Enable Javscript for better performance
பாரதிதாசனின் வெளிவராத பாடல்!- Dinamani

சுடச்சுட

  
  tm2

   

  பாரதிதாசன் என்கிற கனக சுப்புரத்தினம் எழுதி வெளிவராத படைப்புகள் இன்னும் உள்ளன. அவை அவ்வப்போது கிடைத்தும் வருகின்றன. அண்மையில் கிடைத்த அவர் எழுதிய  தனிப்பாடல் ஒன்று  பாரதிதாசனின் கையெழுத்துப் படியாகவே, கவிஞர் புதுவைச் சிவம் சேகரிப்பில் இருந்து  கிடைத்திருக்கிறது. 

  1926-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், கவிஞர் புதுவைச் சிவம் சேகரிப்பிலிருந்து கிடைக்கப்பெற்று, தற்போது உண்மை வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. "தொண்டர் படைப்பாட்டு' இதுவரையிலும் கிடைக்கவில்லை. இப்படித் தொகுக்கப்பெற்ற வெளியீடுகளில் சேர்க்கப்படாமல் விடுபட்டுப்போன அல்லது நீக்கப்பட்ட சில பாடல்களும் உண்டு. அத்தகைய பாடல்களுள் ஒன்றுதான் இப்போது கிடைத்திருக்கும் இப்பாடல்.

  இப்பாடல் சிறுவர்கள் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டின் ஒருவகையாக, அதாவது அண்மைக் காலம் முன்புவரைகூடச் சிறுவர்கள் விளையாடிய "திருடன் - போலீசு' விளையாட்டை ஆடும் முறை பற்றிக் குறிப்பிடுகிறது. ராஜா, மந்திரி காலத்திலிருந்து இவ்விளையாட்டு விளையாடப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் இப்பாடலைப் பாரதிதாசன் அமைத்திருக்கிறார். 

  இரவில் ஒரு திருடனைப் பிடிக்கும் காவலன், அவனை ராஜா முன்பு நிறுத்தி விசாரணை முடிந்தபின் அடித்து போடுகிறான். இதுதான் விளையாட்டு. "விளையாடலாமா?' என்று கேட்கிறான் ஒரு பையன். அதன்படி விளையாட்டில் யார் யார் என்ன வேடம் என்று முடிவாகிறது. விளையாட்டுத் தொடங்கவும், சொன்ன மாதிரியே அனைவரும் விளையாட,  திருடனாய் நடித்தவன், காவலன் உண்மையாகவே அடித்ததாக அழுகிறான்.

  "சேவகன் அப்படித்தான் அடிப்பான்' என்று சேவகனாய் நடித்தவன் சொல்ல, "போடா அதுக்காக உண்மையாய் அடிக்கிறதா?' என்று கேட்கவும் நாடகம் (விளையாட்டு) முடிகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஏதோ சிறுவர் விளையாட்டை விவரிக்கும் ஒரு கவிதையைப் போல் தோன்றினாலும், இதில் இரண்டு கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்திருக்கிறார் பாரதிதாசன். 
  பாடலின் இறுதியில் இனிய நாடகம் முடிந்ததாகக் கூறிவிட்டு, இறுதி அடிகளாகக் "கனியின் சாரம் கருதத்தக்கதே!' என்று கவிதையை முடிக்கிறார். அதாவது, இக்கவிதை எனும் கனியின் சாரம் என்ன என்று கண்டுகொண்டால், அது கருதத்தக்கது என்கிறார். இப்பாடலின் சாரம்தான் என்ன? முதலில் பாடலைப் படிப்போம்.

  "ராஜா, மந்த்ரி, ராத்ரிலே திருட்றது,
  சேவகன் பாக்றது, திருடனெ இழுக்றது,
  திருடனெ அடிக்றது ஜெயில்லே போட்றது
  வர்ரியாடா என்றான் ஒரு சிறு குழந்தை.
  அந்த வித்துவான் அழகிய ஒரு கதை 
  எழுதி முடித்தான். இல்லையா சொல்வீர்.
  "நான்தான் ராஜா நீதான் சேவகனாம்
  நளினி திருடனாம் நடனம் மந்த்ரியாம்'
  நடிகர் நியமனம் நடந்து விட்டது.    
  திண்ணையில் அரசர் சென்றுட் கார்ந்தார்
  மந்த்ரி, அருகில் வணங்கி நின்றான்.
  திருடன் மூலையில் திருடு கின்றான்
  சேவன் அவனைச் சென்று பிடித்து
  நன்றாய் அடித்து நடநட என்றான்
  அரச ரிடத்தில் அனைவரும் வந்தனர்
  அரசர் ஏண்டா அங்கே திருட்னே
  என்று கேட்டார், இல்லிங்க என்றான்.
  சேவகன் பாத்தான் "ஜெயிலுக் குப்போ' 
  என்றதும், திருடனை இழுத்துக் கொண்டுபோய்
  பெஞ்சியின் அடியில் பிடித்துத் தள்ளினான்.
  உடல்வலியால் அவன் உண்மையாய் அழுதான்
  அடித்தவன் சேவகன் அப்ப டித்தான்
  அடிப்பான் என்னடா அழறியே என்றான்
  அழுபவன், போடா அடிக்றதா என்றான்
  இனிய நாடகம் முடிந்தது.
  கனியின் சாரம் கருதத் தக்கதே!

