சுடச்சுட

  
  tm1

  அக்காலப் புலவர் பெருமக்கள், வள்ளல்கள், மன்னர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு இன்று நம்மிடையே செவிவழிக் கதைகளாக உலவும் வரலாற்றுப் புனைவுகளுக்கு வளம் சேர்க்கும் தரவுகளாகத் தனிப்பாடல்கள் அமைந்துள்ளன. அத்தகைய வரலாற்றுப் புனைவு ஒன்றின் சுருக்கத்தைக் காண்போம்.
  உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த பிற்காலச் சோழ மன்னருள் ஒருவன் விக்கிரமசோழன். அவனுடைய மகன் குமார குலோதுங்கன். அதே காலப் பகுதியில் கொற்கை நகரைக் கோநகராகக்கொண்டு பாண்டி மண்டலத்தைப் பரிபாலனம் செய்தவன் வரகுண பாண்டியன். விக்கிரமசோழன் தன் மைந்தனுக்குப் பாண்டியன் மகளை மணம் செய்து வைக்கிறான்.
  பாண்டியன் தன் மகளுக்குக் கொற்கை முத்து முதலான பல்வேறு சீதனங்களுடன் உயர்ந்த சீதனமாக, புகழேந்திப் புலவரையும் தன் மகளுக்குத் துணையாக உறையூருக்கு உடன் அனுப்பி வைக்கிறான். பாண்டியன் மகளுக்குப் பைந்தமிழ் பயிற்றுவித்த நல்லாசானாகவும், பண்பொழுக்கம் கற்பித்த ஞானத் தந்தையாகவும் விளங்கிய புகழேந்திப் புலவர், மன்னன் வேண்டுகோளை ஏற்று மகிழ்வுடன் செல்கிறார். களிப்பான நிகழ்வுடன் காலச்சக்கரம் இனிது சுழல்கிறது.
  ஒருநாள் மாலை நேரம். குமார குலோத்துங்கன் தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடுகிறான். வசந்த மண்டபத்தில் நடந்த அந்தப் போட்டி ஆட்டத்திற்குப் புலவர் புகழேந்தி நடுவராக அமர்ந்திருக்கிறார். தொடர்ந்து நடந்த ஐந்தாறு ஆட்டங்களிலும், பாண்டியன் மகளே வெற்றி பெறுகிறாள். மனைவியின் திறமையை ஏற்றுக்கொண்ட மன்னவன், அவளை மனதாரப் பாராட்டுகிறான். ஆட்டத்திற்கு நடுவராக விளங்கிய புகழேந்தி, அரசனுக்கு எடுத்துரைப்பது போல அரசியின் வெற்றியைப் பின்வருமாறு நயம்படப் புகழ்ந்து பேசுகிறார்.
  "சோழ வேந்தே! நீ பகைவர் மீது படைகொண்டு சென்று, போர்க்களங்களில் சேர அரசனது வில்லையும், பாண்டியனது மீனையும் பலமுறை அழித்து வென்றுள்ளாய். ஆனால், இன்று இந்த ஆடற்களத்தில் பெண்குலத்தின் பேரரசியான எங்கள் பாண்டிய குமாரியின் முகத்தில் அழகுற விளங்கும் இரண்டு புருவ விற்களும், விழி மீன்களும் நின்னை வீழ்த்தி வெற்றிகொண்டு விட்டனவே! ஆதலால், வெற்றியும் தோல்வியும் எவருக்கும் மாறி மாறி வருவன என்னும் உலகியல் உண்மையை உணர்வாயாக!'

  "பழியும் புகழும் எவர்க்கும் உண்டாம்
      இந்தப் பாரில் உனக்கு
  அழியும் சிலையும் கயலுமென்றோ
      அகளங்க துங்க!
  மொழியும் பொழுதெங்கள் பெண் 
      சக்கரவர்த்தி முகத்திரண்டு
  விழியும் புருவமும் ஆகிஇப்
       போதுன்னை வெல்கின்றனவே!'  

  இப்பாடலில், "அமர்களம் பலவென்ற அரசனான நீ, உன் அழகிய மனையாளிடம் தோற்றாயே!' என்னும் அங்கதப் பொருள் தொனித்தாலும், "சோழன் போர்க்களத்தில் தன் பகைவர்களுக்குக் கடியவன்! ஆனால், தன் அன்பு மனைவியின் அழகுக்கு அடியவன்' என்னும் "புகழாப் புகழ்ச்சி அணி'யின் தாக்கமும்  பொதிந்து நின்று பொலிவு செய்கிறது! 
  "பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி' என்பது தண்டியின் சூத்திரம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai