கவிதை - மொழி விளையாட்டு!

கவிதை மொழியால் ஆனது. அந்த மொழியைக் கவிதைக் கையாளும் முறைகளில் ஒன்றாகத் திருப்புரை அதாவது ஒரு சொல்லே ஒரு கவிதைக்குள் பல இடத்தில் அமைவது
கவிதை - மொழி விளையாட்டு!

கவிதை மொழியால் ஆனது. அந்த மொழியைக் கவிதைக் கையாளும் முறைகளில் ஒன்றாகத் திருப்புரை அதாவது ஒரு சொல்லே ஒரு கவிதைக்குள் பல இடத்தில் அமைவது ஒரு வகை விளையாட்டாகும். அதை அணி இலக்கணங்கள் "சொற்பொருள் பின் வருநிலை அணி' என்று பெயரிட்டுள்ளன.
தொல்காப்பியம் சொல் மட்டுமல்லாமல் எழுத்துகள் அதாவது, ஓர் இனத்தை (வல்லினம், மெல்லினம், குறில், நெடில்) திருப்புரையாக வருவதை "வண்ணம்' என்று பெயரிட்டு பல வகைப்படுத்தியதில் (செய்யுளியல்: 211-232) ஒன்றான ஏந்தல் வண்ணம் என்பது சொல் திருப்புரையைப் பற்றியது (சொல்லிய சொல்லே சொல்லியது நிற்கும் - செய்229). அந்த முறையில் திருக்குறளில் ஒரு சொல்லே திருப்புரையாகப் பல முறைகளில் அமைந்துள்ளது. மேலும், அவற்றில் சிலவற்றின் பொருள் மாறுபாடும், சீளரவு மாறுபாடும் அமைந்துள்ளதுடன், சீரளவு மாறுபாட்டில் "குறிப்புப் பொருள்' புதைந்துள்ளது. 
ஆறு தடவை வந்துள்ள குறள்: (பற்று) "பற்றுக பற்றற்றான்' (350). 
ஐந்து தடவை: (சொல்)= "சொல்லுக சொல்லில்' (200). பிற குறள்கள் (12, 645) 
நான்கு தடவை: (செல்வம்) "அருட்செல்வம் செல்வத்துட்' (241). பிற குறள்கள் (26,57, 236, 320, 623 முதலியன). மூன்று தடவை: (ஓடு) "கடல்ஓடா கால்வல்' (496). பிற குறள்கள் (50, 58, 105, 108, 1313, 1326, 1330 முதலியன). இரண்டு தடவை: 
(சுட்ட) "தீயினாற் சுட்டபுண்' (129). பிற குறள்கள் (1, 8, 20, 26, 31, 40, 53, 56, 61, 63, 119, 120 முதலியன). 
பொதுவாக ஒரு சொல் ஒரு பொருளை உணர்த்தும் என்பது பொது விதி. ஆனால், எல்லா உலக மொழிகளிலும் சில சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளில் பயன்படுத்துவதும், ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருப்பதும் இயல்பானதே. (தொல். உரியியல்.1.4-5). பிற மொழி இலக்கணங்களிலும் இவ்வகை பழங்காலத்திலிருந்தே வழக்கில் உள்ளது. மேலைநாட்டு மொழியியலார் 20-ஆம் நூற்றாண்டிலிருந்து பல பொருள் ஒரு சொல் பல்பொருண்மை (polysem) என்ற வகையைக் கண்டறிந்து, அது பேச்சு மொழியிலும் பழங்காலத்தில் இருந்த எழுத்து மொழியிலும் பயன்பட்டு வருகிறது என்று கூறி, அதை விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். 
அந்த வகையில், தொல்காப்பியம் பல்பொருண்மைச் சொல் என்று பொதுமைப்படுத்தாவிட்டாலும், அவர் கால வழக்கிலும் இரண்டு வினைச்சொற்கள் (வா, என்) இரண்டு பொருள்படுவதை உணர்ந்து, அவற்றுக்கிடையே ஒரு வகை உறவு இருப்பதைக் "குறிப்புரை' என்று குறிப்பிட்டு,
"வாரா மரபின் வரக்கூறுதலும்
என்னா மரபின் எனக் கூறுதலும்
அன்னவை எல்லாம் அவற்றவற்று இயலா
இன்ன என்னும் குறிப்புரை யாகும்' 
(தொல்.எச். 26)
என்று விளக்கியுள்ளது. "கானக நாடன் வரூஉம்' (அகநா.128.10), நேரடிச்செயல். மாறாக "அறத்தான் வருவதே இன்பம்' (குறள்.12) என்பதில் உண்டாகும் என்ற பொருள். அது ஒரு வகையான வருதல் என்ற முறையில் அமைந்ததே. சிறு என்பது "சிறுகை அளாவிய கூழ்' (குறள்.64). "சிறிய/ சின்ன' நேர்ப்பொருள். எனவே, அவை பல்பொருண்மைச் சொல்லே தவிர, பல பொருள் ஒரு சொல்லாகக் கொள்ள முடியாது. 
அந்த முறையில் திருக்குறளில் திருப்புரையாக வந்த சொற்களின் பொருண்மை: ஒரு சொல் ஒரு பொருள் = பற்று (350). இதுவே பெரும்பான்மை 12, 200, 241, 645. பல் பொருண்மை ஒரு சொல் - ஊறும் (தண்ணீர் ஊறுதல் - குறள்.396); மிகும்/ வளரும்' - ஊறும் அறிவு' ஒரு சொல் பல பொருள் - "எனல்' - என்று கூறாதே, "மகனெனல்'(குறள்.196). என்க / என்று கூறு, "மக்கட் பதடி யெனல்'. 
மேலே சுட்டிய குறளில் "எனல்' என்பது "மகனெனல்' என்று எதிர்ப்பொருளில் சீரின் பகுதியாகவும்; "பதடி+ எனல்' என்று உடன்பாட்டுப் பொருளில் தனிச் சீராகவும் அமைந்த சீரளவு மாறுபாடாகும். "மகன் எனல் ' (நல்லமகன் அல்ல) என்று சீரின் பகுதியாக இருப்பது அதிகம் பேசாதே என்றும், "பதடி (நெல்பதிர் ) எனல்' என்பதால் விளக்கமாக "நிறையப் பேசு' என்ற குறிப்புப் பொருளும் புதைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' (129)
இங்கும் "சுட்ட' என்பது பொருளும், சீரளவும் மாறுபட்டுள்ளன. "தீயினாற் சுட்டபுண்' என்பதில் சுட்ட இயல்புப்பொருள். "நாவினால் சுட்ட வடு' என்பது கொடிய சொற்களால் ஒருவர் மனத்தில் ஏற்பட்ட தாக்கம் என்ற உருவகப் பொருள். எனவே, இங்கு (நாவினால்) "சுட்ட' என்பது பல பொருண்மைச் சொல். "சுட்டபுண்' என்பது இயல்பானது என்பதால் சீரின் பகுதியாக உள்ளது. "நாவினால் சுட்ட வடு' என்பது செயற்கை என்பதால் பொருள் மாறுபாட்டோடு தனிச் சீராகவும் அமைந்துள்ளது. அதன் தாக்கமும் காலக்கெடுவும் அதிகம் என்பது "வடு' என்ற சொல்லாலும் உறுதியாகிறது. 
எனவே, பொருள் மாறுபாடும், அதன் தாக்கத்தின் ஆழமும் காலமும் மாறுபடுவதை, "சுட்ட' என்பது தனிச் சீராக அமைந்துள்ளது புலப்படுத்துகிறது. கவிதை- மொழி விளையாட்டு; கவிதைமொழி- விளையாட்டாகவும் 
அமையும். 

-முனைவர் செ.வை.சண்முகம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com