  1919-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் மாண்டேகு-செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தத்தின் வழியாக இந்தியர்களுக்கான தன்னாட்சி அமைத்துக் கொள்ளும் சட்டம் இயற்றப்பட்டாலுங்கூட, அப்போது தேர்தலில் பங்கேற்காமல் அதிகார வாய்ப்பினைத் தவறவிட்ட நிலையில், நேரடியாகப் பங்கேற்காமல் மாற்று உருவில் தேர்தலில் காங்கிரஸ் கலந்து கொண்டது.

  "இந்திய அரசாங்கச் சட்டம் - 1935'  அடுத்து நடைபெற்ற மாகாண சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்று அதிகாரப் பொறுப்புக்கு சுயராஜ்யப் போர்வையில் காங்கிரஸார் பிரிட்டிஷ் இந்திய சட்டமன்றங்களின் உள்ளே நுழைந்ததும், காங்கிரஸூக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே மூடுபனி போர்த்திய கள்ள உறவு இருப்பதாக இந்தியாவெங்கும் ஒரு கருத்து பரவியது. நான் அடிப்பதைப் போல் அடிக்கிறேன்; நீ அழுவதைப் போல் அழு என்ற வழக்குத்தொடரை இம்மாதிரியான  நடவடிக்கைகள் நினைவுபடுத்தின.

  சொல்லி வைத்து ஆடுகிற ஆட்டம்தானே, இதில் உண்மையாக எப்படி அடிக்கலாம்? என்று ஒரு சிறுவன் கேட்கவும், "சேவகன் அப்படித்தான் அடிப்பான்' என்று அடித்தவன் சொல்வதுமாக இக்கவிதையில், பாரதிதாசன் அமைத்திருப்பது மிகவும் நுட்பமான ஓர் அரசியல் மதிப்பீடே.

  காங்கிரஸ் கட்சியும், பிரிட்டிஷ் இந்திய அரசும், திருடன்-போலீசு ஆட்டம் ஆடுவதாகவும், அதையும் சிறுவர் விளையாட்டைப் போல் விளையாடுவதாகவும், அந்த விளையாட்டிலும் கூட, அவர்களுக்குள் உண்மையான சண்டை சில நேரம் மூண்டுவிடுவதையும், அச்சண்டையைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளாக பிரிட்டிஷ் இந்திய அரசியலும், சட்டமன்ற நடவடிக்கைகளும் அமைவதாகவும், அந்த விளையாட்டும், சண்டையும் கூட உண்மையானவை அல்ல என்ற கருத்திலும் இப்பாடலைப் பாரதிதாசன் அமைத்திருக்கிறார்.

  இறுதியில் "கனியின் சாரம் கருதத் தக்கதே' என்று முடிக்கிறார். "கனி நிகர் கதை' என்றும் எழுதி, அவரே அதை அடித்துத் திருத்தியுள்ளார். ஒரு சிறுவர் விளையாட்டில் இருந்து கருவைப் பெற்றுக்கொண்டு, அன்றைய நாட்டு நடப்பினை உள்ளுறை உவமமாக வைத்து எழுதப்பட்ட இப்பாடல் பாரதிதாசனின் கவித்துவத்திற்கும், அவருக்கே உரித்தான கிண்டலுக்கும் மிக அருமையான எடுத்துக்காட்டாகும். அதனால்தான், "கனி நிகர் கதை' என்று அவரே குறிப்பிடுகிறார்.

  "அந்த வித்துவான் அழகிய ஒரு கதை எழுதி முடித்தான். இல்லையா சொல்வீர்' என்று இதே கவிதையில் குறிப்பிடுவதன் மூலம், தான் எழுதியது ஒரு கவிதை மட்டும் அல்ல, அது ஒரு கதை என்று புரிந்துகொள்ள, இக்கண்ணி வெடிகளை இக்கவிதையில், அல்ல... அல்ல... இக்கதையில், புதைத்து வைத்துள்ளார் அந்த (பாரதிதாசன்) வித்துவான். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai