இந்த வார கலாரசிகன்

கடந்த திங்கள்கிழமை,  ஈரோடு புத்தகத் திருவிழாவில் உரையாற்றச் சென்றிருந்தேன்.
இந்த வார கலாரசிகன்


கடந்த திங்கள்கிழமை,  ஈரோடு புத்தகத் திருவிழாவில் உரையாற்றச் சென்றிருந்தேன். நண்பர்கள் கவிஞர் இளைய பாரதி, எஸ்.ஆர்.சுப்பிரமணியன், ஸ்டாலின் குணசேகரன் ஆகியோரை சந்திக்க முடிந்தது என்றாலும், அவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போனதில் மிகவும் வருத்தம். புத்தக அரங்குகளைக்கூடச் சுற்றிப்பார்க்க முடியாமல், போன வேகத்தில் உரையாற்றிவிட்டுத் திரும்ப வேண்டிய  நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

ஸ்டாலின் குணசேகரனின் "விடுதலை வேள்வியில் தமிழகம்' புத்தகம் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகமும், தமிழர்களும் ஆற்றிய பங்களிப்பு உரிய முக்கியத்துவமும் பெறவில்லை, வரலாற்றில் பதிவு செய்யப்படவும் இல்லை என்கிற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு. தமிழகம் தேசிய நீரோட்டத்துடன் தொடர்பே இல்லாதது போன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

சுவாமி விவேகானந்தர் ஆனாலும், மகாத்மா காந்தியடிகளானாலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆனாலும், மகான் அரவிந்தர் ஆனாலும் அனைவருமே தமிழகத்தாலும், தமிழர்களாலும் ஈர்க்கப்பட்டவர்கள். தமிழகத்தின் தவிர்க்க முடியாத பங்களிப்பு  குறித்து தேசிய அளவிலும், தேசியத்திலிருந்து விலகியவர்கள் அல்ல  தமிழர்கள் என்பதை இன்றைய தமிழகத் தலைமுறையினருக்கும் நாம் உணர்த்தியாக வேண்டும். அந்தப் பணியை ஸ்டாலின் குணசேகரனின் "விடுதலை வேள்வியில் தமிழகம்' செய்து கொண்டிருக்கிறது.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் கவிஞர்பிச்சினிக்காடு இளங்கோவை சந்தித்தேன். புத்தகத் திருவிழாவுக்காக சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த இளங்கோ, "மக்கள் மனம்' என்கிற திங்களிதழ் ஒன்றை இந்த மாதம் முதல் தொடங்கி இருக்கிறார். அதன் பிரதியையும் தந்தார். 

ஈரோட்டிலிருந்து இரவில்  சென்னைக்கு ரயில் பயணம். உறக்கம் வரும்வரை "மக்கள் மனம்' என்னுடனும், நான் அதன் பக்கங்களுடனும் பயணித்தோம். சிங்கப்பூர் தமிழர்கள் எப்படியெல்லாம் தமிழ் வளர்க்கிறார்கள் என்பதை "மக்கள் மனம்' இதழ் எடுத்தியம்பியது.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  அந்த நாட்டின் தேசிய மொழிகளான சீனம், மலாய், தமிழ் ஆகிய மூன்று மொழிகளுக்கும் "தாய்மொழி மாதம்' கொண்டாடுகிறார்கள். 

அந்த ஒரு மாதம் முழுவதும் குழந்தைகளின் தாய்மொழிப் பற்றை வளர்க்கவும், தாய்மொழியில் தேர்ச்சி பெறவும் பல நிகழ்ச்சிகளை நடத்த அரசு உதவுகிறது. கவிதை, கவியரங்கு, பேச்சுப் பயிலரங்கு என்று நடத்தப்படுவதுடன், இலக்கிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. தாய்மொழியில் பேசுவதன் இன்றியமையாமை பிஞ்சு உள்ளங்களில் பதியம் போடப்படுகிறது.

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம்,  "நூல் வாசிப்பு விழா' என்ற ஒன்றை நடத்துகிறது. ஒரு வாரம் நடைபெறும் வாசிப்பு விழாவில், வாசிப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. 

பல்வேறு தலைப்புகளில், பல்வேறு இடங்களில் நடத்தப்படும் இந்த நிகழ்வுகளில் எழுத்தாளர்களை வாசகர்கள் நேரில் சந்தித்து உரையாட வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. 

புத்தகங்களையும், மின்னிலக்கப் பதிவுகளையும் வாசிப்போரின் எண்ணிக்கை  சிங்கப்பூரில் இரு மடங்காக உயர்ந்திருப்பதாக "மக்கள் மனம்' இதழிலுள்ள ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூரில் "கவிமாலை' என்றொரு அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் சார்பில், அவ்வப்போது சிங்கப்பூரில் உள்ள கவிஞர்களும் இலக்கியவாதிகளும் ஒரு பேருந்தை ஏற்பாடு செய்துகொண்டு கிளம்பி விடுகிறார்கள். நாள் முழுவதும் கவிதைக் கொண்டாட்டம்தான்.

பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகப் படகில் பயணித்து, கவிஞர்கள் மகாபலிபுரம் சென்ற நிகழ்வு நினைவுக்கு வருகிறது. 

அடுத்த முறை சிங்கப்பூர் சென்றால் கவிமாலைக் குழுவினருடன் பயணிக்கும் வாய்ப்புக்கு நான் இப்போதே பிச்சினிக்காடு இளங்கோவிடம் விண்ணப்பிக்கிறேன். 

சிங்கைக் கவிஞர்கள்போல, நமது சென்னைக்  கவிஞர்களும் அதுபோன்ற பயணமொன்றை மேற்கொண்டால் என்ன? டிசம்பர் மாத எட்டயபுரம் பாரதி விழாவுக்குச் செல்ல சொகுசுப் பேருந்தை ஏற்பாடு செய்ய "தினமணி' தயார். கவிஞர்கள் யார் யார் தயாராக இருக்கிறார்கள்?
சிங்கப்பூரைச் சுற்றிவந்த இன்பம் தந்தது "மக்கள் மனம்'.

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சி.பி.சரவணன் "தினமணி' நாளிதழின் இணையதள வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்.  அவர் எழுதியிருக்கும் புத்தகம்தான் "காவிரி ஒப்பந்தம்-புதைந்த உண்மைகள்'.

தமிழர்கள் நம் அனைவருக்குமே உள்ள நியாயமான அறச்சீற்றம் வழக்குரைஞர் சி.பி.சரவணனுக்கும் இருப்பதில் வியப்பில்லை.

"வறட்சிக் காலத்தில் தண்ணீரைத் திறந்து விடாவிட்டால், வெள்ளக் காலத்தில் தண்ணீரை அனுப்பாதே' என்கிற அவரது கோபத்தில் நியாயம் இருக்கிறது. நடைமுறை சாத்தியம் இல்லை.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த கடந்த 400 ஆண்டுகாலப் பிரச்னைகளையும், அது தொடர்பான ஒப்பந்தங்களின் பின்னணிகளையும் தமது புத்தகத்தில் பட்டியலிட்டுப் பிட்டுப் பிட்டு வைக்கிறார் சரவணன். காவிரிப் பிரச்னை தொடர்பான புரிதல் இல்லாதவருக்கு இந்த ஆவணப்பதிவு கையடக்க வழிகாட்டி. 

கடுமையான உழைப்புத் தெரிகிறது. பிரச்னை குறித்த புரிதலும் இருக்கிறது. ஆனால், சரவணன்  தரும் தீர்ப்புதான் நடைமுறை சாத்தியமில்லாதது. 

ஆனாலும், அந்தக் கேள்வியை உரக்க எழுப்பாமல் இருக்க அவரால் மட்டுமல்ல, நம்மாலும் முடியவில்லை.

சில புத்தகங்களையும்,  இதழ்களையும் அவசரமாகப் படித்து எடுத்து வைத்துவிடுவது உண்டு. பிறகு நேரம் கிடைக்கும்போது, சாவகாசமாக மாடு அசை போடுவது போல மீண்டும் படித்து ரசிப்பேன். 

கடந்த ஆண்டின் "காலச்சுவடு' புத்தாண்டுச் சிறப்பிதழை தற்செயலாக மீண்டும் எடுத்துப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் வெளிவந்திருக்கிறது கவிஞர் இசை எழுதிய "ஸ்டுபிட்ஸ்' என்கிற இந்தக் கவிதை.

அவ்வளவு பிரதானமான சாலையில்
அத்தனை ஆழமான பள்ளம் ஆகாதுதான்.
பேராசிரியர் நிலைகுலைந்து சரியப் போனார்
சுதாரித்துக் கடந்த பிறகு
காலூன்றி நின்று
சாலையைத் திரும்பிப் பார்த்தார்.
அதிகாரிகளைப் பார்த்தார்
அரசைப் பார்த்தார்
அமைச்சரைப் பார்த்தார்
முதல்வரை, பிரதமரைப் பார்த்தார்
அந்தப் பள்ளத்துள்
யார் யாரையெல்லாம்
பார்க்க முடியுமோ
அத்தனை பேரையும் பார்த்தார்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com