சுடச்சுட

  
  tm2

   

  அண்மையில் வெளிவந்த ஒரு கவிதை நூலில் அப்பாவைப் பற்றியும், அம்மாவைப் பற்றியும் தனித்தனியாக இரு கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அப்பாவைப் பற்றிய கவிதையில் அப்பாவை "அவர்' என்றும்,  அவர் ஆற்றும் வினைகளை "ஆர்'  விகுதி போட்டும்;  அம்மாவைப் பற்றிய கவிதையில் அம்மாவை "அவள்' என்றும், அவர் செய்யும் வினைகளை "ஆள்'என்ற விகுதி இட்டும் எழுதப்பட்டுள்ளது. 
  காலம் காலமாகவே "அப்பா வந்தார்' என்றும், "அம்மா வந்தாள்' என்றுதான் எழுதுகின்றனர். ஏன் இப்படி? அன், ஆன், மான், ன் ஆகியவை ஆண்பால் விகுதிகள்.  
  அள், ஆள், இ, ள் ஆகியவை பெண்பால் விகுதிகள். இவை ஒருமையைச் சுட்டுவன. அர், ஆர், இர், ர், மார், கள் ஆகியவை உயர்திணைப் பலர்பால் விகுதிகள். இவை  பன்மையைச் சுட்டுவன. 
  அப்பா -ஆண்பால்; அம்மா - பெண்பால். அப்படி இருந்தாலும் மரியாதைப் பன்மை காரணமாக அம்மா, அப்பா ஆகியோர் உயர்திணைப் பலர்பால் ஆவர். அவர்கள் ஆற்றும் வினைகள் யாவும் பலர்பால் வினைமுற்றுகளிலேயே முடிய வேண்டும். 
  அதன்படி, "அப்பா வந்தார்'  என்று உயர்திணைப் பலர்பால் வினைமுற்றில் வினையை முடித்தல் சரிதான். அதேபோல் "அம்மா வந்தார்' என்றுதானே எழுத வேண்டும்? ஆனால், பெரும்பாலும் "அம்மா வந்தாள்' என்றே பலரும் எழுதுகின்றனர். பேச்சுவழக்காக அப்படி எழுதினர் என்றால், அமைதி கொள்ளலாம்; ஆனால், தெளிந்த நடையில் எழுதும்போதும்"அம்மா வந்தாள்' என்றே எழுதுகின்றனரே... ஏன்? 
  பெண்பால் ஒருமையில் "அம்மா வந்தாள்' என எழுதுவதில் தவறில்லை என்று அவர்கள் சொல்லக்கூடும். அப்படியானால், ஆண்பால் ஒருமையில் "அப்பா வந்தான்' என்று அவர்கள் எழுதுவார்களா? ஏன் எழுதுவதில்லை? இதுவரை அப்படி யாரும் எழுதியதாகவும் தெரியவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? உயர்திணைப் பலர்பால் வகைப்பாட்டில் வந்தபோதும், ஆண்பாலுக்குத் தருகிற மதிப்பு, பெண்பாலுக்கு மறுக்கப்பட்டுள்ளது. 
  அகவையில் குறைந்தோரும் தங்களை அவன், இவன், அவள், இவள் எனக் குறிப்பிடுவதை விரும்புவதில்லை. அவர்களும் மரியாதையை எதிர்பார்க்கின்றனர். அகவையில் மூத்த அம்மாவை "அவர்' என்று குறித்தலே இன்றைய மொழிநாகரிகம் ஆகும். 
  "அவன்' என்றாலும், "அவள்' என்றாலும் மரியாதை நிமித்தமாக அவர் என்றே வழங்குவது மரியாதையும் பண்பாடும் ஆகும். நம் இலக்கணப்படி அவர் எனும் சொல் பன்மை என்றாலும், ஒருமையில் வருகிறபோது, அச்சொல் மரியாதைப் பன்மையாகக் கருதப்படுகிறது. 
  அர், ஆர் விகுதிகளுக்காகக்கூடப் பெண்கள் போராடத்தான் வேண்டுமா என்ன? இலக்கணம் நமக்குச் சொல்லித் தருகிறது, அம்மாவை மதிக்க! இலக்கணத்தையும் அம்மாவையும் மதித்து நடப்போமே...!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai