிய செய்தியாகத்தான் தமிழ்த் தாத்தா வெளிப்படுத்தியிருக்கின்றார். ஏனெனில், தமிழ்ப் பேரகராதியிலும் "பனந்தாள்' என்னும் அருஞ்சொல்லுக்குப் "பனையேடு' என்னும் சிறப்புப்பொருள் - செம்பொருள் கொடுக்கப்படவில்லை.

  "நினைவு மஞ்சரி' இரண்டாம் பாகம், 17-ஆவது கட்டுரையான "சில ஊர்களைப் பற்றிய குறிப்புகள்' என்பதில், திருப்பனந்தாளின் இப்பெயர் விளக்கத்தைத்தான் அவர் முதன்முதலாகத் தெரிவித்து, அதன் பின்பே அத்திருத்தலத்தின் பிற வரலாறுகளையும் விளக்குகின்றார். இவ்வாறு ஐயரவர்களின் தனிப்பார்வைக்கே முதன்முதலாகப் புலப்பட்டதை "நினைவு மஞ்சரி'யில் உள்ளவாறு:  

  சில ஊர்களைப் பற்றிய குறிப்புகள் திருப்பனந்தாள்

  திருப்பனந்தாள் பலவகையிலும் விசேஷமான இடம். தமிழ் நூல்களையும், பிற நூல்களையும் தன்னகத்தே தாங்கிவந்த பனந்தாளின் (பனையேட்டின்) பெயரைக் கொண்டதே இவ்வூர் தமிழ் வளர்த்தற்குரியது என்பதற்கு அறிகுறியாகும்.

  இன்று: 28.04.2019  "தமிழ்த் தாத்தா'வின்  நினைவுநாள்

  kattana sevai